குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி!

தமிழக அரசியலில் நிலவி வந்த நிலையற்ற தன்மை முடிவுக்கு வந்திருக்கிறது. காலம் தாழ்த்தியாவது தனது அரசியல் சட்டக் கடமையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிறைவேற்றி இருக்கிறார்

தமிழக அரசியலில் நிலவி வந்த நிலையற்ற தன்மை முடிவுக்கு வந்திருக்கிறது. காலம் தாழ்த்தியாவது தனது அரசியல் சட்டக் கடமையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிறைவேற்றி இருக்கிறார் என்பதுவரை மகிழ்ச்சி. அவர் இப்போது எடுத்த இந்த முடிவை, ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகியவுடன் எடுத்திருப்பாரேயானால், அரசியல் குழப்பங்களுக்குத் தேவையே இருந்திருக்காது. வி.கே. சசிகலாவுக்கு பதிலாக வேறொருவரை பரிந்துரை செய்யச் சொல்லி, ஆட்சி அமைக்க அழைத்திருப்பதுதான் அவர் நியாயமாகச் செய்திருக்க வேண்டிய கடமை.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அணிக்கு எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு ஏறத்தாழ பத்து நாட்கள் அவகாசம் அளித்தும்கூட அவரால் பத்து உறுப்பினர்களைக்கூட சேர்க்க முடியவில்லை என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது. புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியும் ஏற்றுக்கொண்டு விட்டிருக்கிறார். அமைச்சரவையில் புதிதாக கே.ஏ. செங்கோட்டையன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதைத் தவிர குறிப்பிடும்படியான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
1926-இல் அன்றைய சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்த பி. சுப்பராயனுக்குப் பிறகு, ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பின், கவுண்டர் சமுதாயத்திலிருந்து ஒருவர் முதல்வராகி இருக்கிறார். 1952-இல் ராஜாஜிக்குப் பிறகு, 65 ஆண்டுகளுக்குப் பிறகு, கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவர் முதல்வராகி இருக்கிறார்.
அதிக அரசியல் பின்புலம் இல்லாத ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி, ஜெயலலிதாவின் செல்வாக்கு ஆகியவற்றால்தான் இப்படி உயர்ந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிறது. இது வேறு எந்தவொரு கட்சியிலும் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே.
முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அமைச்சராக இருந்தவர் என்பதால், ஆட்சிக்குப் புதியவரொன்றும் அல்ல. அதேநேரத்தில் கட்சியிலும் தமிழக அரசியலிலும் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் அவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பதால் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவை அல்ல. ஆட்சி அதிகாரத்தில் அவர் அமர்த்தப்பட்டாலும் கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இருக்காது.
ஜெயலலிதாவைப்போல சர்வ வல்லமை பொருந்திய முதல்வராக அவரால் செயல்பட முடியாது. அதே நேரத்தில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், தனது ஆதரவு அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களையும் அவர் திருப்திபடுத்தியாகவும் வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.
அ.தி.மு.க.வின் தலைவியாகவும் முன்னாள் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு அப்படியே இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு, அவரது பெயருக்கு தீராக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. அந்தக் களங்கத்தின் நிழல் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வின் மீது, குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையின் மீது படியும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஊழல் முத்திரையைத் துடைத்து எறியும்விதத்தில் நல்லாட்சி நடத்தினால் மட்டுமே, மக்கள் மன்றத்தில் ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை அகற்ற முடியும். அப்படி ஊழலற்ற நல்லாட்சியை அமைக்க அவரது அமைச்சரவை சகாக்களும், கட்சி எம்.எல்.ஏ.க்களும் அனுமதிப்பார்களா என்பதைப் பொருத்துத்தான் இந்த ஆட்சியின் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படும்.
ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில் பிளவுபட்டு நிற்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சித் தாவல் தடை சட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இந்த அணிக்கே திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் முயற்சிகள் நடக்கக்கூடும் என்பதையும் முதல்வர்
பழனிசாமி கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே தி.மு.க.வின் ஒரே நோக்கமாக இருந்தது என்றும் ஆளுநர் யாரையும் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருந்தது தவறு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது, எதிர்க்கட்சி பொறுப்புடன் நடந்துகொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. அதேபோல அ.தி.மு.க. பிளவுபட்டாலும்கூட அது தி.மு.க.வுக்கு சாதகமாகவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சவால், மத்திய அரசுடனான உறவு. ஆளுநர் காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஓ. பன்னீர்செல்வம் குழுவினருக்கு மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவு இருந்ததுதான் காரணம் என்பது தெளிவு. இந்த நிலையில், அவர் எப்படி மத்திய அரசுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளப்போகிறார் என்பதைப் பொருத்தும்தான், இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மை அமையும்.
வருகிற குடியரசுத் தலைவர் தேர்தலில் பிளவுபடாத அ.தி.மு.க.வின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தனது வேட்பாளரை ஒருசேர ஆதரிப்பது பா.ஜ.க.வின் அவசியத் தேவை. அதனால் மத்திய அரசு இனிமேல் முதல்வர் பழனிசாமியுடன் தோழமை ஏற்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1967-இல் அண்ணா பதவி ஏற்ற அதே பிப்ரவரி மாதம் பதவி ஏற்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் பயணிக்க இருக்கும் முட்கள் நிறைந்த பாதையை ராஜபாட்டையாக மாற்ற நமது வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com