சீனாவின் சமரச முயற்சி!

மியான்மரின் ராக்கைன் பகுதியில் வாழ்பவர்கள் வங்க மொழிபேசும்

மியான்மரின் ராக்கைன் பகுதியில் வாழ்பவர்கள் வங்க மொழிபேசும் ரோகிங்கயா முஸ்லிம்கள். இவர்களது பூர்வீகம் வங்கதேசமாக இருந்தாலும் நூற்றாண்டுகளாக மியான்மரில் வாழ்ந்து வருபவர்கள். ஆனாலும்கூட இவர்களுக்குக் குடியுரிமை வழங்காமல் மியான்மர் அரசு இரண்டாம்தர குடிமக்களாகவே இவர்களை வைத்திருக்கிறது.
தங்களது உரிமைக்காகப் போராட அரகன் ரோகிங்கயா பாதுகாப்புப் படை என்கிற தீவிரவாத அமைப்பு முற்பட்டது. அதைக் காரணம் காட்டி ரோகிங்கயாக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் களமிறங்கி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, ஆறு லட்சத்துக்கும் அதிகமான ரோகிங்கயா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்க தேசத்துக்கும் மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். 
ரோகிங்கயா பிரச்னையின் உச்சகட்டத்தின்போது கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மியான்மருக்கு விஜயம் செய்தார். ஆனால், மியான்மரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் குறித்து அவர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மியான்மர் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிற இந்தியாவின் பலவீனத்தை சீனா குறிவைத்துக் காயை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. 
கடந்த மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பெய்ஜிங்கின் சார்பில் ஒரு சமரசத் தீர்வை எடுத்துக்கொண்டு வங்கதேசத்துக்கும் மியான்மருக்கும் பயணித்தார். இரண்டு நாடுகளுமே சீனாவின் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
சீனாவின் மூன்று அம்ச சமரசத் தீர்வின் முதலாவது ஆலோசனை, உடனடியாக மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு வழிகோலுவது. அடுத்தகட்டமாக மியான்மர் மற்றும் வங்கதேச அரசுகள் சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் அகதிகள் பிரச்னைக்கு முடிவு காண்பது. இவை இரண்டையும் தொடர்ந்து மூன்றாவதாக, சர்வதேச நாடுகளின் உதவியுடன் ராக்கைன் பகுதியின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகோலுவது. சீனாவின் ஆலோசனை என்னவோ மிகவும் சரியானதாகவும் ஏற்புடையதாகவும்தான் தோன்றுகிறது. ஆனால், இதனடிப்படையில் அவ்வளவு சுலபமாகத் தடைகளும் எதிர்ப்புகளும் அகற்றப்பட்டு, சமாதானத்துக்கு வழிகோலிவிட முடியும் என்று தோன்றவில்லை.
மியான்மரின் ராணுவமும் ரோகிங்கயா தீவிரவாதக் குழுவான அரகன் ரோகிங்கயா பாதுகாப்புப் படையும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும் அதைச் செயல்பட விடாமல் தடுக்க வேறு பல சக்திகள் அங்கே உலவுகின்றன. ராக்கைன் பகுதியிலுள்ள ரோகிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை இந்த அளவுக்குத் தூண்டிவிட்டு ராணுவத்தின் உதவியுடன் இன அழிப்புக்குக் காரணம், அந்தப் பகுதியிலுள்ள ராக்கைன் பௌத்த மத தீவிரவாதக் குழுக்கள்தான். ராணுவம் அமைதி காத்தாலும் அவர்கள் ரோகிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவார்களா என்பது சந்தேகம்தான். அவர்களையும் ஒப்பந்தத்தில் உட்படுத்துவது மிகவும் முக்கியம்.
மியான்மர் ராணுவத்தின் தாக்குதல் ராக்கைன் பகுதியிலுள்ள ரோகிங்கயா தீவிரவாதிகள் மீதுதான் என்றாலும், அதனால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சாமானிய ரோகிங்கயா முஸ்லிம்களே. ஆறு லட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமான பேர் உயிருக்குப் பயந்து அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அடுத்தகட்டமாக மியான்மர் அரசும் வங்கதேச அரசும் அகதிகள் பிரச்னைக்கு முடிவு கண்டாக வேண்டும். இத்தனை லட்சம் அகதிகளைப் பராமரிப்பது என்பது எந்த ஓர் அரசுக்கும் மிகப்பெரிய சுமை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மியான்மர் அரசு அண்டைநாடுகளில் தஞ்சம் புகுந்த ரோகிங்கயா முஸ்லிம்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றவில்லை.
முதல் இரண்டு அம்சங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும்கூட மூன்றாவது அம்சமான ராக்கைன் பகுதியின் பொருளாதார வளர்ச்சி அவ்வளவு சுலபமல்ல. ரோகிங்கயாக்களின் பிரச்னை வறுமை மட்டுமே அல்ல. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும், மியான்மர் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும்தான். நாடில்லா அகதிகளாக ரோகிங்கயாக்கள் இருக்கும் நிலைமைதான் பிரச்னையின் அடிப்படை. அவர்களது உரிமை உறுதிப்படுத்தப்படாதவரை ராக்கைன் பகுதியில் அமைதி ஏற்படுவது சந்தேகம்தான்.
இந்தப் பிரச்னையில் சீனா ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் பொருளாதாரக் கண்ணோட்டம் இருக்கிறது. சீனா உருவாக்க நினைக்கும் சர்வதேச நெடுஞ்சாலை ராக்கைன் பகுதி வழியாகச் செல்கிறது. அந்தப் பகுதியில் 7.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.47,085 கோடி) செலவில் துறைமுகம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2.45 பில்லியன் டாலர் (ரூ. 15,802 கோடி) செலவில் சீனாவின் யுன்னான் பகுதியை அந்தத் துறைமுகத்துடன் இணைக்கும் கச்சா எண்ணெய்க் குழாய்களை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது. ராக்கைன் பகுதியில் நிலவும் அமைதியின்மை சீனாவைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கிறது என்பதால்தான் சீனா இந்தப் பிரச்னையில் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட முற்பட்டிருக்கிறது.
சீனாவைப் போலவே இந்தியாவுக்கும் ராக்கைன் பகுதியில் அமைதி நிலவுவதில் அக்கறை உண்டு. மியான்மர் அரசின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரோகிங்கயாக்களைக் குடிமக்களாக அங்கீகரித்து சம உரிமை அளித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். அதற்கு இந்தியாவும் முயற்சி எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com