அழுத்தம் அகல வேண்டும்!

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சத்தீஸ்கர்

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் மத்தியில் இதுபோல தற்கொலைகள் அதிகரித்து வருவது, ஒட்டுமொத்த ராணுவத்தையே அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்த ஆண்டில்தான் இந்த அளவு தற்கொலைகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
2007 முதல் 2010 வரையிலான மூன்று ஆண்டுகளில் மத்தியப் பாதுகாப்பு வீரர்கள் 368 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதே காலகட்டத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 208 மட்டும்தான். பாதுகாப்புப் படையினர் தற்கொலை செய்து கொள்வது என்பது புதிதல்ல. இந்த ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான் கவலையளிக்கிறது.
இது குறித்து மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. கடந்த ஆண்டு மாநிலங்களவையில் பாதுகாப்புப் படையினர் மத்தியில் தற்கொலை மனோநிலை அதிகரித்து வருவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், 2014-இல் 109 பேரும், 2015-இல் 97 பேரும், 2016-இல் 82 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் மத்தியில் மட்டுமல்ல, இந்திய ராணுவத்திலும் இதேபோல வீரர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது குறித்த புள்ளிவிவரம் ஒன்று 2014-இல் வெளியிடப்பட்டது. 2011-இல் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் ராணுவம் 362 வீரர்களையும், விமானப்படை 76 விமானிகளையும், கடற்படை 11 மாலுமிகளையும் தற்கொலைக்கு பலி கொடுத்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2016-இல் மட்டும் 125 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 19 பேர் விமானப் படையையும், 5 பேர் கடற்படையையும் சேர்ந்தவர்கள். இதுமட்டுமல்லாமல், ராணுவ முகாம்களில் நடந்த கைகலப்பில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2014 ஜனவரி முதல் 2017 மார்ச் மாதம் வரையிலான இடைவெளியில், பணியில் இருக்கும்போது 348 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 276 பேர் காலாட்படையையும், 12 பேர் கடற்படையையும், 6 பேர் விமானப்படையையும் சார்ந்தவர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 597 வீரர்களை நாம் தற்கொலையால் இழந்திருக்கிறோம்.
மூன்று நாள்களுக்கு ஒருமுறை, ஒரு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்கிறார். அவர்களது தனிப்பட்ட பிரச்னைகள்தான் அதற்குக் காரணம் என்பது பாதுகாப்பு அமைச்சகம் தரும் விளக்கம். பணியில் இருக்கும்போது, சொந்த ஊரில் அவர்களது குடும்பம் எதிர்கொள்ளும் நிலத்தகராறு குறித்த பிரச்னைகளும், உள்ளூரில் அரசு நிர்வாகம் தங்கள் குடும்பத்தினர் மீது காட்டும் பாராமுகமும்தான் அதற்குக் காரணம் என்றுகூறி கோப்புகள் மூடப்பட்டு விடுகின்றன.
பாதுகாப்புப் படையினரும், ராணுவ வீரர்களும் எதிரிகளை நோக்கிச் சுட வேண்டிய துப்பாக்கிகளால் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ளும் அவலத்துக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குடும்பப் பிரச்னைகள் அவற்றில் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதுமட்டுமே காரணமல்ல.
பணிச்சுமை, அதிகரித்த வேலை நேரம், மன அழுத்தம், எல்லாவற்றிற்கும் மேலாகக் காரணமில்லாமல் தாங்கள் ஆபத்தான தாக்குதல்களில் ஈடுபடுத்தப்படுகிறோம் என்கிற மனக்குமுறல் ஆகியவையும் காரணம் என்று கூறப்படுகிறது. போரிட்டு மறைவதைவிட அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்களது மனநிலை பாதிப்புதான் காரணம் என்பதைப் பல அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள்.
தகவல் தொலைத்தொடர்பு பெரும்பாலான படைவீரர்களைத் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க உதவுகிறது. அதேநேரத்தில், குடும்பத்திலும், ஊரிலும் நடக்கும் பிரச்னைகள் உடனடியாகத் தெரிந்துவிடுவது சிலருக்கு அதிகரித்த குடும்ப ஞாபகத்தை ஏற்படுத்துவதாகவும், பிரச்னைகளின் தாக்கத்தால் மன அமைதி குலைவதாகவும் கூறப்படுகிறது.
2014-இல் இந்திய ராணுவ மருத்துவ ஜர்னல் நடத்திய ஆய்வில், 96% ராணுவ வீரர்கள் தங்களது மனநிலை ரீதியிலான பிரச்னைகள் குறித்து ஆலோசனை பெறவோ, பகிர்ந்து கொள்ளவோ விரும்பவில்லை என்று தெரிகிறது. ராணுவ வீரர்களானாலும் சரி, துணை ராணுவ படையினரானாலும் சரி, அவர்களது உடல்நலம் குறித்துத் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது உடல்நலம் பேணப்படுகிறது. ஆனால், தேர்ந்த மனநல மருத்துவர்களின் உதவியுடன் ராணுவ வீரர்களுக்கு உடல்நலத்தைப் போலவே மனநலம் குறித்த பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றனவா என்றால் இல்லை. ராணுவ வீரர்கள் மத்தியில் அதிகரித்துவரும் தற்கொலை மனோபாவத்துக்கு இதுகூடக் காரணம்.
இவையெல்லாம், முறையான மனநல மருத்துவர்களின் ஆலோசனையும், "கவுன்சலிங்' என்று சொல்லப்படும் "தீர்வுகாணும்' முறையும் உறுதிப்படுத்தப்பட்டால், தீர்த்து வைக்கப்படக் கூடியவைதான். வீரர்களின் உடல்நலத்துக்குச் செலவிடுவதுபோல, மனநலம் பேணுதலுக்கும் இந்திய ராணுவம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும். ஆயிரம் குடிமக்களை தேசம் இழந்தாலும், ஒரு ராணுவ வீரரை இழக்கக்கூடாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com