நிவாரணம்தான்.. தீர்வல்ல!

இந்தியாவில் பணக்காரர்களும், ஏழைகளும், கடனை ரத்து செய்வதற்கு

இந்தியாவில் பணக்காரர்களும், ஏழைகளும், கடனை ரத்து செய்வதற்கு வரிசையில் நிற்கிறார்கள். பணக்காரர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக் கோருகிறார்கள் என்றால், ஏழை விவசாயிகள் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு போராடுகிறார்கள். இடையில், முறையாக தாங்கள் வாங்கிய கடனுக்கான தவணையைக் குறித்த நேரத்தில் செலுத்திக் கொண்டு மற்றவர்களுடைய கடன் தள்ளுபடியின் சுமையையும் ஏற்றுக் கொள்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். இதுதான் இன்றைய நடைமுறை உண்மை.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடியை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றால், விவசாயக் கடன் தள்ளுபடியைத் தவறு என்று ஒதுக்கிவிடவும் முடியாது. விவசாயிகளின் இன்றைய நிலைமைக்கு அரசாங்கத்தின் தவறான திட்டமிடலும், இயற்கையின் வஞ்சனையும்தான் காரணம் என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி கூறுவதுபோல விவசாயக் கடன் தள்ளுபடி தவறான முன்னுதாரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விவசாயக் கடன் தள்ளுபடி என்பது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியால் தரப்பட்ட வாக்குறுதி. அப்போது விதைத்த விதை மரமாக வளர்ந்து அதன் வேர்கள் பல்வேறு மாநிலங்களுக்குப் பரவிவிட்டிருக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடிக்காகப் போராடும் 9 மாநிலங்களின் மொத்தக் கடனையும் சேர்த்து பார்த்தால் ரூ.3,10,000 கோடி வருகிறது. அதாவது தேசிய அளவில் சாலைகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையைவிட 5 மடங்கு; மொத்த உர மானியத்தைவிட 4 மடங்கு; உணவு மானியத்தைவிட 2 மடங்கு; மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறையைவிட 43 விழுக்காடு அதிகம்.
முதலில், உத்தரப் பிரதேசம் ரூ.36,359 கோடி விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக அறிவித்தது. ரூ.1 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தொகை ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரமும் விவசாயக் கடன் ரத்தை அறிவித்தது. அதன்மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ.34,000 கோடி. ஏறத்தாழ 90% விவசாயிகளின் கடனும் மகாராஷ்டிராவில் ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப் ஒருபடி மேலேபோய் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளின் கடனை ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இப்போது கர்நாடகம் ரூ.50,000 வரையிலான விவசாயக்கடனை ரத்துசெய்வதாக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அறிவித்திருக்கும் விவசாயக் கடன் தொகை ரூ.7,000 கோடி.
விவசாயக் கடனை ரத்து செய்வதால் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களுக்கும் ஆகும் மொத்த இழப்பு ரூ.85,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எந்தவிதத்திலும் உதவ முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், இந்த மாநிலங்கள் கடன் தள்ளுபடிக்கான தொகையை எப்படி ஈடுகட்டப் போகின்றன அல்லது கடன் வாங்கப் போகின்றன என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவான விவரமும் இல்லை.
இந்திய விவசாயிகள் சோதனையான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள். 2014-15, 2015-16 நிதியாண்டுகளில் பருவமழை பொய்த்ததால் வறட்சியை எதிர்கொண்டனர். நடப்பாண்டில் பல மாநிலங்களில் போதுமான அளவு மழை இருந்தது. விளைச்சலும் வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. ஆனால், செலாவணி செல்லாததாக்கப்பட்டதன் விளைவாலும், அதிகரித்த உற்பத்தியாலும் விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காத நிலைமை. இப்போது ஏற்பட்டிருக்கும் விவசாயிகளின் பிரச்னைக்கு அரசின் திட்டமிடாமைதான் மிகப்பெரிய காரணம். அவர்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டிருக்கிறது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தால் அது நகர்ப்புற மக்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் பாதிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் அரசால் வஞ்சிக்கப்படுகிறார்கள். அரசு பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற பொருள்களின் ஏற்றுமதியையும், உள்நாட்டில் மாநிலம் விட்டு மாநிலம் விற்பனை செய்வதையும் தேவையில்லாமல் தடுக்கிறது. இரும்பு உருக்கு, மென்பொருள் ஆகியவற்றுக்கு இதுபோல எந்தவிதத் தடையும் இல்லாமல் இருக்கும்போது, உணவு பொருள்களின் விற்பனைக்கு மட்டும் இத்தனை தடைகள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
விவசாயப் பொருள்களின் இறக்குமதி குறித்து அரசு புதிய கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பொருள்களின் மீதான இறக்குமதி வரி, உலக வர்த்தக நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுக்காட்டைவிடக் குறைவாகவே இருக்கிறது. இறக்குமதிகளால், உள்ளூர் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு போதுமான விலையைப் பெற முடியவில்லை. இறக்குமதி வரியை அதிகரிக்கும்போது அந்நிய செலாவணியும் மிச்சமாகும், உள்ளூர் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இதுகுறித்து சிந்திக்க அரசு ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை.
விவசாயிகளின் பிரச்னை வறட்சியோ, போதுமான விலை கிடைக்காமையோ மட்டுமே அல்ல. அவர்களுக்குத் தரப்படுகின்ற ஆதார விலையும்கூடப் பிரச்னையல்ல. அவர்களுடைய உண்மையான பிரச்னை போதுமான பாசன வசதி இல்லாமல் இருக்கும் தவறான விவசாய முறைகள், போதுமான காப்பீட்டு வசதி இல்லாமை உள்ளிட்டவைதான்.
விவசாயக் கடன் தள்ளுபடியால் மட்டும் அவர்களது பிரச்னை தீர்ந்துவிடாது. அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு லாபத்துடன் கூடிய விலை கிடைக்கப்பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது இடைக்கால நிவாரணியாகத்தான் இருக்குமேதவிர, பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்காது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com