சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தும், இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும்

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தும், இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஐயப்பாடுகளை எழுப்பியிருந்தனர். தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
 இந்த முறை குஜராத், ஹிமாசலப் பிரதேச இரண்டு மாநிலங்களிலும் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியைத் தேர்ந்தெடுத்து அங்கே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட்டர் எனப்படும் வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டுக்கான இணைப்பு பொருத்தப்பட்டது. குஜராத்தில் 182 வாக்குச்சாவடிகளில் இந்த வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டு சேகரிக்கப்பட்டது.
 வாக்காளர் தனது வாக்கை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்த உடனேயே அது ஒரு சீட்டில் வாக்காளருடைய பெயர், வாக்காளரின் எண், அவர் அழுத்திய பொத்தானில் உள்ள அடையாளம் ஆகியவை மூன்றும் பதிவாகின்றன. அதுமட்டுமல்ல, இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் திரையில் ஏழு விநாடிகளுக்கு இந்தத் தகவல்களை வாக்காளர் பார்த்து, தான் அழுத்திய சின்னம் சரிபார்ப்புச் சீட்டிலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அந்தச் சீட்டு தனியாக ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.
 182 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டையும் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்த்தது. பதிவான வாக்குகளும் சரிபார்ப்புச் சீட்டின்படியான வாக்குகளும் ஒன்றையொன்று துல்லியமாக ஒத்துப்போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று இன்றைய தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருந்த டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என். கோபாலசுவாமி உள்ளிட்ட பலரும் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் நிலையில் அவற்றிலுள்ள சில்லுகளை மாற்றுவது என்பது இயலாது என்றும் தெரிவிக்கிறார்கள்.
 வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படாமல் இல்லை. இயந்திரங்கள் என்பதால் சில தவறுகள் நேர்கின்றன. சில நேர்வுகளில் பொத்தானை அழுத்தினாலும் வாக்குகள் பதிவாவதில்லை. ஒரு சின்னத்துக்கான பொத்தானை அழுத்தினால் இன்னொரு சின்னம் பதிவாகும் தவறும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உடனடியாக அந்த வாக்குப்பதிவு இயந்திரம் முடக்கப்பட்டு வேறு இயந்திரம் மாற்றப்பட்டுவிடுகிறது என்று தேர்தல் ஆணையம் உறுதி கூறுகிறது. வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவதற்கு முன்னால் முற்றிலுமாகச் சரிபார்த்த பிறகுதான் வாக்குப்பதிவு தொடங்குகிறது என்கிறது ஆணையம்.
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 80 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தேர்தல் முறையில்மிகப்பெரிய மாற்றத்தை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதன் அறிமுகத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்திருக்கிறது என்பதுடன் அடித்தட்டு மக்கள், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்டோர் பெருமளவில் வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதும், கள்ள வாக்குகள் பதிவாவதும் பலருடைய வாக்குகளை குண்டர்களை வைத்துக்கொண்டு அடாவடியாகப் பதிவு செய்வதும் இந்தியாவின் சில குறிப்பிட்ட மாநிலங்களில் பரவலாகவே இருந்து வந்தது. இயந்திர வாக்குப்பதிவு வந்ததற்குப் பிறகு அராஜகமான முறையில் மிரட்டி வாக்குகளைப் பதிவு செய்ய வற்புறுத்தவோ வாக்குப்பதிவில் முறைகேடு செய்யவோ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை.
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சமீபகாலமாக ஐயப்பாடு எழுந்ததற்கு உத்தரப் பிரதேச நகராட்சி உள்ளாட்சித் தேர்தல்கள்தான் காரணம். உத்தரப் பிரதேசத்தில் மாநகராட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல்களில் பழைய முறையிலான வாக்குச்சீட்டு முறையும் பின்பற்றப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட மாநகராட்சிகளில் எல்லாம் பாஜக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்திய நகராட்சி உள்ளாட்சிகளில் பின்னடைவை எதிர்கொண்டது. இதுதான் சந்தேகம் எழுவதற்கான காரணம்.
 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இதற்கு விடை அளித்திருக்கிறது. குஜராத்திலும் அத்தனை பெருநகரங்களிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆளும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும்கூட ஆளும் பாஜக பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஊரகப்பகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதன் அடையாளம்தான் இதுவேதவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையால் ஏற்பட்ட விளைவு அல்ல என்பது தெளிவாகிறது.
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை இனியும் தொடர்வது தேவையற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com