மெத்தனம் விலகட்டும்!

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றிவாகை சூட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றிவாகை சூட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அதற்கேற்றாற்போல விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா, ஊக்கம் அளிக்கப்படுகிறதா, உதவித்தொகை தரப்படுகிறதா என்றால் இல்லை.
சாஜன் பிரகாஷ் இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் பந்தய வீரர்களில் ஒருவர். இந்தியாவின் சார்பில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கெடுத்தவர். பட்டர்பிளை ஸ்ட்ரோக் எனப்படும் நீச்சல் போட்டியில் தேசிய சாதனையாளர். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள இவருக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. அதற்காக, தான் இதுவரை வென்றிருக்கும் பதக்கங்களை ஏலம் விடப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னால் துபை, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டார் சாஜன் பிரகாஷ். ஆனால், இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள இவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறையோ, நிறுவனப் புரவலர்களோ நிதியுதவி செய்ய முன்வரவில்லை. தனது சொந்தச் செலவில்தான் அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டார் அவர். எந்த அளவுக்கு அந்த வீரர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதை நாம் உணர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும்போது மட்டும் இந்திய வீரர் வெற்றி பெற்றார் என்று மகிழ்ந்து கொண்டாடும் நாம், அதற்காக அவருக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என்பதை உணர மறுக்கிறோம்.
மத்திய அரசின் விளையாட்டுத்துறை அடுத்த ஒலிம்பிக் பந்தயத்தை இந்தியா எதிர்கொள்வதற்காக 'ஒலிம்பிக் பந்தய இலக்கு' (டார்கட் ஒலிம்பிக் போடியம்) என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத் தகுதியான பல விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களுக்குப் போதிய நிதியுதவியும், பயிற்சிக்கான வசதிகளையும் செய்து தருவதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தில் சாஜன் பிரகாஷ் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஆனால், இதுவரை அவருக்கு எந்த நிதியுதவியும் தரப்படவில்லை.
இந்தியாவின் வல்லரசுக் கனவைப்போல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்கிற கனவும் நிறையவே இருக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நாம் காண்பதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் விளையாட்டுத்துறை அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கியிருப்பதுதான்.
மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது என்றாலும் அதனால் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் பயனடைவதில்லை. சரியான நேரத்தில் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிகளை அதிகாரிகள் வழங்குவதில்லை. நிர்வாகத்தின் சிவப்புநாடாவினால் கோப்புகள் அதிகாரிகளின் மேஜைகளில் தேங்கிக் கிடக்கின்றனவே தவிர, விளையாட்டு வீரர்களுக்குத் தரப்பட வேண்டிய நிதியுதவி அவர்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைவதில்லை. மேலும்,நிதிநிலை அறிக்கைகளில் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்படுகிறது. அதன் மூலம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பயன்பட முடியும் என்பதுதான் காரணமாக இருக்கக்கூடும்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நியமிக்கப்பட்டபோது விளையாட்டு வீரர்களும், ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்தனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஏத்தென்ஸில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் இவர். காமன்வெல்த் போட்டிகளிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்ற சிறந்த விளையாட்டு வீரர். 
அப்படிப்பட்ட ஒருவர் விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக்கப்பட்டதன் மூலம் விளையாட்டு வீரர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மாற்றங்களை ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கை எழுந்தது.
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் விளையாட்டுத்துறை அமைச்சரானதைத் தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்தார். விளையாடுவோம் இந்தியா (கேலோ இந்தியா) திட்டத்தின் மூலம் அகில இந்திய அளவில் நம்பிக்கையையூட்டும் பல்வேறு துறையிலுள்ள ஆயிரம் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்று எட்டு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 
இதுவரை விளையாட்டு மைதானங்கள், ஸ்டேடியங்கள், ஓடுதளங்கள் அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விளையாட்டுத் துறையின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் செயல் திட்டத்துக்கு அமைச்சர் ரத்தோர் வழிகோலினார். நிச்சயமாக இது புதிய பல விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், உருவாக்கவும் அவர்கள் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியா வெற்றிகளைக் குவிக்கவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
விளையாட்டு அமைச்சகத்தின் புதிய முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன. அதேநேரத்தில், சாஜன் பிரகாஷ் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேதனையையும் அளிக்கின்றன. திட்டங்களை விரைவாகவும் பயனளிக்கும் விதத்திலும் நடைமுறைப்படுத்தியாக வேண்டும். நமது விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரத்திலான வசதிகளையும், பயிற்சியையும் அளிக்காமல் அவர்கள் சர்வதேச விளையாட்டு அரங்கில் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேதைமை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com