மெத்தனம் தொடர்கிறதே...

நீதிபதிகள் நியமனம் குறித்து விவாதிக்கப்படும் அளவுக்கு

நீதிபதிகள் நியமனம் குறித்து விவாதிக்கப்படும் அளவுக்கு, சர்ச்சை எழுந்த அளவுக்கு, தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவி நிரப்பப்படாமல் இருப்பது ஏனோ பேசப்படுவதில்லை. நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டு வழக்குகள் பல தேங்குகின்றன என்பதுடன் நின்று விடுகிறது. நீதிமன்றத்தின் செயல்பாடே ஸ்தம்பித்து விடுவதில்லை. ஆனால், தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவி நிரப்பப்படாமல் இருப்பதும் தீர்ப்பாயங்கள் செயல்படாமல் இருப்பதும் ஒன்றுதான். எந்தவொரு தீர்ப்பாயத்தையும் தலைமைப் பதவியை நிரப்பாமல் இருந்து முடக்கிப் போட்டுவிட முடியும்.
இந்தியாவில் குறிப்பிடத்தக்க தீர்ப்பாயங்கள் என்று சொன்னால் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ராணுவப் படையினர் தீர்ப்பாயம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமான வரி விவகார ஆணையம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், நிறுவனச் சட்ட வாரியம், இந்தியச் சந்தைப் போட்டி ஆணையம், சந்தைப் போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், காப்புரிமை வாரியம், சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தகவல் தொழில்நுட்ப மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தொழிலாளர் வைப்பு நிதி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியம், தொலைத்தொடர்பு நிறுவன விவகார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய 19 தீர்ப்பாயங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுமே மிகவும் முக்கியமானவை. விரைவான செயல்பாட்டுக்குத் தேவையானவை.
நீதிமன்றங்களைப் போலவே இந்தத் தீர்ப்பாயங்களும் அரசின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் படைத்தவை. அவை நாடாளுமன்ற அங்கீகாரம் பெற்றவை என்பதுடன் நிர்வாகத்தில் மிக முக்கியமானதொரு அம்சமும் கூட. இந்தத் தீர்ப்பாயங்களும், நீதிமன்றங்களைப் போலவே மக்கள் தங்களது குறைகளைத் தீர்த்துக் கொள்ள, தங்களுக்கு இழைக்கப்படும் நியாயமற்ற அரசு ஆணைகளுக்குத் தீர்வு காண அணுகக் கூடியவை. தீர்ப்பாயங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியவை. தங்களது தீர்ப்புக்கு அவர்கள் தகுந்த காரணங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நீதிமன்றத்திற்கும் தீர்ப்பாயங்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. நீதிமன்றங்களைப் போல அல்லாமல், எந்தக் குறிப்பிட்ட காரணத்துக்காகத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அந்தப் பிரச்னை தொடர்பான வல்லுனர்களும் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களது கருத்துகளையும் கேட்டுத்தான் தீர்ப்பாயத் தலைவர் முடிவெடுப்பார்.
நீதிமன்றங்களுக்கும் தீர்ப்பாயங்களுக்கும் இடையே இன்னொரு முக்கியமான வேறுபாடு உண்டு. நீதிமன்றங்களைப் போல, தீர்ப்பாயங்களில் அடிக்கடி வாய்தா வாங்கி, முடிவு எடுக்க விடாமல் ஒத்தி வைக்க முடியாது. அதனால், தீர்ப்பாயங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். தீர்ப்பாயங்களை அமைப்பதற்கு இதுதான் முக்கியமான காரணமும்கூட.
தீர்ப்பாயங்களின் மிகப்பெரிய குறைபாடு, இவை தன்னிச்சையானவையாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் கீழ்தான் செயல்பட்டாக வேண்டும். அதனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் எந்த அளவுக்குக் குறிப்பிட்ட தீர்ப்பாயத்தின்மீது மரியாதை வைத்திருக்கிறாரோ, ஆர்வம் காட்டுகிறாரோ அந்த அளவுக்குத்தான் அந்தத் தீர்ப்பாயத்தின் செயல்பாடும் இருக்கும்.
முன்பே குறிப்பிட்டிருந்த 19 தீர்ப்பாயங்களில் ஐந்து முக்கியமான தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவி நீண்ட நாள்களாக நிரப்பப்படாமலே இருக்கிறது. அதாவது, இந்தத் தீர்ப்பாயங்கள் செயல்படாமலே இருக்கின்றன என்று பொருள். அந்த அமைச்சகம் அல்லது தீர்ப்பாயம் தொடர்பான பிரச்னைகள் தீர்வு காணப்படாமல், மக்கள் அவதிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சைபர் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் என்பது சைபர் குற்றங்கள் குறித்த மேல்முறையீடுகளுக்கான ஒன்று. கடந்த ஜூன் 30, 2011-இல் இதன் தலைவராக இருந்த நீதிபதி ராஜேஷ் தாண்டன் ஓய்வுபெற்றது முதல், யாரும் நியமிக்கப்படாததால் இந்தத் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. மேல்முறையீடுகள் தேங்கிக் கிடக்கின்றன.
2015 நிலவரப்படி 11,592 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்தக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், இவ்வளவு முக்கியமான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் முடங்கிக் கிடக்கிறது என்றால், நமது ஆட்சியாளர்கள் எந்த அளவு பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆட்சி மாறியுமேகூட செயல்பாட்டில் மாறுதல் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
சைபர் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைப் போலவே, ராணுவப் படையினர் தீர்ப்பாயம், தகவல் தொழில்நுட்ப மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வெளிநாடுவாழ் இந்தியர்களின் வருமானவரி விவகார ஆணையம், சந்தைப் போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை தலைவர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றங்களின் நீதிபதி நியமனங்களில் பிரச்னை இருக்கிறது, ஏற்றுக் கொள்வோம். தீர்ப்பாயங்களின் தலைமை நிரப்பப்படாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? இதன் தலைமைப் பொறுப்பில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதாலா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com