தொடக்கம்தான்... முடிவல்ல!

குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள்

குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோரின் அமர்வின் முன்னால் விசாரணைக்கு வந்தது. நாடு தழுவிய அளவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அந்தத் திட்டம் குறித்தான விவரங்களையும் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் அந்த அமர்வு உத்தரவிட்டிருந்தது.
அதுபோன்ற சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மாநிலங்களிடம் நிதி ஆதாரம் இல்லாததைச் சுட்டிக்காட்டிய மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொள்ளவில்லை. விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசே தன்னுடைய சொந்தச் செலவில் அறிவிக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவின் விளைவுதான் இப்போது மத்திய அரசு இதற்கு அளித்திருக்கும் ஒப்புதல்.
இந்தச் சிறப்பு நீதிமன்றங்களுக்காக மத்திய அரசு ரூபாய் 7.8 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த நிதி, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரித்துத் தரப்படும். நிதி ஒதுக்கீடு தரப்பட்டவுடன் மாநில அரசுகள் உயர் நீதிமன்றங்களின் ஆலோசனைப்படி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அந்த நீதிமன்றங்கள் 2018 மார்ச் 1 முதல் செயல்படத் தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்தச் சிறப்பு நீதிமன்றங்களின் மூலம் ஓராண்டில் நூறு வழக்குகளிலாவது விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தனது கருத்தை நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகள் இருந்தால் அவற்றையெல்லாம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் 1,581 நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34% பேர் மீது கிரிமினல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றில் 20% கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள். சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுமானால் இந்தக் குற்றச்சாட்டுகள் விரைந்து விசாரிக்கப்பட்டு குற்றவாளியாக இருந்தால் அந்த உறுப்பினர் தண்டிக்கப்படுவார். அதனால் பதவி விலக நேரிடும். அதேபோல, அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே குற்றம்சாட்டப்பட்டிருந்தால் குற்றத்திலிருந்து அந்த உறுப்பினர் விடுபட முடியும்.
2004-க்குப் பிறகு கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் மிக அதிகமான உறுப்பினர்கள் காணப்படுவது இப்போதைய நாடாளுமன்றத்தில்தான். கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் அரசுப் பதவிகளில் தொடருவதோ, சட்டம் இயற்றும் பொறுப்பில் இருப்பதோ மிகப் பெரிய ஜனநாயக முரண் என்று கூறி அவர்களுக்கு மேல் முறையீடு செய்யத் தரப்பட்டிருந்த 90 நாள் கால அவகாசத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் 2013-இல் உத்தரவிட்டது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மேல் முறையீடு செய்திருப்பது வேதனைக்குரியது.
நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, மக்கள் பிரதிநிதிகள் மீதான பல வழக்குகள் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்கின்றன. வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் இந்த மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் மீண்டும் தேர்தலில் நிற்பதும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதும் தொடர்கிறது. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால், எந்த அளவுக்கு மாநில அரசுகள் நீதித் துறையுடன் ஒத்துழைக்கின்றன என்பதும் போதிய அளவு நீதிபதிகள் இருப்பதும் மட்டுமே வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவெடுப்பதை உறுதிப்படுத்தும்.
அதேபோல, நீதித் துறைக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மிக மிக முக்கியமானது. பல நேர்வுகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறையான தகவல் கிடைக்கப் பெறாததால் மக்கள் பிரதிநிதிகள் தடையின்றித் தத்தம் பதவிகளில் தொடர்வது வழக்கமாகி இருக்கிறது. கடுமையான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தேர்தலில் போட்டியிடுவதோ, பொறுப்பான பதவிகள் வகிப்பதோ கூடாது என்கிற விதிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. அதன்படி கிரிமினல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஒருவர் நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்கிற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதித் துறை தீவிரமாகப் பரிசீலித்தாக வேண்டும்.
சட்டம் இயற்றுவதால் மட்டுமோ, நீதிமன்ற உத்தரவுகளாலோ குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலில் வலம் வருவதை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. குற்றப் பின்னணி உள்ளவர்களுக்குத் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை அரசியல் கட்சிகள் மறுத்துவிட்டாலே இப்படியொரு பிரச்னை எழாது. ஆனால், குற்றப் பின்னணி உள்ளவர்களையும், தவறான வழியில் பொருளீட்டுபவர்களையும் துணையாகக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசியல் கட்சிகள் வெற்றி பெறுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை. அதை எப்படித் தடுப்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com