சமநிலை மாறக் கூடாது!

சமநிலை இணையம் (நெட் நியூட்ராலிட்டி)

சமநிலை இணையம் (நெட் நியூட்ராலிட்டி) என்கிற கொள்கையைக் கைவிடுவது, அகற்றுவது என்று அமெரிக்கா முடிவெடுக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, சமநிலை இணையம் என்கிற கொள்கையில் மாற்றம் செய்யும் உத்தேசம் கிடையாது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமும் ஐயத்துக்கு இடமில்லாமல் உறுதி அளித்திருப்பது பாராட்டுக்குரிய முடிவு.
"இணையம் என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. எந்தவித வேறுபாடுமின்றி அனைவருக்கும் அதை பயன்படுத்தும் உரிமை உண்டு' என்று தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
சர்மா மட்டுமல்ல, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், இந்தப் பிரச்னையில் இந்தியா எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது என்றும், எல்லா விஷயங்களிலும் நாம் அமெரிக்காவைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. "சமநிலை இணையம்' என்பது, ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை போன்றது என்கிற அவரது கருத்து மிகச் சரியான புரிதல்.
"சமநிலை இணையம்' என்றால் என்ன என்று பலரும் குழம்புகிறார்கள். இப்போது, நமக்கு பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணையதள சேவையை வழங்கி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி நாம் இணையத் தொடர்புக்கான சேவையைப் பெற்றுவிட்டால், அதன் மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்புவதில் தொடங்கி, சுட்டுரை, கட்செவி அஞ்சல், முகநூல் என்று பல்வேறு பயன்பாடுகளைக் கையாள முடியும்.
சேவைக் கட்டணத்துக்குத் தகுந்தாற்போலக் குறிப்பிட்ட அளவிலான பதிவிறக்கங்களை நாம் செய்து கொள்ளலாம். அந்தப் பதிவிறக்கங்கள் எதுவாக இருந்தாலும், அதன் அளவுதான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, இன்னின்ன பதிவிறக்கத்திற்கு இவ்வளவு கட்டணம் என்று வசூலிக்கப்படுவதில்லை. நாம் மின்சார இணைப்பைப் பெற்றுவிட்டால், மின் விளக்கோ, மின் விசிறியோ, குளிர்சாதனமோ, மின் அடுப்போ எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் அளவுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, இன்ன பயன்பாட்டுக்கு இவ்வளவு கட்டணம் என்று வரையறுக்கப்படுவதில்லை. அதேபோலத்தான் இப்போது இணைய சேவையும் வழங்கப்படுகிறது. இதைத்தான் "சமநிலை இணையம்' என்கிறோம்.
"கட்செவி அஞ்சல்' வந்த பிறகு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாய் பெரிதாகப் பாதிக்கப்பட்டது. குறுஞ்செய்தி அனுப்புவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், வாடிக்கையாளர்கள் "கட்செவி அஞ்சலை'ப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். வெளிநாடுகளுக்குச் செல்லிடப்பேசியில் பேசினால் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது என்பதால், பெரும்பாலோர் கட்செவி அஞ்சலில் பேசத் தொடங்கிவிட்டனர். அதேபோல, "காயல்' (ஸ்கைப்) வந்த பிறகு வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் தனித்தனியாக எந்தவிதக் கட்டணமும் கிடையாது.
மிகப் பெரிய முதலீட்டில் செல்லிடப்பேசி கோபுரங்களையும், தொலைத்தொடர்புக்கான கட்டமைப்பையும் செய்திருப்பதாகவும், அதற்கும் மேலே அரசுக்கும் அலைக்கற்றை அனுமதிக்காகப் பெரும் பணம் தந்திருப்பதாகவும் புலம்புகின்றன தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள். தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வருவாயை எல்லாம், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் கெடுத்து விடுகின்றன என்பதுதான் அவர்களது எதிர்ப்புக்குக் காரணம்.
இணையதள சேவைக்கு என்று மொத்தமாக ஒரு கட்டணம் பெறுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சேவைக்கும் அதனதன் பயன்பாட்டுக்குத் தக்கபடி தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதுதான் சேவை நிறுவனங்களின் வாதம். அதாவது, தொலைக்காட்சி அலைவரிசைகளில் சிலவற்றை இலவசமாகவும், சிலவற்றைக் கட்டணம் செலுத்தியும் பார்ப்பதுபோல, மின்னஞ்சல் உள்ளிட்டவை இலவசமாகவும், கட்செவி அஞ்சல், முகநூல், காயல் போன்றவை கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு "இணையம்' ஒரு வரப்பிரசாதம். இதன்மூலம் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தட்டிக் கேட்கப்படுகின்றன. தகவல் பரிமாற்றம் மூலம் தூர இடைவெளி அகற்றப்பட்டு வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது.
130 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 50 கோடி இணைய இணைப்புகள் இருக்கின்றன. அதாவது, 33 சதவீதம் பேர் மட்டுமே இணையத்தால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். "சமநிலை இணையம்' மறுக்கப்பட்டால் இந்தியர்கள் அனைவரையும் இணையத்தில் இணைப்பதற்குப் பல ஆண்டுகளாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் பல சிறிய நிறுவனங்கள் அழிக்கப்படுவதற்கும் "சமநிலை இணையம்' இல்லாமல் போவது வசதியாக இருக்கும்.
இன்றைய உலகத்தில் அனைவருக்குமான பொதுவெளி இணையம்தான். இது கட்டணம் வசூலிப்பதற்கான நெடுஞ்சாலையோ, ரயில் தண்டவாளமோ அல்ல. காரணம், அவற்றுக்கு அரசு உரிமை கோருவதுபோல, உலகத்துக்குப் பொதுவான இணையத்துக்கு எந்தவோர் அரசோ, நாடோ சொந்தம் கொண்டாட முடியாது. அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படாதவரை அதை யாரும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. இணையச் சேவைக்கான சமநிலை மாறக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com