விதிவிலக்குத் தேர்தல்!

இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்குச் சாதகமாகவே அமைவது வழக்கம். 1973-இல் திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல்,

இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்குச் சாதகமாகவே அமைவது வழக்கம். 1973-இல் திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல், 1989-இல் மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் விதிவிலக்கான ஒன்றாக அமைந்திருக்கிறது.
 சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டும் கூட, டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று ஆளும் அதிமுகவின் இரட்டை இலை சின்ன வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற திமுகவின் உதயசூரியன் சின்ன வேட்பாளர் என். மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
 கடந்த முறை பணம் பரவலாக வழங்கப்பட்டது என்கிற புகாரின் அடிப்படையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்படியிருக்கும்போது, இந்த முறையும் பணம் பரவலாகத் தரப்பட்டிருந்தால், அது தேர்தல் ஆணையத்தினுடைய தவறு மட்டுமல்ல, மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமும்கூட.
 மேலும், தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் 5,000 முதல் அதிகபட்சம் 10,000 வாக்குகளை அதிகமாகப் பெற முடியுமே தவிர, டிடிவி தினகரனுக்குக் கிடைத்திருப்பதுபோல இந்த அளவிலான வெற்றி கிடைப்பது சாத்தியமே அல்ல.
 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அளித்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி, வைப்புத்தொகையைக்கூட பெற முடியாத அளவிலான திமுக வேட்பாளரின் படுதோல்வி. இத்தனைக்கும், திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இப்போது இணைந்திருக்கின்றன. ஜெயலலிதா என்கிற ஆளுமையின் மறைவும், அதிமுகவில் ஏற்பட்டிருக்கின்ற பிளவும் திமுகவுக்குச் சாதகமாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? இதற்கு முன்னால் தேர்தல் தோல்விகளுக்கு 2ஜி வழக்கை காரணம் காட்டியதுபோல இப்போது அதைக் காரணம் காட்ட முடியாது. வாக்குப் பதிவு நாளில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வந்திருப்பதும், திமுகவுக்கு சாதகமாக அல்லவா மாறியிருக்க வேண்டும்?
 வயோதிகம் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவைத் தொடர்ந்து கட்சியின் முழுப் பொறுப்பையும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட பிறகு நடைபெற்றிருக்கும் முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் முழுமையான முனைப்புடன் கூடிய பிரசாரத்தை முடுக்கிவிட்டு, திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு, வைப்புத்தொகை இழப்பு அளவிலான தோல்வியைச் சந்தித்திருப்பது மிகப்பெரிய அரசியல் ராஜதந்திரச் சறுக்கல். அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல என்கிற பொதுக்கருத்துக்கு இந்த தோல்வி வழிகோலியிருக்கிறது.
 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு "சேவல்' சின்னத்தில் ஜெயலலிதா அணியும், "இரட்டைப் புறா' சின்னத்தில் வி.என். ஜானகி அணியும் போட்டியிட்டன. 1989 பிப்ரவரி மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் இரட்டைப்புறா சின்னத்தில் போட்டியிட்ட வி.என். ஜானகி அணி ஒரேயொரு இடத்திலும் வெற்றி பெற்றன.
 தனது அணி படுதோல்வி அடைந்தவுடன், வி.என். ஜானகி பெருந்தன்மையுடன் ஜெயலலிதாவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு, எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி வலுவிழந்துவிடக் கூடாது, அழிந்துவிடக் கூடாது என்கிற உயரிய நோக்கத்துடன் கட்சியின் இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கவும் வழிகோலினார். ஜெயலலிதாவுக்கும் வி.என்.ஜானகிக்கும் இருந்த அரசியல் பக்குவமும் பெருந்தன்மையும் இப்போது டிடிவி அணிக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கும் ஏற்பட வேண்டும். உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்தகட்ட நகர்வு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
 தன்னை திமுகவிலிருந்து வெளியேற்றக் காரணமாக இருந்த நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், க. ராசாராம், மதுரை முத்து உள்ளிட்டவர்களை அஇஅதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். தன்னை "பால்கனி பாவை' என்று விமர்சித்த க. காளிமுத்துவை, பின்னாளில் பேரவைத் தலைவராக்கினார் ஜெயலலிதா. பா.வளர்மதியைவிடத் தரக்குறைவாக ஜெயலலிதாவை வேறு யாரும் விமர்சித்திருக்க முடியாது. அவரைக் கட்சியில் சேர்த்து இரண்டு முறை அமைச்சராகவும் பொறுப்பளித்தார். ஆர்.எம். வீரப்பன், பொன்னையன், தம்பிதுரை, சைதை துரைசாமி, பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட கடுமையான விமர்சகர்கள் ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பதவி வழங்கப்பட்டனர்.
 அரசியல் இயக்கங்கள் பிரிவதும் இணைவதும் புதிதல்ல. அரசியலில் மனமாச்சரியங்கள் நிரந்தரமானவையல்ல. மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் டிடிவி தினகரனுக்கு இருக்கிறது என்பதை இபிஎஸ் - ஓபிஎஸ் - அணியினரும், இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை டி.டி.வி. தினகரனும் நினைவில் கொள்ள வேண்டும்.
 மக்கள் மன்றத்தில் அதிமுகவின் செல்வாக்கில் சரிவில்லை என்பதை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் உறுதிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட, அஇஅதிமுக என்கிற இயக்கத்தை, வலுவான இயக்கமாக ஜெயலலிதா இல்லாத நிலையிலும் தொடரச் செய்வது அவர்கள் கடமை.
 1969-இல் காங்கிரஸின் "இரட்டைக் காளை' சின்னமும், 1978-இல் இந்திரா காங்கிரஸின் "பசுவும் கன்றும்' சின்னமும் முடக்கப்பட்டதுபோல இரட்டை இலை சின்னமும் யாருக்கும் கிடைக்காமல் நிரந்தரமாக முடக்கப்படாமல் இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினரை சமரசம் செய்து, இரட்டை இலையைக் காப்பாற்றித் தந்திருக்கிறார்கள்.
 அதற்காக, டிடிவி தினகரனும், இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைமைக்கும் நன்றி சொல்ல வேண்டும்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com