வறுமையால் நோய்; நோயால் வறுமை!

உலக வங்கியும் உலக சுகாதார நிறுவனமும்

உலக வங்கியும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து சர்வதேச அளவிலான மருத்துவக் காப்பீடு குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி உலகில் ஆண்டுதோறும் பத்து கோடிப்பேர் மருத்துவத்துக்கான செலவினங்களால் கடனாளியாகின்றனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கிறது அந்த அறிக்கை. 
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் ஒன்றும் ஏறத்தாழ இதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், ஏறத்தாழ 6.3 கோடிப் பேர் மருத்துவத் தேவைகளால் வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்து கடனாளியாகிறார்கள். உலகளாவிய அளவிலும் இந்தியாவிலும் அதிகரித்துவரும் மருத்துவச் செலவினங்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
"லேன்செட்' என்கிற மருத்துவ இதழ், சர்வதேச மருத்துவக் காப்பீடு குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, ஏறத்தாழ 8 கோடிப்பேர் தங்களது வருமானத்தில் 10 விழுக்காடுக்கும் அதிகமாக மருத்துவத்துக்காகச் செலவு செய்கிறார்கள். ஏறத்தாழ 4.9 கோடிப் பேர் இந்தியாவில் மருத்துவச் செலவுகளால் பாதிக்கப்பட்டு கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. 
உலகில் 100 கோடிப் பேர்களுக்கும் மேல் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில், 20 கோடிக்கும் அதிகமான பெண்கள் முறையான குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கிறார்கள். ஏறத்தாழ 2 கோடி குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமலும் தடுப்பூசிகள் போடப்படாமலும் காணப்படுவதற்கு வறுமை மிக முக்கியமான காரணம். இந்தக் குழந்தைகள் டிப்தீரியா, டெட்டனஸ் உள்ளிட்ட பாதிப்புகளுக்காகத் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.
இந்திய மக்கள்தொகையில் 17.3% பேர்கள் அவர்களது மாத வருவாயில் 10 விழுக்காடு மருத்துவத்துக்காகச் செலவழிக்கிறார்கள். சுமார் 4 % பேர்கள் தங்களது மாத வருவாயில் 25 %-க்கும் அதிகமாக மருத்துவத்துக்காகச் செலவிடுகிறார்கள்.
மருத்துவத்திற்குத் தங்களது வருவாயில் பெரும்பகுதியைச் செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது ஏனைய அத்தியாவசியச் செலவுகளுக்கு அவர்களிடம் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. அதன் விளைவாக, அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றுக்காக நியாயமாகச் செலவிட வேண்டிய செலவினங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதனால் உடல் நிலையும் மன நிலையும் மேலும் பாதிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் மருத்துவச் சேவையிலும் சுகாதாரம் பேணலிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். ஆங்காங்கே பல கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் புற்றீசல்போலத் தோன்றினாலும்கூட, அனைவருக்கும் கல்வி என்பதுபோல் அனைவருக்கும் தரமான மருத்துவத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பத்தாயிரம் பேருக்கு 6.6 மருத்துவமனைகள்தான் இருக்கின்றன. மருத்துவர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால், ஆயிரம் பேருக்கு 0.7 என்கிற அளவில்தான் இந்தியாவில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அறுவைச்சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையோ, ஒரு லட்சம் பேருக்கு 2.6 என்கிற அளவில்தான் காணப்படுகிறது.
தனியார்மயம் வந்த பிறகு அரசு மருத்துவமனைகளின் விரிவாக்கத்தில் மாநில அரசுகள் அதிகம் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி வருகின்றன. அதனால் சாமானியனுக்குக் குறைந்த செலவில் அல்லது இலவசமாக மருத்துவ வசதி என்பது அநேகமாக இல்லை என்கிற நிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
2015-ஆம் ஆண்டு தேசிய சுகாதார அறிக்கையின்படி, ஏறத்தாழ 130 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 20,306 மருத்துவமனைகளும் 6,75,000 படுக்கை வசதிகளும்தான் காணப்படுகின்றன. இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வாழும் 70% பேருக்கு, மேலே குறிப்பிட்ட மருத்துவ வசதிகளில் மூன்றில் ஒரு பங்குதான் காணப்படுகின்றன. அரசு முதலீட்டில் மருத்துவமனைகளும் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்படுகின்றன என்றாலும்கூட, அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்படுகின்றனவா என்றால் கிடையாது.
இதன் காரணமாகத்தான் முறையான வசதிகள் இல்லாத நிலையிலும்கூட ஊரகப்புறங்களில் தனியார் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. மக்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவச் செலவினங்களால் பெரும்பாலானோர் கடனாளியாவதற்கும் வறுமைக்கோட்டுக்கீழே தள்ளப்படுவதற்கும் அரசு மருத்துவமனைகள் அதிகரிக்கப்படாமலும், தரம் மேம்படுத்தப்படாமலும் இருப்பதுதான் காரணம்.
அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு என்கிற திட்டத்தை மத்திய அரசு விரைவிலேயே கொண்டு வர இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் இதை ஏற்கெனவே நடைமுறைப்படுத்திவிட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தினால் தனியார் மருத்துவமனைகள் பயன் அடையும் அளவுக்கு நோயாளிகள் பயனடைகிறார்களா என்பது கேள்விக்குறி. காரணம், மருத்துவக் காப்பீட்டு சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசும் காப்பீட்டு நிறுவனங்களும் கட்டுப்படுத்துவதில்லை.
அதிகரித்த அரசு மருத்துவமனைகள், போதிய அளவில் தேர்ந்த மருத்துவர்கள், தரமான உள்கட்டமைப்பு வசதிகள், நவீன உபகரணங்கள் உள்ளிட்டவை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மருத்துவச் செலவால் மக்கள் கடனாளிகளாவது தடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com