பிரதமருக்கு அழகல்ல!

சந்தேகத்துக்கிடமான தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் 1 லட்சத்துக்கு

சந்தேகத்துக்கிடமான தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் பட்டியலிடப்பட்ட கணக்காளர்கள் (சார்ட்டர்ட் அக்கெளன்டன்ட்ஸ்) நிறுவனத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கியில் பணம் போட்டதன் விவரங்களின் அடிப்படையில் நடத்திய விசாரணையிலிருந்து சந்தேகத்துக்குரிய 1 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. நிறுவனங்களின் பதிவாளர் இந்த 1 லட்சம் நிறுவனங்களின் பதிவையும் ரத்து செய்திருக்கிறார் என்பது துணிச்சலான நிர்வாக முடிவு. மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மீதும், சுமார் 38 ஆயிரம் நிழல் (ஷெல்) நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 1 லட்சம் போலி நிறுவனங்களின் தலையெழுத்தை ஒரு கையொப்பத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது வரவேற்புக்குரியது.
2016 நவம்பர் 8-ஆம் தேதி செலாவணி செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிகளில் போடப்பட்ட பணம் யாரால் எப்படி எதற்காக போடப்பட்டது என்கிற விசாரணை தொடர்வதாக அவர் கூறியிருக்கிறார். இதற்கு இத்தனை காலம் ஏன் தேவைப்படுகிறது என்பது புரியவில்லை.
அதேபோல ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சி தொடர்கிறது என்றும், பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஸ்விஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் இந்தியக் கருப்புப் பணம் 45% குறைந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் அவர். 2013-இல் 42% அதிகரித்த ஸ்விஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் பணம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 45% குறைந்திருக்கிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டிருக்கிறது, அல்லது கருப்புப் பணம் பதுக்குவோர் ஸ்விஸ் வங்கிகளை விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் இன்னொரு தகவல் நீண்டகாலமாகவே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. நகர்ப்புறங்களில் கோடிக்கணக்கான பங்களாக்களும், ஏறத்தாழ எட்டு லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்களும், பட்டியலிடப்பட்ட கணக்காளர்களும், 2 கோடிக்கும் அதிகமான பொறியாளர்களும், நிர்வாகவியல் பட்டதாரிகளும் இந்தியாவில் இருக்கிறார்கள். 2.18 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு கடந்த ஆண்டு மட்டுமே சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் 125 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் வெறும் 32 லட்சம் பேர் மட்டும்தான் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் இருப்பதாகக் கணக்கு காட்டி வரி செலுத்துகிறார்கள். முறையாக வரி செலுத்துபவர்கள் நடுத்தர வர்க்கத்தினரும், மாத ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே என்கிற பிரதமர் மோடியின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. முதல் முறையாகப் பிரதமர் ஒருவர் இந்த நிதர்சனத்தை உணர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இதையெல்லாம் கூறிவிட்டு விவாதத்துக்குரிய இன்னொரு கருத்தையும் கூறியிருக்கிறார். லட்சக்கணக்கான நிறுவனங்கள் கறுப்புப் பணத்தை வங்கிக் கணக்கில் கொண்டு வருவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்கும் பட்டியலிடப்பட்ட கணக்காளர்கள் (சார்ட்டர்ட் அக்கெளன்டன்ட்ஸ்) உதவுகிறார்கள் என்றும் அப்படி உதவும் கணக்காளர்கள் பட்டியலிடப்பட்ட கணக்காளர்கள் நிறுவனத்திலிருந்து அகற்றப்பட வேண்டாமா என்றும் ஒரு விநோதமான கேள்வியை அவர்கள் மத்தியில் பிரதமர் எழுப்பியிருப்பது வியப்பை அளிக்கிறது.
தவறு செய்பவர்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறார்கள். குற்றவாளிக்காக வழக்குரைஞர்கள் வாதாடக் கூடாது என்றும், தவறான முறையில் தொழில் செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட கணக்காளர்கள் கணக்குத் தணிக்கை செய்து தரக்கூடாது என்றும் பிரதமர் கூற முற்படுகிறாரா? இவர்கள் தாக்கல் செய்யும் கணக்குகள் முறையானதாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக, மக்கள் வரிப்பணத்தில் வருமானவரித் துறை இயங்கும்போது அவர்கள் மீது குற்றம் காணாமல் பட்டியலிடப்பட்ட கணக்காளர்களைப் பிரதமர் விமர்சிப்பது என்ன நியாயம்?
பிரதமர் குறிப்பிட்ட தவறான வழியில் தொழில் நடத்தும் லட்சக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் கருப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்திக் கணக்கில் கொண்டு வந்ததன் பின்னணியில் பல வங்கி அதிகாரிகளும், வருமானவரித் துறை அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை பிரதமரால் மறுக்க முடியுமா? அவர்கள் உதவியில்லாமல் பட்டியலிடப்பட்ட கணக்காளர்களின் துணையோடு கருப்புப் பணத்தை வங்கிகளில் அந்த நிறுவனங்கள் போட்டிருக்கத்தான் முடியுமா? அந்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அவர்களைப் பதவியிலிருந்து அகற்றிவிடத்தான்
முடியுமா?
தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் பல நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பின்னணியோடும் அதிகாரிகளின் ஆசீர்வாதத்தோடும்தான் செயல்படுகின்றன என்பது உலகறிந்த உண்மை. பிரதமர் பட்டியலிடப்பட்ட கணக்காளர்களை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஆள்காட்டி விரலைப் பட்டியலிடப்பட்ட கணக்காளர்களை நோக்கி நீட்டி பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தும்போது மற்ற மூன்று விரல்கள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், வங்கித் துறையினர் ஆகியோரை நோக்கி இருப்பதை பிரதமர் ஏனோ மறந்துவிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com