விபத்தும் விழிப்பும்!

நிதிநிலை அறிக்கையும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலையற்ற தன்மையும் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுப் பிரச்னையை பின்னுக்கு தள்ளிவிட்டன.

நிதிநிலை அறிக்கையும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலையற்ற தன்மையும் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுப் பிரச்னையை பின்னுக்கு தள்ளிவிட்டன. சுனாமியும் வர்தா புயலும் ஏற்படுத்திய சேதத்துக்கு எள்ளளவும் குறையாதது கடலில் ஏற்பட்ட இந்த மாபெரும் எண்ணெய்க் கசிவு.
கடந்த 28-ஆம் தேதி எண்ணூர் அருகே ஒரு எரிவாயு கப்பலும் கச்சா எண்ணெய் கப்பலும் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி இன்னும் முழுமையடையவில்லை என்பதுதான் உண்மை. சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தால் கடலில் சிந்திய 20 டன்னுக்கும் அதிகமான எண்ணெய்க் கழிவு மும்பை கடற்கரை வரை சென்றடைந்திருக்கிறது என்று சொன்னால் இதனால் ஏற்பட்ட பாதிப்பு எந்த அளவிலானது என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சமையல் எரிவாயுவை இறக்கிய பி.டபுள்யூ. மேப்பிள் என்கிற டேங்கர் கப்பல் துறைமுகக் கால்வாய் வழியாக வெளியேறும்போது, உள்ளே வந்து கொண்டிருந்த டான் காஞ்சிபுரம் என்கிற டீசல், மோட்டார் ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு வந்த கப்பலுடன் எதிர்பாராதவிதமாக மோதியது. அந்த விபத்தின் விளைவாக அடுத்த நாள் காலையில் சென்னை எண்ணூரை ஒட்டிய கடற்பகுதியில் கறுப்புப் போர்வையாக எண்ணெய் படலம் படர்ந்தது. கடற்கரையில் ஏராளமான ஆமைகள், மீன்கள் செத்து மிதந்தன. அப்போதுதான் இந்த எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கத்தை அதிகாரிகளும் பொதுமக்களும் உணரத் தொடங்கினர்.
கடலில் படிந்து விட்ட எண்ணெய் படலத்தை அகற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும்போது அதனால் கடலில் கலக்கும் எண்ணெய் படலத்தை மிகச் சிறந்த தொழில்நுட்பத்தால்கூட அகற்றுவது கடினம் என்பதுதான் அனுபவ உண்மை. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அப்படி எனும்போது இந்தியாவில் அதை உடனடியாக எதிர்கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளோ தொழில்நுட்பமோ இல்லாமல் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
கடலில் இதுபோன்று எண்ணெய் கொட்டும்போது அதன் மேற்பரப்பில் படலமாக பரவி விடுவதால் கீழ்ப்பகுதியில் உள்ள கடல்வாழ் இனங்களுக்கு ஒருவித மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கண்களும் முழுமையாக பார்வை தெரியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே போக முடியாத காரணத்தால் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து விடுகின்றன. அதனால்தான் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீன் இனங்களும் ஆமைகளும் இறந்து எண்ணெய் கசிவில் மிதந்து கொண்டிருந்தன.
இந்த எண்ணெய் கசிவு கடலோரம் இருக்கின்ற தாவர இனங்களின் வேர்களின் மீது பதிந்து அவற்றை அழித்துவிடுகிறது. அதன் தொடர் விளைவாக கடல் அரிப்பு ஏற்படுகிறது. இந்த எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள்கூட முறையான உடை அணியாமல் போனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த எண்ணெய் படலத்தை மூன்று விதமாக அகற்ற முற்படலாம். முதலாவது, அதை எரிப்பது. அப்படி செய்யும்போது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், அந்தபகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் வாழ நிரந்தரமான பாதிப்பு ஏற்பட்டு விடுமா என்பது தெரியாது. இரண்டாவதாக, படலத்தை இயந்திரங்களின் மூலம் உறிஞ்சி எடுத்து அகற்ற முற்படுவது. அது அவ்வளவு சுலபமல்ல. மூன்றாவது, ரசாயன முறையில் அந்த எண்ணெயை செயலற்றுப் போகச் செய்வது. இதனால் கடல்நீர் விஷத்தன்மை அடையக் கூடும். அது இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோர பகுதியையும் இலங்கையின் கடலோர பகுதிகளையும்கூட பாதிக்கக் கூடும். இவ்வளவு பெரிய சிக்கல் இதிலிருக்கிறது.
இதுபோன்ற எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேலை நாடுகளில் சில புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அவற்றை நாம் உடனடியாகப் பெற்று இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் இருந்தாக வேண்டும். அதேபோல தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் இதுபோன்ற கடலில் எண்ணெய்
கசிவுகள் ஏற்படுவதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் நாம் உட்படுத்தி தயார் நிலையில் இருந்தாக வேண்டும்.
இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்காக தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் பாதுகாப்புத் திட்டம் ஒன்று இருக்கிறது. அது கடலோர காவல்படையின் மூலம் துறைமுகங்கள் செயல்படுத்த வேண்டிய திட்டம். சென்னையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அந்தக் கசிவுகளை அகற்ற முற்பட்டது எந்த அளவுக்கு நமது துறைமுகங்கள் இதுபோன்ற இடர்களை எதிர்கொள்வதில் தயார் நிலையில் இல்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
எப்போதாவதுதான் இதுபோன்ற விபத்து நிகழும் என்றாலும் அதன் தாக்கமும் தொடர்விளைவுகளும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். இந்திய கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவர்களையும் பொதுமக்களையும் பாதிப்பதுடன் கடல்வாழ் உயிரினங்களையும் கடலோரப் பகுதிகளில் இருக்கும் பறவை சரணாலயங்களையும் பாதிக்கும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அப்படி விபத்து நேர்ந்தால் அதை உடனடியாக எதிர்கொண்டு பாதிப்பு அதிகம் ஏற்பட்டு விடாமல் தடுப்பது. இனியாவது நாம் விழித்துக் கொண்டு தயார் நிலையில் இருக்க முயற்சிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com