நல்லரசுக்கு அழகல்ல!

ஊடகங்கள் உணர்வுப்பூர்வமான விவாதங்களுக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கும்தான் முன்னுரிமை அளிக்கின்றன.

ஊடகங்கள் உணர்வுப்பூர்வமான விவாதங்களுக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கும்தான் முன்னுரிமை அளிக்கின்றன.
 மக்களை நேரடியாக பாதிக்கும் அரசின் முடிவுகள் குறித்து, பரந்துபட்ட விவாதம் இந்தியாவில் நடைபெறாமல் இருப்பது வேதனைக்குரியது. சாமானிய மக்களைப் பாதிக்கக்கூடிய முடிவுகள் குறித்து மக்கள்மன்றத்தில் விவாதம் எழுந்தால்தான் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியும்.
 பியூஷ் கோயல் ரயில்வே துறை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு பல மாற்றங்களை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறார் என்பது உண்மை. அவற்றில் சில முடிவுகள் ரயில்வே துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடியதாகவும் இருக்கின்றன. ஆனால், அவர் அமைச்சரான பிறகு எடுத்திருக்கும் வேறு சில முடிவுகள் சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இல்லை.
 இந்திய ரயில்வே என்பது உலகத்திலேயே மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனம். இவ்வளவு பெரிய நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதில் வியப்பொன்றுமில்லை. இத்தனை ரயில்கள் இயங்கும்போது சில விபத்துகள் நேரிடுவதும் தவிர்க்க முடியாதது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 63,000 கிலோமீட்டர் நீளமான தண்டவாளங்களைக் கொண்டது. நாள்தோறும் 13,000 ரயில்கள் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 146 ரயில்கள் சதாப்தி, துரந்தோ, ராஜதானி போன்ற அதிவிரைவு சிறப்பு ரயில்கள். இந்திய ரயில்வே இயக்கும் மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் 1,578. பாசஞ்சர் என்றழைக்கப்படும் 2,522 சாதாரண ரயில்கள் இயங்குகின்றன. நாள்தோறும் 1.3 கோடி பயணிகள் இந்தியாவில் ரயிலில் பயணிக்கிறார்கள்.
 இந்திய ரயில்வே ஆண்டுதோறும் மானியங்கள், கட்டணச் சலுகைகள் ஆகியவற்றால் ரூ.30,000 கோடி இழப்பை நேரிடுவதாக ரயில்வே வாரியம் கூறுகிறது. இந்திய ரயில்வே இனிமேலும் இதுபோல் பெரிய இழப்புகளை எதிர்கொள்ளக்கூடாது என்றும் லாபத்தில் ஓடாவிட்டாலும் நட்டத்தில் இயங்கக்கூடாது என்றும் மத்திய அரசு கருதுகிறது. அதற்காக ரயில்வே அமைச்சரின் ஏற்புக்காகவும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகவும் சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு ரயிலின் மொத்தப் பயணிகள் அளவில் பாதிக்கும் கீழாக மட்டுமே பயணிக்கும் ரயில்களை நிறுத்திவிட வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று.
 ஏற்கெனவே கடந்த இருபது ஆண்டுகளில் சிறிய ரயில் நிலையங்களில் நிற்கும் பாசஞ்சர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதற்குப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது மட்டுமே காரணமல்ல. நிர்வாகச் செலவும் எரிபொருள் செலவும் அதிகமாகிறது என்பதுதான் காரணமாகக் கூறப்பட்டது. இப்போது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதால், மேலும் பல ரயில்களை நிறுத்திவிடுவது என்கிற முடிவு சரியானதாகத் தோன்றவில்லை. அதே தடத்தில் ஓடும் வேறு ஒரு ரயிலுடன் இணைக்கலாம் என்கிற யோசனையும் ஏற்புடையதல்ல.
 இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை காற்று மாசால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு. ரயில்கள் எல்லா கிராமங்களையும் இணைக்கும் விதத்திலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ற நேரத்திலும் இயக்கப்படுமேயானால், அதனால் மோட்டார் வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவில் குறையும். அதுமட்டுமல்ல, அந்நியச் செலாவணியால் பெறப்படும் பெட்ரோல், டீசல் உபயோகம் குறையும். சாலை விபத்துகளும், சாலை நெரிசலும் குறையும்.
 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கியது இந்திய ரயில்வே துறைதான். எங்கெல்லாம் ரயில்கள் இயக்கப்பட்டனவோ அந்தப் பகுதிகளெல்லாம் பொருளாதார ரீதியாக மேம்பட்டன என்பது அனுபவப்பூர்வ உண்மை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தொழில்துறையில் பின்தங்கி இருப்பதற்கு அந்தப் பகுதிக்கு ரயில்கள் நீண்டகாலமாக இயக்கப்படாமல் இருந்ததுதான் காரணம்.
 பொதுமக்களைப் பொருத்தவரை, இப்போதும்கூட வசதியாக ரயில்கள் இயக்கப்பட்டால் அவர்கள் சாலைப் போக்குவரத்தைவிட ரயில் போக்குவரத்தைத்தான் விரும்புகிறார்கள். அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கு வேண்டுமானால் சாலைப் போக்குவரத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தாலும் தொலைதூரப் பயணத்திற்கு ரயில்களைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
 எந்தவொரு விரைவு ரயிலிலும் இடம் இல்லை என்கிற நிலைதான் காணப்படுகிறதே தவிர, பயணிகள் இல்லாமல் ஓடுவதாக எந்த ஒரு ரயிலும் இல்லை. மக்களின் தேவைக்கு ஏற்ற அளவுக்கு ரயில் இல்லாத குறைதான் இன்னும் காணப்படுகிறது என்கின்ற நிலையில், பயணிகளின் ஆதரவு இல்லாததால் ரயில்களை நிறுத்துவது என்கிற ரயில்வே நிர்வாகத்தின் விளக்கம் நம்பும்படியாக இல்லை.
 சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் நெடுஞ்சாலைப் பயணத்தைத் தவிர்க்கவும் குறைந்த கட்டணத்தில் அதிநவீனவசதிகளுடன் அதிகமான ரயில்கள் இயக்கப்படுவது என்பதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும்கூடத் தவறில்லை.
 ரயில்வே நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும் முறைகேடுகளையும் குறைப்பது, ரயில்வே ஊழியர்களின் மெத்தனப் போக்கை மாற்றுவது உள்ளிட்ட நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்வதிலும், சரக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவாயைப் பெருக்குவதிலும் கவனம் செலுத்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, பயணிகள் ரயிலின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமோ, கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமோ இழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது மக்கள் நல அரசுக்கு அழகல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com