நடுக்கத்தில் உலகம்!

அறிவியல் வல்லுநர்களும், மருத்துவர்களும்

அறிவியல் வல்லுநர்களும், மருத்துவர்களும், மருந்து ஆராய்ச்சியாளர்களும் பதற்றத்தில் இருக்கிறார்கள். எதிர்கொள்ள இருக்கும் பேராபத்து அணு ஆயுதப் போர்களை எல்லாம்விடப் பேரழிவைத் தரக்கூடியது என்பதுதான் அவர்களின் அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் காரணம். அத்தனை மேல் மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கூடங்களும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆய்வுக்கூடங்களும் இரவு பகலாக ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றன. இதுவரை எந்தவித பயனும் ஏற்படவில்லை.
மலேரிய மிகை உயிரி (சூப்பர் பக்) ஆசியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இது கட்டுப்படுத்தப்படாமல் இப்படியே பரவுமானால் ஆசியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இதுவரை கண்டிராத பேரழிவை எதிர்நோக்கும். ஏற்கெனவே உள்ள மருந்துகள் எதற்கும் இந்த மிகை உயிரிகள் கட்டுப்படுவதில்லை என்பதுதான் பிரச்னை. கொசுக்களால் பரவும் இந்த மலேரிய மிகை உயிரிகள் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மியான்மரின் சில பகுதிகள் என்று தங்களது வீரியத்தைக் காட்டத் தொடங்கி விட்டன. பலரது உயிரைப் பலி வாங்கி விட்டிருக்கும் இந்த மிகை உயிரி தெற்கு ஆசிய நாடுகளை, குறிப்பாக, வங்கதேசம், இந்தியாவைத் தாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
மலேரியா என்பது கொசுவால் பரவும் உயிரித் தொற்று. இது மனிதர்களை மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களையும் தாக்கக் கூடியது. காய்ச்சல், சோர்வு, வாந்தி, தலைவலி உள்ளிட்ட அடையாளங்களை ஏற்படுத்தும் இந்த உயிரிகள் எந்த அளவுக்கு வீரியமாக ரத்தத்தில் கலந்திருக்கிறது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் அறிய முடியும். மலேரிய உயிரியைப் பரப்பும் கொசுவால் கடிக்கப்பட்டுப் பத்து, பதினைந்து நாள்களுக்குப் பிறகுதான் மேலே குறிப்பிட்ட அடையாளங்கள் வெளிப்படத் தொடங்கும்.
மலேரியா என்பது தொடர்ந்து பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 லட்சம் பேர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். சென்ற தடவை இதேபோல மலேரியத் தொற்று உலகெங்கும் பரவியபோது, பல லட்சம் பேர்களின் உயிரைக் குடித்ததாக "லான்செட்' என்கிற மருத்துவ இதழ் குறிப்பிடுகிறது. அதனால் உடனடியாக இதைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மேலும் பல நாடுகளுக்குப் பரவி விடாமல் தடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும் என்கிறது "லான்செட்' இதழ்.
பிரச்னை என்னவென்றால், மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்தி குணப்படுத்த உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள் எல்லாமே செயலிழந்துவிட்டன. மலேரிய மிகை உயிரிகள் அந்த மருந்துகளை எதிர்கொள்ளும் வலிவைப் பெற்று விட்டிருக்கின்றன. அந்த உயிரிகளை அழிக்கும் சக்தி பெற்ற புதிய மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே, இனிமேல் நாம் மலேரியாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் எதார்த்த நிலைமை.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதற்கு முன்பும், பிளேக், காலரா போன்று மலேரியாவும் மிகப்பெரிய தொற்று நோயாக இருந்து வந்தது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் கொத்துக் கொத்தாகப் பலர் செத்து மடிந்த சரித்திரம் உண்டு.
1934-இல் ஹான்ஸ் ஆண்டர்சாக் என்பவர் மலேரிய உயிரிகளைக் கட்டுப்படுத்த, "க்ளோரோக்வைன்' என்கிற மருந்தைக் கண்டுபிடித்தார். அடுத்த அரை நூற்றாண்டு காலம், இந்த மருந்தின் மூலம் மலேரியா தொற்று நோய் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மலேரிய உயிரி இந்த மருந்துக்குக் கட்டுப்படாத நிலையை அடைந்தது. அப்போது அதைவிட வீரியமுடைய இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் வெறும் உயிரியாக இருந்த மலேரிய உயிரி, மிகை உயிரி என்று வீரியம் பெற்றது.

இந்த மருந்துக்கும் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டபோது,
தூ யூயூ என்கிற சீன விஞ்ஞானி சீன மருத்துவ முறையில் கையாளப்படும் பாரம்பரிய மருந்திலிருந்து "ஆர்ட்டிமிசினின்' என்கிற மருந்தைக் கண்டுபிடித்தார். இதற்காக அவருக்கு 2015-இல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அந்த மருந்து க்ளோரோக்வைனுக்குக் கட்டுப்படாத மலேரிய மிகை உயிரியைக் கட்டுப்படுத்திப் பல உயிர்களைக் காப்பாற்றியது. இப்போது, தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தாலும் குணப்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய நிலையில் ஆர்ட்டிமிசினினுக்கு மாற்றாகவும், அதைவிட வீரியமானதுமான மருந்து எதுவும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக, மலேரியாவால் ஏற்படும் மரணங்கள் பாதிக்குப் பாதியாகக் குறைந்து விட்டிருந்த நிலைமை போய், இப்போது அதுவே கட்டுக்கடங்காத தொற்றாக மாறிவிடக்கூடிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் ஆராய்ச்சி முடுக்கிவிடப்பட்டு, மலேரிய மிகை உயிரியைக் கட்டுப்படுத்தும் வீரியமுள்ள மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இரவு பகலாக முயற்சிக்கிறார்கள். இதுவரை பலனளிக்கவில்லை.
மலேரியா கொசுக்களால் பரவும் தொற்று நோய் என்பது தெரியும். கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதுதான் நம்மால் இப்போது செய்ய முடிகிற ஒரே பாதுகாப்பு. விஞ்ஞானிகள் எப்படியும் இதற்கு ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டு கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுப்பதை உறுதி செய்தாக வேண்டும். மலேரியா பரவி விடுமோ என்கிற பயத்தில், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டது போல உலகமே நடுங்கிக் கொண்டிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com