இருட்டறையில் நீதி!

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எல்லா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். நீண்டகாலமாகவே விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை, உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அடையாளம் கண்டு அவர்களை விடுவிக்க முன்வர வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். எல்லா விசாரணைக் கைதிகளின் வழக்குகளையும் பரிசீலனை செய்து விரைவில் முடிவெடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 167(2) என்பது சிறையடைப்பு தொடர்பான விதிமுறை. ஒருவர் கைது செய்யப்பட்டால் உடனடியாக குற்றவியல் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) முன் ஆஜராக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார். குற்றம் தொடர்பான சாட்சியங்களையும் தடயங்களையும் அவர் அழித்து விசாரணையைத் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை. இப்படி சிறையில் அடைக்கப்படுபவர்கள்தான் விசாரணைக் கைதிகள் எனப்படுகிறார்கள்.
அப்படி நீதிமன்றக் காவலில் வைக்கப்படுபவர்கள் மீது விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி. இந்த விதி பின்பற்றப்படுவதே இல்லை. 15 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் மீண்டும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது காவல் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களில் நான்கு முறையும், அதாவது 60 நாள்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான தண்டனைக்குரிய குற்றங்களில் ஆறு முறையும், அதாவது 90 நாள்களும்தான் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும். அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
காலக்கெடு முடிந்துவிட்டால் காவல் நீட்டிப்புத் தர முடியாது என்று குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரிக்கலாம், ஆனால் செய்வதில்லை. வசதி படைத்தவர்கள் முதன்மை மாவட்ட நீதிபதியிடம் (செஷன்ஸ்) மேல்முறையீடு செய்து பிணையில் வந்துவிடுவார்கள். அதற்கு வசதியில்லாதவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுகிறார்கள்.
தகுந்த வழக்குரைஞர்களை நியமித்துக் கொள்ள முடியாத படிப்பறிவில்லாத ஏழை, எளியவர்களுக்கு சட்டம் குறித்த புரிதலோ, பண பலமோ இல்லாததால் அவர்கள் பிணை கேட்பதில்லை. சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் விசாரணைக் கைதிகளாக ஆண்டுக் கணக்கில் வாடுகிறார்கள்.
தேசிய குற்ற ஆவண மையம், விசாரணைக் கைதிகளின் பிரச்னை குறித்துத் தெரிவிக்கும் புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது. கடந்த 2015 புள்ளிவிவரப்படி 2,82,000 பேர் சிறையில் கைதிகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் 67% பேர் விசாரணைக் கைதிகள். 33% பேர் மட்டும்தான் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனைக் கைதிகளாக சிறை தண்டனை பெற்றவர்கள்.
விசாரணைக் கைதிகளில் 65% பேர் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை, பிணையில் அனுப்பப்படாமல் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்திய சிறைச்சாலைகள் நிறைந்து வழிகின்றன. அளவுக்கு அதிகமான பேர் சிறையில் அடைக்கப்படும்போது, அதற்கு ஏற்றாற்போல சிறையில் அறைகளோ, வசதிகளோ இல்லாத நிலைமை காணப்படுகிறது. இது சுகாதாரச் சீரழிவுக்கும், நோய் தொற்றுக்கும் வழிகோலுகிறது.
தாத்ரா நகர் ஹவேலி (276.7%), சத்தீஸ்கர் (233.9%), தில்லி (226.9%), மேகாலயா (177.9%), உத்தரப் பிரதேசம் (168.8%) ஆகிய மாநிலங்களில், இடவசதியைவிட இரட்டிப்பு அளவிலான கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாநிலங்களிலும் நிலைமை ஒன்றும் நன்றாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. இந்த அளவுக்கு மோசமில்லை, அவ்வளவே. தமிழகத்திலும் விசாரணைக் கைதிகளின் அளவு அதிகமாகவே இருந்தாலும்கூட, சிறைகள் மற்ற மாநிலங்களின் அளவுக்கு மோசமான இடப்பற்றாக்குறையுடன் காணப்படவில்லை.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் 67% விசாரணைக் கைதிகள் என்பது தேசிய அளவிலான புள்ளிவிவரம். பிகார் மாநிலத்தில் 82.4%, ஜம்மு - காஷ்மீரில் 81.5%, ஒடிஸôவில் 78.8%, ஜார்கண்டில் 77.1%, தில்லியில் 76.7% என்பது அதிர்ச்சி அளிக்கும் மாநில அளவிலான புள்ளிவிவரங்கள். மேகாலயா (91.4%), மணிப்பூர் (81.9%), நாகாலாந்து (79.6%) ஆகிய மாநிலங்களிலும் சிறையில் இருப்பவர்களில் மிக அதிகமானவர்கள் விசாரணைக் கைதிகள்தான் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
விசாரணைக் கைதிகள் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டும்போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 2015-இல் மட்டும் இந்தியாவில் 1,584 கைதிகள் சிறையில் மரணமடைந்திருக்கிறார்கள். இவர்களில் 1,469 பேரின் மரணம் இயற்கையானது. ஆனால், 115 பேரின் மரணம் அசாதாரண சூழலில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 77 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 11 பேர் சக கைதிகளால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் கைதிகள் சிறையில் அடைக்கப்படுவதுதான்.
விசாரணைக் கைதிகள் பிரச்னையில் இன்னொரு வேதனையான செய்தி, அவர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை சமூகத்தினராகவும், பட்டியல் இனத்தவர்களாகவும் இருப்பதுதான். அதிலும்கூட மிகவும் வறுமையிலும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களைப் பிணையில் எடுப்பதற்கான வசதியோ, உறவினர்களோ இல்லை.
தீர விசாரிக்காமல் காவல்துறையால் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லாததால், காவல்துறையினர் வேண்டுமென்றே வாய்தா மேல் வாய்தா வாங்குவதும், அவர்களைத் தேவையே இல்லாமல் காவலில் வைத்திருப்பதை நீட்டிப்பதும் தொடர்கிறது. இதன் விளைவாக, சுமத்தப்பட்ட குற்றத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத பலர் மாதக் கணக்கில் விசாரணைக் கைதிகளாக சிறையில் காலத்தைக் கழிக்கும் அவலம் ஏற்படுகிறது.
அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையில் நீதிபதிகள் நியமனம் குறித்த மோதல் ஏற்படும்போதெல்லாம், விசாரணைக் கைதிகள் குறித்த விவாதம் மேலெழும். விசாரணைக் கைதிகள் சிறையில் வாடுவதே போதுமான நீதிபதிகள் இல்லாததால்தான் என்று நீதித்துறை குற்றம் சாட்டுவது வழக்கமாகி விட்டது. அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், அதுவே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர், சிறை அதிகாரிகள், நீதித்துறை என மூன்றுமே விசாரணைக் கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்குக் காரணம் என்பதுதான் உண்மை.
1980-இல் அரசியல் சட்டப்பிரிவு 21-இன்படி, ஒவ்வொரு கைதிக்கும் முறையான விசாரணையும், விரைந்த தீர்ப்பும் அளிக்கப்படுவது அவரது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. விசாரணைக் கைதிகள் காலவரையின்றி தீர்ப்புக்குக் காத்திருப்பதும், சிறையில் அடைபட்டுக் கிடப்பதும் மனித உரிமை மீறலின் உச்ச கட்டம்.
மத்திய சட்ட அமைச்சர் விடுத்திருக்கும் வேண்டுகோள், விசாரணைக் கைதிகள் பிரச்னைக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்துமேயானால் மட்டுமே, இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று அர்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com