ஏன் முடியாது?

உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது, தகவல் தொலைத்தொடர்பில் அதிவேக முன்னேற்றம், உயர்கல்விச் சாலைகள் அமைப்பதில் போட்டா போட்டி, சர்வதேச அளவிலான எல்லா நவீன வசதிகளும் இங்கேயே

உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது, தகவல் தொலைத்தொடர்பில் அதிவேக முன்னேற்றம், உயர்கல்விச் சாலைகள் அமைப்பதில் போட்டா போட்டி, சர்வதேச அளவிலான எல்லா நவீன வசதிகளும் இங்கேயே உற்பத்தியாவது என்று ஒருபுறம் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரத்தில், அடிப்படைக் கல்வி, அடிப்படை சுகாதாரம், கிராமப்புற முன்னேற்றம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாமல் பின்தங்கிய நிலைமைதான் இன்றும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா வல்லரசாக மாறுவது என்பது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.
யுனிசெப் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தி இருக்கும் புள்ளிவிவரம் நம்மைத் திடுக்கிட வைக்கிறது. தெற்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில், சிசு மரண எண்ணிக்கை விகிதத்தில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது என்றால், அதைவிடத் திடுக்கிட வைக்கும் செய்தி என்னவாக இருக்க முடியும்? நம்மைவிட பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
தெற்கு ஆசியாவில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளில் சிறிய நாடுகள் சுகாதாரத்தில் அடைந்திருக்கும் வெற்றியை பெரிய நாடுகளால் அடைய முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, நமது சுகாதாரக் கட்டமைப்பு, அரசின் முனைப்பு இரண்டிலுமே ஏதோ மிகப்பெரிய ஒரு குறை இருப்பதைத்தான் இந்த அறிக்கை முடிவுகள் எடுத்துரைக்கின்றன.
கடந்த 2015-ஆம் ஆண்டில் தெற்காசியாவிலுள்ள எட்டு நாடுகளிலும் சேர்த்து, பிறந்த 28 நாட்களில் மரணமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் அதிகம். இதில் ஏழு லட்சம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்து மரணமடைந்தவை. சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால், 26% சிசு மரணங்கள் இந்தியாவில்தான் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது யுனிசெப் நிறுவனத்தின் புள்ளிவிவரம்.
இந்த அளவுக்கு அதிகமான சிசு மரணங்களின் பின்னால், அந்தக் குழந்தைகளைப் பெற்ற இளம் தாய்மார்களின் நிலைமையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே அளவில் இல்லையென்றாலும், பேறுகால மரணங்களின் விகிதமும் ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக தெற்கு ஆசியாவில்தான் அதிகம் காணப்படுகிறது.
நேபாளம், வங்க தேசம், பூடான் ஆகிய மூன்று நாடுகளும் சிசு மரணத்தைத் தடுப்பதில் மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கின்றன. டிப்தீரியா, பெர்டூசிஸ், டெடனஸ் ஆகிய மூன்றுக்குமான தடுப்பூசியின் பெயர் டிடிபி3. பூடானில் 99%, வங்க தேசத்தில் 94% இந்தத் தடுப்பூசி போடப்படும்போது, இந்தியாவில் 87% மட்டுமே இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. நமது மத்திய - மாநில அரசுகள் முழு முனைப்புக் காட்டி, பிறக்கும் அத்தனை சிசுக்களுக்கும் இந்தத் தடுப்பூசி போடப்படுவதை உறுதிப்படுத்தினால் சிசு மரண விகிதத்தைக் கணிசமாகக் குறைத்துவிட முடியும்.
இது மட்டுமல்லாமல், குறைந்த செலவிலான பல வழிமுறைகளை உறுதிப்படுத்தி சிசு மரணத்தைத் தடுத்துவிட முடியும். பிரசவகால மருத்துவ உதவியும், தாய்ப்பால் கொடுப்பதும் உறுதிப்படுத்தப்பட்டாலே சிசு மரணம் கணிசமாகத் தடுக்கப்பட்டுவிடும் என்று தோன்றுகிறது.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பாகச் செயல்படுவதுடன், அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் கிராமப்புறம் வரை பிரசவகால மருத்துவ உதவியை உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஆனால், பல பின்தங்கிய மாநிலங்களில் சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட பல கிராமங்களில் முறையான மருத்துவ வசதி இல்லாத நிலைமையே காணப்படுகிறது.
இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், கிராமப்புறங்களில் பொது மருத்துவ வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பது. பல மாநிலங்களில் அரசின் நிதி ஒதுக்கீடு நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதே தவிர ஊரகப் பகுதிகளில், தென்னிந்தியாவில் இருப்பதுபோல ஆரம்ப சுகாதார நிலையங்கள் பரவலாக செயல்படும் நிலைமை இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களும், கிராமப்புற செவிலியர்களின் திறமையான செயல்பாடுகளும் மட்டுமே சிசு மரணத்தையும், பிரசவகால மரணத்தையும் தடுப்பதற்கான வழிகள்.
தனியார்மயம் என்கிற மாயையில் சிக்கி, சுகாதாரத்தை அரசு கைவிடுமேயானால், நிலைமை மேலும் மோசமாகுமே தவிர நிச்சயமாக மாற்றம் ஏற்படாது. அரசு கணிசமான முதலீட்டை முறையான மருத்துவ சேவைக்கு ஒதுக்கி, வசதி இல்லாத தாய்மார்கள் போதிய மருத்துவ உதவியைப் பேறு காலத்தில் பெறுவதை உறுதி செய்வது மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.
பொது சுகாதாரத் திட்டத்தின்கீழ், கிராமப்புற சுகாதார ஊழியர்கள் பரவலாக நியமிக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதிய மருத்துவர்களுடனும், மருத்துவ உபகரணங்களுடனும் செயல்படுவதை உறுதிப்படுத்தாமல், பேறுகால, சிசு மரணங்களைத் தடுப்பது என்பது இயலாத காரியம். நம்மால் போலியோ தடுப்பை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்போது, இது ஒன்றும் இயலாததல்ல. சிசு மரணத்தைத் தடுப்பதில் நேபாளமும், பூடானும் வெற்றிபெற முடியுமானால், இந்தியாவால் ஏன் வெற்றிபெற முடியாது?
எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது. இந்தியா விழித்துக் கொண்டாக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com