காட்சி மாறுமா?

ஹிமாசலப் பிரதேசத்தைப் பொருத்தவரை

ஹிமாசலப் பிரதேசத்தைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. கடந்த 1985 முதல், தேர்தலுக்குத் தேர்தல் காங்கிரஸூம், பாரதிய ஜனதாவும் ஹிமாசலப் பிரதேசத்தில் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வந்திருக்கின்றன. கடந்த 12-ஆவது சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்றால், இந்த முறை பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அவ்வளவே!
கடந்த கால்நூற்றாண்டு காலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரபத்திர சிங்குக்கும் பாஜகவைச் சேர்ந்த பிரேம்குமார் துமலுக்குமாக மாறிக் கொண்டிருந்த முதல்வர் பதவிக்கான போட்டி இந்த முறையுடன் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வராக இருந்த வீரபத்திர சிங் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றாலும், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது. பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது என்றாலும், பாஜகவின் முதல்வர் வேட்பாளரான துமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 
பாஜகவைப் பொருத்தவரை, முதலமைச்சர் வேட்பாளரான பிரேம்குமார் துமல் சஜன்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருப்பது மிகப்பெரிய இழப்பு. அவரது தோல்வியின் பின்னணியில் கட்சிக்காரர்களே இருந்திருக்கக்கூடும் என்றுகூட ஐயப்பட வாய்ப்பிருக்கிறது. அவர் வழக்கமாக வெற்றி பெறும் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிடாமல் சஜன்பூர் தொகுதியில் போட்டியிட அவர் ஏன் வற்புறுத்தப்பட்டார் என்பதன் காரணம் புரியவில்லை.
காங்கிரûஸப் பொருத்தவரை குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் காட்டிய முனைப்பில் துளிக்கூட ஹிமாசலப் பிரதேசத்தில் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கட்சித் தலைமை காட்டவில்லை. காங்கிரஸ் தலைமையின் எந்தவித ஒத்துழைப்பும் இல்லாமல், முதல்வராக இருந்த 83 வயது வீரபத்திர சிங் தன்னந்தனியாகத் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடினார் என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல, உள்கட்சி எதிர்ப்பையும், போட்டி வேட்பாளர்
களின் சவாலையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது 83 வயதிலும் மலைப்பிரதேசமான ஹிமாசலம் முழுவதும் சாலை வழிப் பயணத்தை மேற்கொண்டு பிரசாரத்தை முன்னின்று நடத்தியும் காங்கிரஸின் தோல்வியை அவரால் தடுத்துவிட முடியவில்லை.
குஜராத்தில் சுற்றிச் சுற்றி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹிமாசலப் பிரதேசத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே ஒதுக்கி மூன்று தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டார். அவரைத் தவிர, எந்த ஒரு தேசியத் தலைவரும் ஹிமாசலப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
இதற்கு நேர்எதிராக பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, கட்சித் தலைவர் அமித் ஷா தொடங்கி மிகப்பெரிய தலைவர் பட்டாளமே ஹிமாசலப் பிரதேசத் தேர்தலிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி பல பேரணிகளில் கலந்துகொண்டார். கட்சித் தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று பாஜகவின் தலைவர்கள் பட்டாளமே களமிறங்கியது.
ஹிமாசலப் பிரதேசத்தைப் பொருத்தவரை, சுற்றுலாவும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் உற்பத்தியும்தான் அந்த மாநிலத்தின் அடிப்படைப் பொருளாதாரத்திற்கான காரணம். இதில் விவசாயிகளும், வியாபாரிகளும் அடக்கம். செலாவணி செல்லாததாக்கப்பட்டதாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பாலும் ஹிமாசலப் பிரதேசமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பிரச்னைகளை குஜராத்தில் முன்னிறுத்தியதுபோல ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸால் முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இந்த முறை வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸூக்கு எதிராக, பாஜகவால் வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பிரசாரத்தை நடத்த முடிந்தது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டு காங்கிரஸ் ஆட்சி போற்றும்படியாக இருக்கவில்லை. வருமானவரித் துறை, வரி ஏய்ப்புத் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை என்று பல்வேறு அமைப்புகள் முதல்வர் வீரபத்திர சிங்குக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றன. இவையெல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று வீரபத்திர சிங் கூறினாலும் மக்கள்மன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹிமாசலப் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் செய்யப்பட வேண்டும். இப்போதே பலரும் காடுகளை அழித்துக் கட்டடங்கள் கட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஹிமாசலப் பிரதேச மக்களுக்கு வேலை வேண்டும்தான். ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் வேலைவாய்ப்பு அமையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, பதவி ஏற்க இருக்கும் பாஜக முதல்வருக்கு உண்டு.
மக்கள் பிரச்னைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கும் நல்லாட்சிக்காக ஹிமாசலப் பிரதேசம் காத்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. பாஜகவின் வெற்றி ஹிமாசலப் பிரதேசத்திற்குப் புதிய தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.
வீரபத்திர சிங், பிரேம்குமார் துமல் இருவரும் அமைத்திருக்கும் பாதையில், தேர்ந்தெடுக்கப்படும் புதிய முதல்வர் தனது பயணத்தைத் தொடராமல் இருந்தால் மட்டுமே, ஹிமாசலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருப்பது ஆட்சி மாற்றமாக அல்லாமல் காட்சி மாற்றமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com