பயிரை மேயும் வேலி!

வேலியே பயிரை மேய்கின்ற கதை

வேலியே பயிரை மேய்கின்ற கதை இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வருவது நீண்டகாலமாகவே தொடர்கிறது.
மத்திய புலன்விசாரணை துறை (சி.பி.ஐ.) ஆட்சியிலிருப்பவர்களால் தங்களது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ம.பு.வி. துறையின் நேர்மையும் பாரபட்சமின்மையும் பலமுறை கேள்விக்குள்ளானதும் உண்டு. மிகவும் முக்கியமான, பரபரபான வழக்குகளில் ம.பு.வி. துறையின் செயல்பாடு நீதிமன்றங்களால் கண்டனத்துக்கு உள்ளாவதும் உண்டு.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, இரண்டு நிகழ்வுகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. மத்திய புலனாய்வுத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டு முன்னாள் இயக்குநர்களின் நேர்மை சந்தேகத்துக்குரியதாகி இருப்பது ம.பு.வி. துறையின் பாரபட்சமற்ற தன்மையையும் நேர்மையையும் சந்தேகப்பட வைக்கிறது.
ம.பு.வி. துறையின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பதவியில் இருக்கும்போதே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஆளானவர். அவர் இயக்குநராக இருக்கும்போது தொடரப்பட்ட முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களேஅவரை ரகசியமாக அவரது வீட்டில் வந்து சந்தித்த விவரங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியது. ஓய்வு பெற்ற நிலையில் இருக்கும் அவர்மீது நிலக்கரிச்சுரங்க ஊழல் விசாரணையில் அவர் தலையிட்டு தடயங்களை அழிக்க முற்பட்டாரா என்பது குறித்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு துறையின் முன்னாள் இயக்குநர் மீது அந்த துறையே விசாரிக்கும் வேடிக்கை அரங்கேறப்போகிறது.
உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடும்வரை நிலக்கரிச்சுரங்க ஊழலை விசாரித்து வரும் ம.பு.வி. துறையின் உயர் அதிகாரி யாருமே அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, எடுக்க விரும்பவில்லை என்பதைதான் நீதிமன்ற உத்தரவு வெளிப்படுத்துகிறது. உச்சநீதிமன்ற உத்தரவு முன்னாள் இயக்குநர் மீதுமட்டுமல்ல இன்றைய இயக்குநர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுகக் குற்றச்சாட்டு.
இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதுதான் குற்றச்சாட்டு என்றால் அவருக்கு முன்னால் பதவி வகித்த ஏ.பி. சிங் மீதும் குற்றச்சாட்டு எழுந்திருப்பது மேலும் வேடிக்கையாக இருக்கிறது. ஏ.பி. சிங் 2010 முதல் 2012 வரை ம.பு.வி. துறையின் இயக்குநராக இருந்தவர். இறைச்சி ஏற்றுமதியாளர் மொய்ன் அக்தார் குரேஷி என்பவர் தொடர்பான ஊழல் வழக்கில் ஏ.பி. சிங்கும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். குரேஷி பல மூத்த அதிகாரிகளுக்கும் அரசியல்வாதி
களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். பல
ருடைய கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு உதவியவர். அப்படிப்பட்ட ஒருவருடன் எந்தவிதத் தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் சி.பி.ஐ. இயக்குநராக இருக்கும்போதும் ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து ஏ.பி. சிங் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என்பது நினைத்தே பார்க்கக்கூட முடியாத செயல்பாடு.
2ஜி, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்ற மெகா ஊழல்கள் வெடித்தபோது ம.பு.வி. துறையின் இயக்குநராக இருந்தவர் ஏ.பி. சிங். ஆ. ராசா, சுரேஷ் கல்மாடி போன்ற அரசியல் பிரமுகர்கள், பல வணிகக்கூட்டாண்மை நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இவர் இயக்குநராக இருந்தபோது கைது செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பலருடனும் நெருங்கிய தொடர்பிலிருந்த இடைத்தரகர் மொய்ன் அக்தர் குரேஷியுடன் இயக்குநர் ஏ.பி. சிங் நெருக்கமாக இருந்தார் என்பதை எப்படி ஜீரணித்துக்கொள்வது?
முன்னாள் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவர் பிரதீப் பைஜல், "இந்திய சீர்திருத்தத்தின் முழுமையான கதை' என்கிற தனது புத்தகத்தில் நேரடியாகவே ம.பு.வி. துறை மீது குற்றம்சாட்டி இருக்கிறார். 2ஜி வழக்கு விசாரணையில் இருந்தபோது ம.பு.வி. துறையினர் முன்னாள் அமைச்சர் அருண் ஷோரியையும், தொழிலபதிபர் ரத்தன் டாடாவையும் குற்றப்படுத்தும்படி தன்னை வற்புறுத்தியதாகவும் அதற்கு தான் மறுத்ததால் தனக்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார். இன்றுவரை அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய புலனாய்வுத் துறை எந்த விளக்கமும் தரவில்லை என்பதையும் அவர் மீது வழக்கு தொடரப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இரண்டு முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவையாக கருதப்படக்கூடாது. மத்திய புலனாய்வுத் துறையின் மீது பழிவாங்குதல், அச்சுறுத்தி பணம் வாங்குதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டிருக்கும் நிலையில் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த இந்திய நிர்வாகமே ஊழல் அரசியல்வாதிகள், பண முதலைகள், விலைபோகும் உயரதிகாரிகள், குற்றவாளிகளுடன் தொடர்புடைய விசாரணை அமைப்புகள் ஆகியவற்றின் பிடியில் சிக்கியிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது.
நேர்மையானவர்கள் இவற்றை தடுக்க சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் பண பலமும், அதிகாரபலமும் உள்ளவர்கள் பெரிய குற்றங்களிலிருந்து விடுதலை பெற்றுவிடுகிறார்கள். ஒட்டுமொத்த நிர்வாகத்தையே கேள்விகுறியாக்குகிறது சின்ஹா - சிங் ஆகிய இருவரின் மீதான குற்றச்சாட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com