இடைநிலை வரம்புமீறல்!

ஆளுநர்களுக்கு அதிகாரபோதை வரும்போதெல்லாம், ஜனநாயகம் சோதனைக்குள்ளாகிறது. திறமையான காவல்துறை அதிகாரியாக இருந்த புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

ஆளுநர்களுக்கு அதிகாரபோதை வரும்போதெல்லாம், ஜனநாயகம் சோதனைக்குள்ளாகிறது. திறமையான காவல்துறை அதிகாரியாக இருந்த புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அந்த வரிசையில் சேர்ந்து கொள்வது வேதனையாக இருக்கிறது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை குறித்து பிரச்னை ஏற்பட்டாலோ, மிகப்பெரிய அரசியல் சாசன சிக்கல் ஏற்பட்டாலோ மட்டும்தான் ஆளுநர் நிர்வாக நடவடிக்கையில் தலையிடலாமே தவிர, ஆட்சியும் அதிகாரமும் தனது மேற்பார்வையில்தான் நடக்க வேண்டும் என்று முனைந்தால் அது தேவையில்லாத குழப்பத்தையும் சிக்கலையும்தான் உருவாக்கும். புதுச்சேரியில் இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்குக் காரணம் அதுதான்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், இடைநிலை ஆளுநர் என்கிற அந்தஸ்துதான் தரப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், ஏனைய மாநில ஆளுநர்களைப்போல அல்லாமல், இடைநிலை ஆளுநருக்கு சில சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் யூனியன் பிரதேசங்களின் கட்டுப்பாடு உள்துறை அமைச்சகத்திடம் இருப்பதும், மிக பெரிய அளவிலான மத்திய அரசு நிதியுதவி யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்படுவதும்தான்.
கிரண்பேடியின் நல்லெண்ணத்தை சந்தேகிக்க முடியாது. அவருக்கு நிர்வாகம் குறித்துப் பல புதிய சிந்தனைகளும், கருத்துகளும் இருக்கின்றன. தனக்குத் தரப்பட்டிருக்கும் பதவியை பயன்படுத்தி, நிர்வாகத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவும் அவர் முயற்சிக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதே நேரத்தில், ஒரு இடைநிலை ஆளுநராகப் பதவி வகிப்பவர் தனது வரம்பை மீறுகிறார் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தனது அலுவலகம் யூனியன் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்திற்கான தபால் நிலையமாக மட்டுமே செயல்படுவதை தான் விரும்பவில்லை என்று அவர் கருத்துத் தெரிவித்தபோதே, பிரச்னைக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. இடைநிலை ஆளுநராகத் தனது பதவிக்கு அரசியல் சாசனம் சில சிறப்பு அதிகாரங்களை அளித்திருக்கிறது என்கிற அவரது கருத்தில் தவறு காண முடியாது. ஆனால், அந்த அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரமற்றதாகச் செய்யுமேயானால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
புதுச்சேரி அரசின் கடன் சுமை நகர்ப்புற, கிராமப்புற நிதி ஒதுக்கீட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, தான் தலையிடுவதற்குக் காரணம் கூறுகிறார் இடைநிலை ஆளுநர் கிரண்பேடி. தேவைப்பட்டால் சட்டப்பேரவையின் முடிவுகளைக் கடந்து முடிவெடுக்கவும், மாநில நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் தனது கருத்தை உள்படுத்தவும் தயங்க மாட்டேன் என்கிற இடைநிலை ஆளுநர் கிரண்பேடியின் வாதம் ஏற்புடையதல்ல. குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக யூனியன் பிரதேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தனக்குத் தரப்பட்டிருப்பதாக கிரண்பேடி கருதுகிறார்.
இடைநிலை ஆளுநருக்குத்தான் எல்லா அதிகாரமும் என்றால், புதுச்சேரியில் ஒரு சட்டப்பேரவைக்கான அவசியம்தான் என்ன? எதற்காக தேர்தல், முதலமைச்சர், அமைச்சரவை எல்லாம்? அமைச்சரவையின் முடிவுகளை நிராகரிக்க, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இடைநிலை ஆளுநர் முடிவெடுப்பார் என்றால், சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சி மூலம் நிர்வாகம் நடத்தப்படலாமே!
சம்பந்தப்பட்ட அமைச்சர்களை ஒதுக்கிவிட்டுகிரண்பேடி நேரிடையாக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதும், கட்செவி அஞ்சல் குழுவை ஏற்படுத்தி அதிகாரிகளுக்கு ஆணையிடுவதும், கருத்துப் பரிமாறுவதும் அமைச்சரவையை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. மக்கள் மன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, ஆளுநரோ அதிகாரவர்க்கமோ ஜனநாயகத்தில் செயல்பட்டுவிட முடியாது.
கிரண் பேடியால் தேர்தலில் வெற்றிபெற்று தில்லி முதலமைச்சராக முடியாத ஆதங்கத்தை, இடைநிலை ஆளுநர் பதவி மூலம் தீர்த்துகொள்ள முயற்சிப்பது மிகமிகத் தவறு. இதற்கு பதிலாக புதுச்சேரி அமைச்சரவையுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு தனது வளர்ச்சித் திட்டங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் அந்த அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கி புதுச்சேரியை மேம்படுத்துவதுதான் இடைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கெளரவம் சேர்க்கும். பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்குப்பதிலாக தானே பிரச்னையாக மாறிவிட்டிருக்கிறார் இடைநிலை ஆளுநர் கிரண்பேடி.
வெறும் ஆறு லட்சம் மக்கள்தொகை மட்டுமே உள்ள 32 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம், மாநில அந்தஸ்துடன் செயல்படுகிறது. 13.8 லட்சம் மக்கள்தொகையுள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையுடன் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. 14.57 லட்சம் மக்கள்தொகையுள்ள கோவா தனி மாநிலமாக 40 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையுடன் இயங்குகிறது. ஆனால், 12.44 லட்சம் மக்கள்தொகையுடன் 37 பேர் உறுப்பினர்களாக உள்ள சட்டப்பேரவையுடன் இயங்கும் புதுச்சேரி மட்டும் ஏன் யூனியன் பிரதேசமாகத் தொடர வேண்டும் என்பது புதிராக இருக்கிறது.
தலைநகர் தில்லி யூனியன் பிரதேசமாக இருப்பதில் அர்த்தமிருக்கிறது. பல வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்படுவதாலும், மத்திய அரசின் அதிகார மையம் என்பதாலும் தேசத்தின் தலைநகர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், புதுச்சேரி இன்னமும் ஏன் யூனியன் பிரதேசமாத் தொடர வேண்டும் என்று தெரியவில்லை. புதுச்சேரியை முழு அதிகாரம் படைத்த மாநிலமாக அறிவிப்பதை இனியும் தள்ளிப்போடக்கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com