தொண்டுக்கும் தேவை தணிக்கை!

ஒருபுறம், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசு செய்ய முடியாத, செய்யத் தவறிய விஷயங்களில்கூட மிகப்பெரிய சமுதாய சேவை செய்து வருகின்றன.

ஒருபுறம், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசு செய்ய முடியாத, செய்யத் தவறிய விஷயங்களில்கூட மிகப்பெரிய சமுதாய சேவை செய்து வருகின்றன. இன்னொருபுறம், நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சேவை என்கிற போர்வையில் வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் நன்கொடை வசூலித்து ஒரு சிலரின் சுகபோக வாழ்க்கைக்கு உதவுகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம், அரசு உதவி பெறும் 30 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு, கள்ளக் கணக்கு எழுதி அரசின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களின்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகளாலும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதியின் குடும்பத்தினர் ஆகியோரால் நடத்தப்படுவன. அரசியல் தொடர்பு மூலம் அரசின் பல்வேறு துறைகளிலிருந்து இந்த நிறுவனங்கள் சேவை செய்வதற்காக நிதி ஒதுக்கீடு பெறுகின்றன. கணக்குத் தணிக்கையாளர்கள் மூலமாகக் கள்ளக் கணக்குகள் எழுதப்பட்டு அந்த நிதி சொந்தச் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுவதும், அது விரைவிலேயே மறக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
உத்தரப் பிரதேசத்தில் இயங்கும் 5.48 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் 1.19 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே முறையான வரவு - செலவு கணக்குகளைத் தாக்கல் செய்கின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் 2.94 லட்சம் நிறுவனங்களில் 186, மேற்கு வங்கத்தில் 2.34 லட்சம் நிறுவனங்களில் 17,089, தமிழகத்தில் 1.55 லட்சம் நிறுவனங்களில் 20,777 மட்டுமே முறையான கணக்கு தாக்கல் செய்கின்றன என்கிறது உச்சநீதிமன்றத்தில் அரசால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒரு புள்ளிவிவரம். கேரளா (13.96 லட்சம்), ராஜஸ்தான் (1.3 லட்சம்), பஞ்சாப் (84,752), தில்லி (76,566) உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கணக்கே தாக்கல் செய்வதில்லை.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிர்வாகம் ஆகியவை குறித்தத் தகவல்களுடன், மார்ச் 31-ஆம் தேதிக்குள் எல்லா நிறுவனங்களையும் முறையாகப் பதிவு செய்வதற்கும், அவர்கள் எப்படி கணக்குக்காட்ட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கும் மத்திய அரசு ஆவன செய்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அரசிடம் நிதியுதவி பெற்று நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்தான் இப்படி என்றால், வெளிநாட்டு நிதியுதவி பெற்று நடத்தப்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள் இதைவிட மோசம். அவர்கள் பெறும் நிதியுதவி, நன்கொடைகளில் சரிபாதிக்கும் குறைவாக மட்டுமே தொண்டுக்கு செலவிடப்படுகிறது. நிர்வாகச் செலவு என்று கணக்குக் காட்டப்படுவதுதான் அதிகம்.
கடந்த ஆண்டு மே மாதம், மத்திய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டிலிருந்து நிதியுதவி, நன்கொடை பெறும் 20,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம் 2010-ஐ மீறியதற்காக ரத்து செய்தது. அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக இந்த நிறுவனங்கள் பழிவாங்கப்படுவதாக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்தன.
வெளிநாடுகளில் இருக்கும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள், நிறுவனங்களிடமிருந்தும், மறைமுகமாகத் தீவிரவாதத்தை வளர்க்கும் எண்ணத்துடன் இயங்கும் அமைப்புகளிடமிருந்தும் நிதியுதவியும், நன்கொடையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவுக்கு அனுப்பப்படுவது பலமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை, அந்நிய நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்க முற்படுவதும், தவறு நேர்ந்திருந்தால் அவற்றைத் தடை செய்வதும் தவிர்க்க முடியாதது என்றுதான் கூற வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மிக அதிகமான அந்நிய நிதியுதவி பெறும் மாநிலம் தமிழகம்தான்.
2013 - 14, நிலவரப்படி தமிழகத்தில் இயங்கும் 1,344 அந்நிய உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் பெற்ற உதவி ரூ.547 கோடி. தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் 1,022 நிறுவனங்கள் மூலம் பெற்ற உதவி ரூ.480 கோடி. கேரளம் (951 நிறுவனங்கள்) ரூ.385 கோடியும், மகாராஷ்டிரம் (734 நிறுவனங்கள்) ரூ.378 கோடியும் பெற்றதாகத் தெரிகிறது. 8,636 தொண்டு நிறு
வனங்கள் மூலம் ரூ.3,784 கோடி அந்த நிதியாண்டில் மொத்தமாகப் பெற்றிருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு அதிகமான நிதியுதவி அமெரிக்காவிலிருந்தும், அதைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டனிலிருந்தும் பெறுவதாக மக்களவைக் குறிப்பு தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்றம் கூறியிருப்பதுபோல, தொண்டு நிறுவனங்கள் கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எல்லா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அந்நிய நன்கொடையை பெற்று அதைத் தவறாக பயன்படுத்துகின்றன என்று கூறிவிடவும் முடியாது. அதனால், அவர்களது செயல்பாடுகள் முடங்கிவிடாமல் இருப்பதையும் நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com