எதிர்பாராததல்ல!

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வியப்பை ஏற்படுத்தவில்லை. வாக்குக் கணிப்புகள் ஓரளவு மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் களத்தில் வெற்றியை உறுதி செய்வது எப்படி என்கிற வித்தையை நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கற்றுத் தேர்ந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, தங்களுக்கு எதிரான மக்கள் மனநிலையைக்கூட சாதகமாக மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
குஜராத்தில், நரேந்திர மோடியின் தலைமையில் 2002 முதல் அடுத்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு குஜராத்தில் இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களும், கடுமையான எதிர்ப்பும் எழுந்தவண்ணம் இருந்தன. 
1998 தேர்தலில் கேஷுபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது முதல் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறது. 2002 சட்டப் பேரவைத் தேர்தலில் 49.8 சதவீத வாக்குகளையும், 127 இடங்களையும் மோடி தலைமையில் வென்று பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 2007-இல் 117 இடங்களையும், 2012-இல் 115 இடங்களையும் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பாஜக இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆனால், தேர்தலுக்குத் தேர்தல் சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் குறைந்துவருகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 115 இப்போது 99 ஆகக் குறைந்திருக்கிறது என்பதும், வாக்கு விகிதம் குறைந்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 1985இல் மாதவ் சிங் சோலங்கி தலைமையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், 1990 முதல் நடந்த எந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 
விஜய் ரூபானி ஆட்சிக்கு எதிராகக் களம் இறங்கிய ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் படேல், அல்பேஷ் தாக்குர் ஆகிய மூவரையும் தங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இணைத்துக் கொண்டது ராஜதந்திரரீதியான வெற்றியாக இருக்கலாம். ஆனால், அரசியல்ரீதியான வெற்றியை அவர்களின் ஆதரவு காங்கிரஸýக்கு தரவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
இவர்கள் மூவரும் முறையே ஆதிவாசிகள், பாடிதார், சத்திரியர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த சமுதாயத்தினரின் வாக்குகள் காங்கிரஸýக்கு கிடைக்கும் என்பதுதான் அந்தக் கட்சியின் பரவலான எதிர்பார்ப்பாக இருந்தது. மேலே குறிப்பிட்ட மூன்று இளைஞர்களையும் சமுதாயரீதியாக அந்தந்த சமுதாயத்தினர் ஆதரிக்க முன்வந்தார்களே தவிர, அரசியல்ரீதியாக முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
குஜராத் சட்டப் பேரவையில் 182 தொகுதிகளில் சுமார் 70 முதல் 80 தொகுதிகளில் பாடிதார்கள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள். உயர்ந்த ஜாதி என்று கூறி தங்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்கிற கோபம் அவர்களுக்கு உண்டு. பாடிதார் சமுதாயத்தைப் பொருத்தவரை அந்த சமூகத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் மீதிருந்த வெறுப்பையும், கோபத்தையும் ஹார்திக் படேலின் காங்கிரஸ் அரவணைப்பு முழுமையாகப் போக்கிவிடவில்லை என்பது தெரிகிறது.
தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சர்தார் வல்லபபாய் படேல், பண்டித ஜவாஹர்லால் நேருவால் பின்தள்ளப்பட்டார் என்கிற கோபம் பாடிதார் சமூகத்துக்கு எப்போதுமே உண்டு. சர்தார் படேலின் தியாகமும், பங்களிப்பும் நேரு குடும்பத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதுதான் அதற்குக் காரணம். 1950-இல் மறைந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு நேரு குடும்பம் ஆட்சியில் இருந்தபோது பாரத ரத்னா விருதுகூட வழங்கப்படவில்லை. 1991-இல் சந்திரசேகர் அரசால் பரிந்துரைக்கப்பட்டதன் விளைவாகத்தான் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் "இரும்பு மனிதர்' பாரத ரத்னா விருது வழங்கி கெüரவிக்கப்பட்டார். இந்தக் கோபம் பாடிதார் சமுதாயத்தினருக்கு எப்போதுமே உண்டு.
கடந்த சட்டப் பேரவையில் 61 இடங்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் 77 இடங்களாகத் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டதற்கு, ராகுல் காந்தியின் தீவிர பிரசாரமும், ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் படேல், அல்பேஷ் தாக்குர் ஆகியோருடன் அமைத்துக் கொண்ட கூட்டும் கூட காரணம். ஏனைய எதிர்க்கட்சிகளையும் காங்கிரஸ் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டிருந்தால் முடிவுகள் வேறுமாதிரியாகக் கூட இருந்திருக்கக் கூடும். அந்த வாய்ப்பை ராகுல் காந்தி நழுவ விட்டுவிட்டார். 
பண மதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு என்று பரவலான பாதிப்புகள் மக்கள் மன்றத்தில் பாஜகவுக்கு எதிரான மன
நிலையை ஏற்படுத்தி இருந்தது நிஜம். அவற்றை எல்லாம் மறக்கடிக்கும் விதத்தில் உணர்ச்சியைத் தூண்டும் கோஷங்களாலும், பேச்சாற்றலாலும், தேர்தல் கள ராஜதந்திரத்தாலும் நரேந்திர மோடி, அமித் ஷா அணி மக்களை திசை திருப்பி வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறது என்பது அதைவிட நிஜம்.
குஜராத், ஹிமாசலப் பிரதேசம் கூறும் செய்தி - ராகுல் காந்தியும், காங்கிரஸýம் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் நினைவில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை - குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவை வெற்றிகள் 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம் அல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com