கூட்டணியில் இஸ்ரேல்?

இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வது இதுதான்

இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வது இதுதான் முதல்முறை. இரண்டு நாடுகளுக்குமிடையேயான ராஜீய உறவுகளின் கால்நூற்றாண்டு நெருக்கத்தைப் போற்றும் விதமாக அமைந்திருக்கிறது பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய மூன்று நாள் இஸ்ரேல் விஜயம். இந்திய - இஸ்ரேல் உறவு படிப்படியாக வளர்ச்சியடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர் ஆகியோரின் அரசுமுறைப் பயணங்களின் மூலம் இப்போது முழுமையான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.
1950-இல் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. 1953-இல் இஸ்ரேல் தனது இந்தியத் தூதரகத்தை மும்பையில் அமைத்தது. 1992-இல் இஸ்ரேலுக்கு முழுமையான ராஜீய அங்கீகாரத்தை வழங்கியது அன்றைய நரசிம்ம ராவ் அரசு. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதல் சாதுரியமாக எல்லா நாடுகளுடனும் பொதுவான பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளித்துவருகிறார்.
இந்தியா ஆரம்பம் முதலே பாலஸ்தீனியர்களுடனும் யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலைப் படையுடனும் நெருக்கமாகவே இருந்து வந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்தியா கூறி வந்தது. ஐக்கிய நாடுகளின் சபையில் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்ததை இனியும்கூட இந்தியா மாற்றிக்கொள்ளாது என்றுதான் வெளியுறவுத் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
1962 இந்திய - சீனப் போரின்போது பண்டித நேரு இஸ்ரேலின் உதவியை ரகசியமாகக் கோரியதாக தகவல் உண்டு. இந்திய - இஸ்ரேல் உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் 1962 சீனப் போரும், பாகிஸ்தானுடனான 1971 போரும். அப்போது அரபு நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தபோது, இந்தியாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் இருந்தது. 1990 முதல் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமிடையேயான நெருக்கம் அதிகரித்து வந்தாலும் அது வெளிப்படையாக்கப்படாமலே தொடர்ந்தது. 1999 கார்கில் போரின்போதுதான் வெளிப்படையாக இந்தியா இஸ்ரேலின் உதவியையும் ஆதரவையும் பெற்றது. அதுமுதல் நெருக்கம் படிப்படியாக அதிகரித்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.
பாலஸ்தீனியர்களையும் பகைத்துக்கொள்ளாமல் இஸ்ரேலிடமும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் உத்தியை மன்மோகன் சிங் அரசுதான் முதலில் கையாளத் தொடங்கியது. அதே பாணியில் இப்போது மோடி அரசும் மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஈரான், கத்தார் என்று தனித்தனியாக உறவையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்திக்கொள்வதும், அதேநேரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்வதுமாக செயல்படுகிறது.
இந்தியாவுடனான இஸ்ரேலின் வர்த்தக, ராணுவ, ராஜீய நெருக்கத்துக்கு, எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்கவில்லை என்று இஸ்ரேல் சொன்னாலும்கூட, இஸ்ரேலின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக பிரதமர் மோடி ஜெருசலேம் வரை சென்றும்கூட ரமல்லாவிலுள்ள பாலஸ்தீனிய தேசிய தலைமையகத்திற்கு விஜயம் செய்யாமலே திரும்பி இருக்கிறார். இதுவேகூட இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றத்தின் அறிகுறி என்றுதான் கூற வேண்டும்.
பிரதமர் மோடியின் விஜயத்தின்போது தகவல் தொழில்நுட்பம், புலனாய்வில் கூட்டுறவு, உயர்கல்வி, நீர் மேலாண்மை, பாசனம், மருத்துவத் துறையில் மேம்பட்ட எண்மத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருநாடுகளுக்குமிடையே பல ஒப்பந்தங்கள் கையொப்பமிட இருக்கின்றன. நீர் மேலாண்மை, விவசாயம், விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை முன்னிலைப்
படுத்தப்பட்டாலும், அதிகம் பேசப்படாத பாதுகாப்புக் கூட்டுறவுதான் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம். 2012 முதல் 2016 வரை இஸ்ரேலின் மொத்த ராணுவ தளவாட ஏற்றுமதியில் 41% இந்தியாவுக்கானதுதான். ரஷியாவுக்கும் (68%), அமெரிக்காவுக்கும் (14%), அடுத்தபடியாக இந்தியாவின் அதிகமான ராணுவ தளவாட இறக்குமதி இஸ்ரேலிடமிருந்துதான் (7%).
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியின்போது இந்தியா இஸ்ரேலிடமிருந்து 176 ஆளில்லா வேவு விமானங்களை வாங்கியது. பிப்ரவரி 2014-இல் உள்நாட்டு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையும் செய்துகொண்டது. இரண்டு நாடுகளும் இணைந்து உருவாக்கிய இந்தியக் கடற்படைக்கான ஏவுகணை தாக்கிகளை கடந்த செப்டம்பர் மாதம் சோதனை செய்தது. அதுமட்டுமல்லாமல், 2 மில்லியன் டாலருக்கு ஏவுகணைகளும், ஆளில்லா வேவு விமானங்களும் வாங்குவதற்கான ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பு மட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்புக்கான பயிற்சிகளிலும் இந்தியாவுக்கு பெருமளவில் உதவுவது இஸ்ரேல்தான். அமெரிக்கா இந்தியாவுக்கு நேரடியாக தரமுடியாத தொழில்நுட்பங்களை இஸ்ரேல் தந்து உதவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாடுகளுக்குமிடையேயான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான கூட்டணியை சீனாவின் துணையோடு பாகிஸ்தான் பலமாக உருவாக்க முற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் துணையோடு இந்தியா ஏற்படுத்த முனையும் ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அணியில் இஸ்ரேலையும் இணைத்துக் கொள்ளும் முயற்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அரசு முறைப் பயணத்தைக் கருத இடமுண்டு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com