நம்மைச் சுற்றும் ஆபத்து!

தெற்காசியாவிலுள்ள நமது அண்டை நாடுகளுடனான நட்புறவு

தெற்காசியாவிலுள்ள நமது அண்டை நாடுகளுடனான நட்புறவு பலவீனப்பட்டு வருகிறது என்பதைத்தான் சமீபத்தில் சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது.நம்மிடமிருந்து மாலத்தீவு விலகிப்போகிறது என்பதையும், சார்க் அணியின் மிகச்சிறிய நாடான மாலத்தீவைக்கூட சீனாவின் நட்புறவு வளையத்தில் சிக்கவிடாமல் நம்மால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும்தான் இது வெளிப்படுத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளாத ஒரே நாடு மாலத்தீவுதான். 2015 மார்ச் மாதம் அவர் மாலத்தீவுகளின் தலைநகரான மாலேவுக்கு செல்வதாக இருந்து, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுகிறது என்பதல்ல நமது கவலை. அந்த ஒப்பந்தம் மாலத்தீவின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் விதம்தான் அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி மாலத்தீவின் நாடாளுமன்றம் அவசரஅவசரமாகக் கூட்டப்பட்டது. நாடாளுமன்றத்தில் சீனாவுடனான ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டு, தேசியப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு அந்த 777 பக்க அறிக்கை அனுப்பப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் நாடாளுமன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. அதேநாளில் அந்த ஒப்பந்தம் மாலத்தீவுகளின் 85 உறுப்பினர்கள் கொண்ட மஜ்லீஸ் என்கிற நாடாளுமன்றத்தின் 30 உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்ததும் ஆளும் கட்சிக்குச் சாதகமாகிவிட்டது.
இந்த மாதக் கடைசியில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் சீனாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்வதுகூட இப்படி அவசரஅவசரமாக இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான முகமது நஷீத் நாடாளுமன்றம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதால் இந்த ஒப்பந்தம் தாற்காலிகமாக முடக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் குறித்து பரவலான விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தம் மாலத்தீவின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் ஏற்றதுதானா என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்பது முன்னரே தெரியும். 2015 ஜூலை மாதம் மாலத்தீவின் அரசமைப்புச் சட்டத்தில் அவசரஅவசரமாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி வெளிநாட்டவர்கள் மாலத்தீவில் அசையாச் சொத்துகள் வாங்குவது அனுமதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.
அப்போதே இந்தியா விழித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இந்துமகாக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிதான் இது என்பதை நாம் உணராமல் விட்டுவிட்டோமா அல்லது நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகம் அதைத் தடுக்க முடியாமல் போய்விட்டதா என்று தெரியவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகரீதியான நட்புறவும் நெருக்கமும் வணிக அளவுடன் நின்றுவிடுவதில்லை. காப்பீடு, மருத்துவம், தொலைத்தொடர்பு, கல்வி, நீதித் துறை என்று சேவைத் துறையிலும் மாலத்தீவில் சீனா செயல்பட இந்த ஒப்பந்தம் வழிகோலுகிறது. இந்த ஒப்பந்தம் இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாலத்தீவின் பாதுகாப்பில்கூட சீனாவுக்கு மிகப்பெரிய பங்கு ஏற்படக்கூடும்.
மாலத்தீவுடன் மட்டுமல்ல, இந்தியாவைச் சுற்றியுள்ள நமது அண்டை நாடுகள் அனைத்துடனும் சீனா தனது நெருக்கத்தை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஜிபோதியில் மிகப்பெரிய ராணுவத்தளத்தை அமைத்திருக்கும் சீனா, பாகிஸ்தானிலுள்ள குவேதார், இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைப்பதிலும் ஈடுபட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மாலே துறைமுகத்தில் மூன்று சீன கடற்படைக் கப்பல்கள் நங்கூரமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலே தீவுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்புப் பணிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பல சீன நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய முற்பட்டிருக்கின்றன. 
மாலத்தீவுகளுடன் மட்டுமல்ல, சீனா ஏற்கெனவே பாகிஸ்தானுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுடனும் இதேபோல ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
அப்துல்லா யாமீன் அரசின் மீன்வளத் துறை அமைச்சர் சமீபத்தில் கொழும்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளிப்படையாகவே இந்தியாவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு இந்தியா ஆதரவு அளித்ததுதான் இப்போதைய யாமீன் அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதன் காரணம்.
இந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை அண்டை நாடுகளும் சீனாவின் நட்பு நாடுகளாக மாறுவது ஆபத்தின் அறிகுறி. எங்கேயோ இருக்கும் அமெரிக்காவையும், ஜப்பானையும், ஆஸ்திரேலியாவையும் நம்பி அண்டை நாடுகளுடனான நமது உறவைத் தக்க வைத்துக் கொள்ளாமல் இருப்பது சரியான ராஜ தந்திரமாகாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com