திட்டங்களுக்கு மறுவாழ்வு!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்ட

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
ரூ.20 ஆயிரம் கோடியில் சென்னை-பெங்களூரு விரைவு சாலை அமைக்கப்படும், முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும், தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் அதிநவீன பேருந்து நிலையங்களாக மாற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். 
ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளனவோ, அவற்றைப் பொருத்துத்தான் பொருளாதார வளர்ச்சி அமைகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தங்க நாற்கரச் சாலை, நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைப்பதிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது. அதற்குப் பிறகுதான் துறைமுகங்கள் பெரும் வளர்ச்சி கண்டன என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏற்றுமதி - இறக்குமதியில் சாலைக் கட்டமைப்பு அத்தியாவசியமானது.
திட்டப் பணிகளை அறிவித்தவுடனேயே, அது செயல்பாட்டுக்கு வந்துவிடாது. நிலம் கையகப்படுத்துதலில் இருந்து தொடங்குகிறது பிரச்னை. தேவையான நிலத்தைக் கையகப்படுத்த முடியாமல், பல்வேறு திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இதற்காக திட்ட வரைபடங்களும் மாற்றப்பட்டுள்ளன. நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், அதற்கே பல வருடங்கள் ஆகின்றன. இவற்றையெல்லாம் மீறி, திட்டப் பணிகளை ஆரம்பித்து, துரிதமாகச் செயல்படுத்தி வந்தாலும்கூட இடையே தடங்கல்கள், குறுக்கீடுகள். மூலப் பொருள்களின் விலை உயர்வு, நிதிப் பற்றாக்குறை, திட்ட மறுமதிப்பீடு என்று பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும்தான் ஒவ்வொரு திட்டமும் நகர்கிறது.
இதுபோன்று தற்போது நாடு முழுவதும் பல்வேறு துறைகளிலும் சுமார் 62,000 திட்டப் பணிகள் முடங்கியும், நடந்து கொண்டும் இருக்கின்றன என்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரத் துறை. அதாவது தொடக்க நிலையிலும் முடியும் தருவாயிலும் திட்டப் பணிகள் உள்ளன.
தற்போது தார் சாலைகள், நான்கு வழிச் சாலைகள், எக்ஸ்பிரஸ்வே சாலைகள் எனப் பல்வேறு வகையான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மத்திய அரசு ரூ.9 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. அதில் சாலைப் போக்குவரத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு மட்டும் சுமார் ரூ.7 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 83,000 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத் திட்டப் பணிகளில் செய்யப்படும் முதலீடு என்பது, பின்னாளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இப் பணிகளின் மூலம் அதிகமானோர் வேலைவாய்ப்புப் பெறுவர். இதன்மூலம், அந்நிய முதலீடு மற்றும் தனியார் முதலீடு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத் தொகையை அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு ஒதுக்கினால், வரும் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 1.2 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றபோது, ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூர சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். ஆனால், அவரது எண்ணம் பாதியளவுக்குக் கூட ஈடேறவில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. கடந்த மார்ச் மாதம் வரை ஒரு நாளைக்கு 23 கிலோமீட்டர் தூர அளவுக்கே சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்பார்த்த அளவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை.
அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் இன்றைய நிலை என்ன? முடங்கிக் கிடந்தால் அதற்கான காரணங்கள் என்ன? தொடர்ந்து நிறைவேற்றும் எண்ணம் இல்லையென்றால், அதை வெளிப்படையாக அறிவித்து முற்றுப்புள்ளி வைப்பதும், நிறைவேற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சியும் முனைப்பும் மேற்கொள்ளப்படுவது குறித்த முழு விவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும். முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதன் மூலம்தான், ஆட்சிக்கு மரியாதையும், நல்ல பெயரும் கிடைக்கும். 
மத்திய அரசில் இதற்கென்று புள்ளிவிவரத் துறையின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் மேற்பார்வை செய்ததற்கான துறை என்று பல்வேறு துறைகள் இயங்குகின்றன. இதற்காக தனி அமைச்சகம் செயல்படுகிறது. பிரதமர் அலுவலகத்திலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதைக் கவனிப்பதற்காக ஒரு துறை இயங்குகிறது. இவையெல்லாம் இருந்தால்கூட இந்தத் துறைகளுக்கும் பல்வேறு அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே முறையான தொடர்பு இல்லாமல்இருப்பதுதான் பல திட்டங்கள் முடங்கிக் கிடப்பதற்கு முக்கியமான காரணம்.
திட்டம் போடுவதிலும், அறிவிப்பதிலும் பயனில்லை. நிறைவேற்றுவதுதான் முக்கியம். முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு எப்போது, எப்படி மறுவாழ்வு அளிப்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com