மாற்றமா? ஏமாற்றமா?

உலகின் மிகப்பெரிய பணக்கார வல்லரசான அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்க இருக்கிறார்

உலகின் மிகப்பெரிய பணக்கார வல்லரசான அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்க இருக்கிறார். புதிதாக அமெரிக்க அதிபராக ஒருவர் பதவி ஏற்கிறார் என்றால் அமெரிக்காவே விழாக்கோலம் பூணும். புதிய அதிபரை வாழ்த்த நாடு தழுவிய அளவில் மக்கள் வாஷிங்டனில் வந்து குவிவது வழக்கம். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் பராக் ஒபாமாவின் பதவி ஏற்புக்கு ஏறத்தாழ 18 லட்சம் பேர் கூடினார்கள்.
அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேர் பதவி ஏற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். சுமார் பத்து லட்சம் பேர் வாஷிங்டனில் கூட இருப்பது என்னவோ உண்மை. ஆனால், அது புதிய அதிபருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக அல்ல; தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக!
தேர்தலில் கருத்துக்கணிப்பு, வாக்குக்கணிப்பு நடத்துவதுபோல, அமெரிக்காவில் அதிபர்கள் பதவி ஏற்கும்போது, மக்களிடம் அங்கீகாரக் கணிப்பு நடத்துவார்கள். புதிய அதிபர் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது, எந்த அளவுக்கு அவர் மக்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறார் போன்றவற்றை இந்த அங்கீகாரக் கணிப்பு பிரதிபலிக்கும். பில் கிளிண்டனுக்கு 68%, ஜார்ஜ் புஷ்ஷுக்கு 61%, பராக் ஒபாமாவுக்கு 83% மக்களின் அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மக்களின் அங்கீகாரத்தைவிட எதிர்ப்பு மனநிலைதான் அதிகமாகக் காணப்படுகிறது. 44% பேர் அவர் அதிபராவதை அங்கீகரித்திருக்கிறார்கள். அதாவது 56% பேர் எதிர்க்கிறார்கள். அவர்மீது நம்பிக்கை வைக்க மறுக்கிறார்கள்.
அமெரிக்கா பல தரப்பட்ட கலாசார இனங்களை ஏற்றுக்கொண்ட நாடு. ஒருவிதத்தில் அமெரிக்கர்கள் அனைவருமே குடியேறிகள்தான். ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் அமெரிக்காவின் பூர்வ குடியினரான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்துத் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களது வசதிக்காகவும், வேலைக்காகவும் கருப்பர் இனத்தவரை ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டு வந்தனர். கூலிவேலை செய்வதற்காக தென்னமெரிக்காவிலிருந்தும் வேலையாட்களை அமர்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் சுதந்திரம் பெற்று அமெரிக்கக் குடிமக்களாகிவிட்டனர். அதுவரை அமெரிக்காவில் பிரச்னை இல்லை.
பொருளாதாரம் சற்று சரிந்தபோது, வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியது. ஆசியாவிலிருந்தும், மெக்ஸிகோவிலிருந்தும் குடியேறுபவர்களால், பல அமெரிக்கர்கள் வேலையிழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் அடித்தட்டுத் தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பாதுகாப்புத் தருவதாக டொனால்ட் டிரம்ப் அளித்த வாக்குறுதிதான் அவரை அதிபராக்கி இருக்கிறது. அதனால் அமெரிக்காவின் நடுத்தர, உயர்தட்டு வர்க்கத்தினர் டொனால்ட் டிரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எதிரான அங்கீகாரக் கணிப்பு இப்படியானதற்கு காரணம் அதுதான்.
டொனால்ட் டிரம்ப் அடிப்படையில் அரசியல்வாதியல்ல. அவர் பொது வாழ்க்கைக்கு வந்ததே ஒரு விபத்து. மனைவணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்த டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரை எதிர்த்து நின்ற பலமான வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகிவிட்டதால், குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கட்சித் தொண்டர்கள், அனுதாபிகள் ஆதரவு அவருக்குக் கிடையாது. அதனால்தான், அவருக்கு ஆதரவாகப் பதவி ஏற்புக்குப் பெருந்திரளாக மக்கள் வரவில்லை.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதால், அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டங்களுக்குப் பெரிய தடை இருக்காது என்று நம்பலாம். அதே நேரத்தில், குடியரசுக் கட்சியினரில் பலரும் டொனால்ட் டிரம்பின் கருத்துடன் ஒத்துப்போகிறவர்களாக இல்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
அதிபர்கள் மாறினாலும், வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா இதுவரை தடாலடி மாற்றங்களை எதிர்கொண்டதில்லை. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான அமெரிக்க உறவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுமானால், அது இந்தியாவுக்கு நன்மையாகத்தான் அமையும். அதேபோல, ரஷியாவுடன் அதிபர் டிரம்ப் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டால், அதுவும் இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்கும்.
இந்தியாவைப் பொருத்தவரை, பிரச்னையாக இருக்கப் போவது நுழைவு அனுமதி (விசா) குறித்த அதிபர் டிரம்பின் கண்ணோட்டமாகத்தான் இருக்கும். அமெரிக்க நுழைவு அனுமதி கோருபவர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்தான். இந்தியாவிலிருந்து நுழைவு அனுமதி கோரும் தொழில்நுட்பத் துறையினரால், அதிபர் டிரம்புக்கு வாக்களித்த அடிமட்டத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கமாட்டார்கள் என்பதை இந்திய அரசு புதிய டிரம்ப் நிர்வாகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.
"நம்மால் முடியும்' என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் கோஷத்துடன் தேர்தல் களத்தில் இறங்கினார் பராக் ஒபாமா என்றால், அமெரிக்க அடிப்படைவாதத்தை முன்வைத்து எதிர்மறை சிந்தனையை எழுப்பித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப்.
எதிர்பாராதவிதமாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவி ஏற்கும் டொனால்ட் டிரம்ப், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது வெறுப்பு அரசியலைக் கைவிட்டு அனைவரையும் அரவணைத்துச் செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com