போர் தீர்வாகாது!

இந்தியா, சீனா, பூடான் மூன்று நாடுகளும் இணையும் டோகா லா முச்சந்தியில்

இந்தியா, சீனா, பூடான் மூன்று நாடுகளும் இணையும் டோகா லா முச்சந்தியில் ஜூன் 16-ஆம் தேதி முதல் பதற்றம் நிலவுகிறது. சீன - பூடான் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் 269 சதுர கி.மீ. நீளமுள்ள பகுதிதான் டோகா லா. இந்தப் பகுதிக்கு 1980-முதல் சீனா சொந்தம் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. இதுவரையிலும் சீனா எந்தவித ஊடுருவலோ தாக்குதலோ அங்கே நடத்தவில்லை. இப்போதுதான் முதல் முறையாக அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி சீனா ஊடுருவ முற்பட்டபோது இந்தியப் படைகள் பூடானின் எல்லைக்குப் பாதுகாப்பாக நின்று தடுத்திருக்கிறது.
இந்திய ராணுவம் டோகா லா பகுதியில் சாலைப் பணிகளில் ஈடுபட முற்பட்ட சீனாவின் மக்கள் விடுதலைப் படை வீரர்களைத் தடுத்து நிறுத்தியது. இதனால் ஆத்திரப்பட்டு நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களை சீன ராணுவம் தடுத்துவிட்டிருக்கிறது. 2014-இல் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது நல்லெண்ணத்தின் அடையாளமாகக் கைலாஷ் மானசரோவருக்கான இந்தியப் புனிதப் பயணிகளுக்கு இந்தப் பாதையை திறந்துவிடுவதாக அறிவித்தார். 2015 முதல் இந்தப் பாதை கைலாஷ் மானசரோவருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணிகளின் குழுவினர் நாது லாவை வந்தடையும் நேரத்தில் சீனா அந்தப் பாதையை தடுத்திருப்பது ஏதோ திடீர் நடவடிக்கை அல்லது திடீர் முடிவு என்று கூறிவிட முடியாது.
சில நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கை கஜகஸ்தானில் சந்தித்தார். அப்போது இருவருக்குமிடையில் காணப்பட்ட நெருக்கமும் நட்புறவும் வெறும் மாயை என்பதை சீனாவின் இந்த முடிவு தெரிவிக்கிறது. 2014-இல் அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கிடையே மிக அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு தலைகீழாக மாறியிருக்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான உறவு மெல்ல மெல்ல பலவீனமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய - சீன உறவில் உரசல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கிடையேயான பிரச்னைகள் மேலும் வலுவடைவதும் இருதரப்புக்குமிடையே சந்தேகங்கள் அதிகரிப்பதுமாக இருக்கிறது. பாகிஸ்தான் உடனான சீன உறவு இதற்கு மிக முக்கியமான ஒரு காரணம். இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் மீதெல்லாம் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு மறைமுக அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் உடனான சீனாவின் நெருக்கம் காரணமாக இந்திய - சீன உறவை வலுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது போலவே, அமெரிக்காவுடனான இந்திய நெருக்கம் சீனாவை சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்திய - சீன - பூடான் முச்சந்தியில் சீன எல்லைப் பிரச்னையை நாம் அணுக வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக இந்தியாவின் கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றநிலை உண்மையிலேயே கவலையளிப்பதாக இருக்கிறது. 1962 இந்திய - சீன போருக்குப் பிறகு இந்த அளவுக்கு எல்லைப்புறத்தில் நீண்ட பதற்றம் தொடர்ந்ததில்லை. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையொட்டி இந்தப் பதற்றம் ஏற்பட்டிருப்பது எதிர்பாராத ஒன்று.
2003-இல் இந்திய - சீன எல்லை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டபோது சிக்கிமை இந்திய மாநிலங்களில் ஒன்றாக சீனா ஏற்றுக்கொண்டது. அப்படியிருக்கும் நிலையில் சிக்கிம் - பூடான் எல்லையையொட்டிய பகுதியில் சீனா பிரச்னையை ஏற்படுத்திப் பதற்றத்தை உருவாக்குவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
டோகா லா வழியாக சீன எல்லைக்குட்பட்ட திபெத்திய தலைநகர் லாசாவுக்கும் நாதுலா கணவாய்க்கும் இடையே சாலை அமைக்கும் பணியில் சீனா இறங்கியிருக்கிறது. அதேபோல அந்த வழியாக ரயில் பாதை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் டோகா லா பகுதியில் இந்திய ராணுவம் பூடானுக்குப் பாதுகாப்பாக இருப்பது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை. எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி பூடானிடமிருந்து 269 சதுர கி.மீ. பரப்புள்ள டோகா லாவை தனதாக்கிக் கொள்வதன் மூலம் தனது சாலை, ரயில் பாதை பணியை எந்தவித பிரச்னையும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற சீனாவின் எண்ணத்துக்கு இந்திய ராணுவம் தடையாக இருக்கிறது.
இந்தியாவுடனான பூடானின் உறவை துண்டிக்கும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம். 1947 முதல் இந்தியாவும் பூடானும் மிகவும் நெருக்கமான ராஜீய உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2007-இல் பூடான் இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி பூடானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
1962-இல் நடந்த இந்திய - சீன போரின்போது இருந்த நிலையில் இந்தியாவும் சீனாவும் இன்று இல்லை. மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக மாறியிருக்கும் இந்த நிலையில் இரு நாடுகளுக்குமிடையே நட்புறவு இல்லாவிட்டாலும் நல்லுறவு இல்லாமல் போனாலோ, போர் மூண்டாலோ அதன் விளைவால் இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். இதை நினைவில் கொண்டு எல்லைப்புறத்தில் உள்ள பதற்றத்தை அகற்றுவதற்கு பெய்ஜிங்கும் புதுதில்லியும் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com