வெற்றிதான், ஆனால்...!

தமிழக சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை விலக்கப்பட்டுவிட்டது.

தமிழக சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை விலக்கப்பட்டுவிட்டது. காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளை அகற்றப்பட்டு, தமிழகத்தில் இனிமேல் தடையில்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் என்று எடுக்கப்பட்ட இந்த முடிவை எப்போதோ எடுத்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கே தேவை இருந்திருக்காது.
எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் கொதித்தெழுந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்து உலகமே வியந்தது. தமிழுணர்வுடன் இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்களது ஆறு நாள் அறப்போராட்டத்தை எப்படியும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுவிட வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், தேசவிரோத சக்திகளும் மறைமுகமாக முயற்சி செய்யாமலில்லை.
தங்களுடைய போராட்டத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுவிடலாகாது என்பதில் இளைஞர் கூட்டம் கவனமாகவே இருந்தது. அப்படியும்கூட, கடைசி இரண்டு நாட்களில் நடந்திருக்கும் நிகழ்வுகள் மாணவர்களின், இளைய தலைமுறையின் தூய்மையான எண்ணத்துக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் நடந்ததற்கு, இந்தப் போராட்டத்தில் திட்டமிட்டு ஊடுருவிவிட்ட அரசியல் கட்சிகளும், தேசவிரோத சக்திகளும்தான் காரணம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு, தேசியக்கொடி எரிக்கப்பட்டபோதே, புல்லுருவிகள் நுழைந்துவிட்டிருப்பதும், மாணவர் எழுச்சியை மோடி அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற முற்பட்டிருப்பதும் தெரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஆளும் கட்சியில் பிளவு ஏற்படும், அதை பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என்று நினைத்து ஏமாந்தவர்கள், இந்தப் போராட்டத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதன் மூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சட்டப்பேரவையில் மசோதாவும் நிறைவேற்றப்படும் சூழலில், போராட்டம் கைவிடப்பட்டிருப்பதுதான் நியாயம். கோரிக்கை வெற்றியடைந்த பிறகும், ஏதாவது காரணம் கூறி அதை முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பதற்கு முயற்சித்ததன் விளைவுதான் சென்னையில் நடந்தேறி இருக்கும் வன்முறை, கலவரங்கள். இதில் ஈடுபட்டவர்கள் எவருமே மாணவர்களோ, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களோ அல்ல என்பதை ஊடகக் காட்சிகள் தெளிவுபடுத்தின.
அப்படியானால் அவர்கள் யார்? அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள் என்றால், வன்முறை திட்டமிடப்பட்டிருந்தது என்றுதானே அர்த்தம்? காஷ்மீரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசும் அதே போராட்டமுறையை இங்கே நிகழ்த்த முற்பட்டிருப்பவர்களின் பின்னணி என்ன? சென்னையில் ஒவ்வொரு தெரு முனையிலும், போராட்டத்துடன் தொடர்பே இல்லாதவர்கள் அணிதிரட்டப்பட்டு கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டார்களே, அவர்களைத் தூண்டிவிட்டது யார்? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
மாணவர்களின் எழுச்சியால்தான் ஜல்லிக்கட்டு பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது என்பது உண்மை. யாரும் மறுக்க முடியாது. ஆனால், அது அறப்போராட்டமாகவே இருந்தாலும்கூட இப்படிப்பட்ட போராட்டங்கள் சரிதானா என்றால் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களாட்சியில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், வழிமுறைகளும் இருக்கும்போது, பிரச்னைகளுக்குத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதுதான் தீர்வாக இருக்கும் என்றால், சட்டத்தின் ஆட்சி என்பதே கேலிக்கூத்தாகி விடும்.
ஒவ்வொரு பிரச்னைக்கும் சமூக வலைதளங்களின் மூலம் ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிப் போராடத் தொடங்கிவிட்டால், பிறகு அரசு எதற்கு, ஆட்சி எதற்கு, நிர்வாகம்தான் எப்படி நடக்கும் என்பதை அரசியல்கட்சித் தலைவர்களும், ஊடகத்தினரும், உணர்ச்சியால் மட்டுமே வழிநடத்தப்படும் இளைஞர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது பாரம்பரிய மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதை ஜல்லிக்கட்டால் மட்டும் உறுதிப்படுத்திவிட முடியாது. நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லாமல் இருந்தால்தானே அவற்றைப் பாதுகாக்க முடியும். குறைந்தபட்சம், நாட்டு மாடுகளுக்கு மட்டுமாகவாவது பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் ஜல்லிக்கட்டுக்குக் காளைகள் இருக்காது என்பதை மறந்துவிடக் கூடாது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து "நான் தமிழன்டா!', "நான் தமிழச்சிடா!' போன்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இதே உணர்வுடன் அவர்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வி கற்க அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் "மம்மி', "டாடி' என்று அழைக்கும் கலாசாரத்தைக் கைவிட வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மட்டுமே. அந்த அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு தமிழைக் கைவிட்டுக் கொண்டிருக்கிறோமே, அதுதான் மிகப்பெரிய சோகம். அதை உணர வேண்டும்.
போராட்டத்தை முதல் ஐந்து நாட்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் வழிநடத்தியவர்களுக்கு தமிழகம் தலைவணங்கி நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், இந்தப் போராட்டம் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி, எதற்கெடுத்தாலும் தெருவில் இறங்கிப் போராடுவது என்கிற நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது. அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகம் வன்முறைக் களமாகிவிடக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com