அராஜகத்தின் இலக்கணம்!

ஏற்கெனவே குஜராத், ஹிமாசல் பேரவைத் தேர்தல்களுக்காக நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர்

ஏற்கெனவே குஜராத், ஹிமாசல் பேரவைத் தேர்தல்களுக்காக நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் இந்த 22 நாள் கூட்டத்தொடரில் அவை மொத்தமாக 14 அமர்வுகளைத்தான் காண இருக்கிறது. ஒருவழியாக நாடாளுமன்றம் கூடியிருக்கிறதே என்கிற மகிழ்ச்சியையும் நமது உறுப்பினர்கள் நீடிக்க முடியாமல் செய்கின்றனர்.
டிசம்பர் 15-ஆம் தேதி கூடிய அவை அடுத்த இரண்டு நாள்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கூடவில்லை. திங்கள்கிழமையிலிருந்து தொடர்ந்து அமளியால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. முதல் மூன்று நாள்கள் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவையில்தான் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவை நடைபெறுகிறது.
ஒவ்வொரு கூட்டத்தொடரின்போதும் அவையை முடக்க எதிர்க்கட்சிகளுக்கு ஏதாவதொரு காரணம் கிடைத்து விடுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த ஒரு குற்றச்சாட்டுதான் இந்த முறை நாடாளுமன்ற அமளிக்குக் காரணம். 
குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத்தான் இப்படியோர் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஒத்துக்கொள்வதாக இருந்தால், அவையை நடத்த அனுமதிக்க நாங்கள் தயார் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ, எந்தவிதத்திலும் பின்வாங்கத் தயாராக இல்லை. முன்னாள் பிரதமரிடம் இந்நாள் பிரதமர் மன்னிப்புக் கேட்கும் கேள்வியே எழவில்லை என்று தீர்மானமாகக் கூறிவிட்டிருக்கிறது.
மாநிலங்களவையில் அமளி எழுப்பப்பட்டபோது குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான வெங்கய்ய நாயுடு அவையை ஒத்தி வைக்க மறுத்துவிட்டார். அவையில் நடக்காத சம்பவம் குறித்தோ அறிவிப்பு குறித்தோ நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ தேவையில்லை என்று அவர் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளித்தார். 
ஆண்டுக்கு 135 அமர்வுகள்கூடிய முதலாவது மக்களவையுடன் ஒப்பிடும்போது, அதில் பாதி நாள்கள்கூட நாடாளுமன்றம் இப்போது கூடுவதில்லை. அப்படியே கூடினாலும் செயல்படுவதில்லை. நாடாளுமன்றம்தான் ஜனநாயக அமைப்பின் வெளிப்படையான அடையாளம். கடந்த 1998 முதல் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படுவதும், அவையில் விவாதங்கள் குறைந்து அமளியில் ஆழ்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் கூடிய அவைகளில் 2016 குளிர்காலக் கூட்டத்தொடர்தான் மிக மிகக் குறைந்த அளவு செயல்பட்டிருக்கிறது. கூச்சல் குழப்பத்தால் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம். மாநிலங்களவையில் எழுப்புவதற்கு பட்டியலில் இருந்த 350 கேள்விகளில் இரண்டே இரண்டு கேள்விகளுக்குத்தான் அமைச்சர்களால் பதிலளிக்க முடிந்தது. அதாவது 1% கேள்விக்குத்தான் அவையில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் பட்டியலில் இருந்த 11% கேள்விகளுக்கு மட்டுமே அமைச்சர்களால் பதிலளிக்க முடிந்தது. அமைச்சர்களைப் பேச விடாமல் அவை முடக்கப்பட்டதுதான் காரணம்.
நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மக்களின் வரிப்பணம் ரூ.29,000 செலவாகிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஒருநாள் அமளிதுமளியால் அவை முடக்கப்பட்டால் அதற்காக மக்களின் வரிப்பணம் ரூ.1 கோடிக்கு மேல் வீணாகிறது. தொடர்ந்து இதுபோல அவைகள் முடக்கப்படும்போது நமது வரிப்பணம் எந்த அளவுக்கு வீணாகிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இதுபோன்று தொடர்ந்து அவைகள் முடக்கப்படுவதால் பல முக்கியமான மசோதாக்கள் எந்தவித விவாதமோ விளக்கமோ இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன. வரிச்சட்டம் (இரண்டாவது திருத்தம்) மசோதா 2016, தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவு முக்கியமான ஒரு மசோதா குறித்து நீண்ட விவாதம் எதுவும் இல்லாமல் போனது மிக மிக துரதிருஷ்டம். இதுபோல, பல மசோதாக்கள் அவசர அவசரமாக மக்களவையில் நிறைவேற்றப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதை விடுத்து இதுபோன்ற மசோதாக்கள் குறித்து முறையான விவாதத்தை மேற்கொள்ளும்போதுதான் அரசின் தவறுகளும் பலவீனங்களும் வெளிப்படும்.
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்க முற்பட்டால், அவர்கள் உடனடியாகத் தாற்காலிக நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. இதன் மூலம் அவர்கள் மக்கள் மன்றத்தில் அடையாளம் காணப்படுவார்கள் என்பது அவரது கருத்து. மக்களவையில் ஏற்கெனவே இதுபோன்ற ஒரு விதிமுறை இருக்கிறது. அதேபோல, மாநிலங்களவையிலும் கொண்டுவர வேண்டும் என்பது வெங்கய்ய நாயுடுவின் கருத்து.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கையை முடக்கும் உறுப்பினர்களின் செயல்பாட்டுக்கு முடிவு கட்டியாக வேண்டும்.
அரசியல் சாசன சபையில் அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போது அவையை முடக்குவது, அமளியில் ஈடுபடுவது உள்ளிட்டவை குறித்து டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் கூறிய கருத்து என்றைக்கும் பொருத்தமானது. அவர் இதுபோன்ற நடவடிக்கைகளை 'அராஜகத்தின் இலக்கணம்' என்று வர்ணித்தார்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com