ஏன் தயக்கம்?

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தின்

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தின் தென்கோடிப் பகுதியைத் தாக்கிய ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களும் இந்தப் புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தாய்லாந்துக்கு அருகில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வங்காள விரிகுடாக் கடலில் தீவிரமடைந்து, நவம்பர் 29-ஆம் தேதி இலங்கையையும் நவம்பர் 30-ஆம் தேதி திருவனந்தபுரம், கன்னியாகுமரி பகுதிகளையும் தாக்கியது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் சரிந்தன. கேரளத்தைச் சேர்ந்த 98 மீனவர்களையும் தமிழகத்தைச் சேர்ந்த 78 மீனவர்களையும் சேர்த்தால் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒக்கி புயலில் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிப்பவர்கள். நூறு மைலுக்கு அப்பால்கூடச் சென்று அரபிக் கடலிலும் இந்து மகா சமுத்திரத்திலும் மீன் பிடிப்பவர்கள். பாக். ஜலசந்தியில் மீன் பிடித்துவிட்டு, அதேநாளில் கரைக்குத் திரும்புவது தமிழகத்தின் கிழக்குக் கரையோர மீனவர்களின் வழக்கம் என்றால், குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டுப் பல நாள்கள் கழித்துத் திரும்புபவர்கள். சில நிகழ்வுகளில் மாதக்கணக்கில் கடலில் இருப்பார்கள். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள சில தீவுகளில் கரை ஒதுங்கிப் பிறகு புறப்பட்டு வருவதும் உண்டு.
அதுபோல மீன் பிடிக்க பலர் கடலுக்குச் சென்றிருந்தபோதுதான் ஒக்கி புயல் தாக்கியது. கடலுக்குள் சென்றிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டனர். சிலர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும்கூட 472 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் முயற்சியில் கடலோரக் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையில் வெறும் 200 கடல் மைல்கள்தான் என்றால் அந்தப் பகுதியைத் தாண்டி ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள். இந்தியக் கடல் எல்லைக்குள் தேடுவதால் மட்டும் காணாமல்போன இவர்களை மீட்டுவிட முடியாது. இந்து மகா சமுத்திரத்திலும் அரபிக் கடலிலும் இருக்கும் பல ஆளில்லா தீவுகளில் அவர்கள் கரை ஒதுங்கியிருக்கக்கூடும்.
மொராக்கோ, மாலத்தீவு போன்ற நாடுகளைச் சுற்றிப் பல குட்டித்தீவுகள் காணப்படுகின்றன. குமரி மாவட்ட மீனவர்கள் அந்தத் தீவுகளுக்கு மீன் பிடிக்கப் போவது புதிதல்ல. ஆகவே, நம் கடலோரக் காவல்துறையினரின் கப்பல்களும்,ஹெலிகாப்டர், விமானங்களும் அதுபோன்ற ஆளில்லா தீவுகளிலும் மீனவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டும்.
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், இவர்களைத் தொடர்ந்து இப்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் குமரி மாவட்டத்திற்குச் சென்று பாதிப்புகளை நேரில் கண்டறிந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
கேரளத்தில் அறிவித்திருப்பதுபோல, தமிழகத்திலும் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும், உயிரிழந்தவர்களின் வாரிசுகளில் தகுதியானவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடிந்தால்தான் அடுத்தகட்ட நிவாரணம் குறித்து அரசு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
இதுபோன்ற பேரிடர்கள் வரும்போது பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் இறங்குவது என்பது புதிதல்ல. மீனவர்களுக்கு நேர்ந்த பாதிப்பில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதும் புதிதொன்றுமல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மறியல், ரயில் மறியல், போராட்டம் என்று நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட 13,815 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் பல கிறிஸ்தவ பாதிரியார்களும் இருக்கிறார்கள். போராட்டத்தை நிறுத்துவதற்காக வழக்குப் பதிவு செய்து பயமுறுத்துவது நிர்வாகரீதியாக எந்த அளவுக்குச் சரியோ, அதே அளவு மனிதாபிமானத்துடன் போராட்டக்காரர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு வழக்குகளைத் திரும்பப் பெறுவதுதான் மாநில அரசுக்குப் பெருமை தரும்.
இதுபோன்ற பேரிடர் வரும் என்பதை உணர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது வியப்பை அளிக்கிறது. இப்போது உலக வங்கியிடம் நிதி பெற்று 300 அடி உயரத்தில் கடற்கரையில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு "வாக்கிடாக்கி' வழங்கும் திட்டத்தை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது? இனிமேலும் அரசு தாமதிக்காமல், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் வாக்கிடாக்கி வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோல, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும், உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் இருக்கும் ப. சிதம்பரம் இந்தப் பிரச்னை குறித்து எதுவும் கூறாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. இந்தப் பாதிப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிர்ந்துகொள்வது கடமை என்று அனுபவசாலியான அவர் ஏன் உணரவில்லை?
மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒக்கி புயல் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு ஏன் இன்னும் தயங்குகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com