பராமரிப்பல்ல... புறக்கணிப்பு!

உலகத்திலுள்ள பல்வேறு கட்டடக் கலைகளும் சங்கமித்திருக்கும்

உலகத்திலுள்ள பல்வேறு கட்டடக் கலைகளும் சங்கமித்திருக்கும் ஒரு தேசம் இருக்குமானால் அது இந்தியாவாகத்தான் இருக்கும். ஏனைய நாடுகளில் இல்லாத அளவுக்கு காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்திலிருந்து அருணாசலப் பிரதேசம் வரை பெரிதும் சிறிதுமாக நினைவுச் சின்னங்களும் வரலாற்றுச் சான்றுகளும், கலைச் செல்வங்கள் கொலுவிருக்கும் ஆலயங்களும், மசூதிகளும், மாதா கோயில்களும், புத்த விகாரங்களும் பல நூற்றாண்டு இந்திய வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்திலிருந்து திரட்டப்பட்டிருக்கும் அரசுத் தரவுகளின்படி இந்தியாவில் ஐந்து லட்சத்திற்கும் மேலாகப் பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள், பாதிப்புக்குள்ளாகும் வகையில் தொடர்கின்றன. கடந்த நூற்றாண்டில் மட்டும் அடையாளம் காணப்பட்ட பல நினைவுச் சின்னங்கள் இயற்கையின் சீற்றத்தாலும், மனிதர்களின் பொறுப்பின்மையாலும், ஆக்கிரமிப்புகளாலும், அரசின் கவனக்குறைவாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய நிலையில் வெறும் 3,650 நினைவுச் சின்னங்கள் மட்டும்தான் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கணக்குத் தணிக்கை ஆணையரின் 2013-ஆம் ஆண்டு அறிக்கை சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைத் தெரிவிக்கிறது. 1,655 நினைவுச் சின்னங்களின் ஆவணங்களைப் பரிசீலித்து, நேரில் போய் ஆய்வு செய்ததில் அவற்றில் 546 நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் தொல்பொருள் ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறை(Archaeological Survey of India)  அதிகாரிகள் இதற்குப் பல காரணங்களை முன்வைக்கிறார்கள். மிக முக்கியமான காரணம், இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் போதிய ஊழியர்கள் இல்லாமல் இருப்பது. மேலை நாடுகளைப் போல ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தனியான சிறப்பு அலுவலரின் தலைமையில் போதிய ஊழியர்களுடன் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, அவை குறித்த எல்லா தகவல்களையும் பார்வையாளர்களுக்குத் தருவதுபோல, இந்தியாவில் எந்தவொரு நினைவுச் சின்னமும் பேணப்படுவதில்லை.
2500-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களின் காவலுக்கு ஒரு முழுநேர ஊழியரை வேலைக்கு அமர்த்துவதற்குக் கூட போதுமான அளவு ஊழியர் பலம் தனக்கு இல்லை என்று 2010-இல் தொல்பொருள் ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்தது. அதாவது, மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொல்பொருள் ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறையின் பராமரிப்பில் இருக்கும், இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன என்று பொருள்.
அத்துடன் நின்றுவிடவில்லை கணக்குத் தணிக்கை ஆணையரின் அறிக்கை. வரலாற்றுச் சின்னங்களின் ஆக்கிரமிப்புக்குத் தொல்பொருள் ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உடந்தையும்கூடக் காரணம் என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த நினைவுச் சின்னங்களைச் சுற்றித் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளை வரம்பு மீறி முறைகேடாக ஆக்கிரமித்திருப்பவர்களை அரசியல்வாதிகளும், துறை அதிகாரிகளும் பாதுகாக்கிறார்கள் என்பதையும் தொல்பொருள் ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறையின் கோப்புகள் வெளிப்படுத்துவதாக ஆணையரின் அறிக்கை கூறுகிறது.
எல்லா வரலாற்றுச் சின்னங்களுக்கும் சட்டப்படியான பாதுகாப்பு, பெயரளவில் மட்டுமே இருக்கிறது. புராதன வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அகழாய்வுப் பகுதிகள் சட்டம் 1958-இன்படி எந்தவோர் அடையாளம் காணப்பட்ட நினைவுச் சின்னத்தையும் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு எந்தவித மாற்றமும் செய்தல் கூடாது. ஆனால், இந்தச் சட்டம் மீறப்படுகிறதே தவிர பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.
ஒருமுறை அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, தில்லியில் உள்ள நிஜாமுதீன் நினைவிடத்திற்கு விஜயம் செய்தார். அதைச் சுற்றிலும் புதிய புதிய கட்டடங்கள் எழும்பியிருப்பதும், அருகிலுள்ள கிழக்கு நிஜாமுதீன் குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் அந்த நினைவிடத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருப்பதையும் பார்த்து அதிர்ந்தார். இப்படியே போனால், நமது வரலாற்றுச் சுவடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடக்கூடும் என்கிற அச்சம் அவருக்கு எழுந்தது.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கு நினைவுச் சின்னங்களைச் சுற்றி குறிப்பிட்ட அளவு பகுதியில் புதிய கட்டடங்கள் எதையும் அனுமதியின்றி எழுப்பக்கூடாது என்று அவர் ஆலோசனை கூறினார். அதுமட்டுமல்லாமல், தில்லியில் உள்ள எல்லா நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகியவற்றைச் சுற்றி பூங்காக்கள் அமைத்துப் பராமரிக்கும்படியும், அதன் மூலம் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கமுடியும் என்றும் பண்டித ஜவாஹர்லால் நேரு பரிந்துரைத்தார்.
பரிந்துரைத்ததுடன் நின்றுவிடாமல், அன்றைய மத்திய கல்வி அமைச்சரிடம் 1955-இல் இதுகுறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார் பிரதமர் நேரு. அப்போது கல்வி அமைச்சகத்தின் கீழ் பண்பாட்டுத்துறை இயங்கி வந்ததால், இதுகுறித்துத் தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி கல்வி அமைச்சருக்குப் பிரதமர் நேரு அறிவுறுத்தினார். அதன் விளைவாகத்தான் 1959-இல் புராதனச் சின்னங்கள் மற்றும் அகழ்வாய்வுகள் சட்டம் - 1958 அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லா வரலாற்றுச் சின்னங்களையும் சுற்றியுள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில்தான் தில்லி உயர்நீதிமன்றம் தொல்பொருள் ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறையினர், சட்டத்திற்குப் புறம்பாக அளித்திருந்த எல்லா அனுமதிகளையும் ரத்து செய்தது. 2010-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கு மேலும் வலு சேர்த்தது.
நமது மூதாதையர்கள் ஆலயங்களைச் சுற்றி மாடவீதிகள் அமைத்ததற்கும், கோபுரத்தின் உயரத்தைவிட உயரமான கட்டடங்கள் எழுப்பப்படாமலும் இருந்ததற்கும் காரணம், ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும், அவற்றிலுள்ள கலைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும்தான். இதேபோல கோட்டைகளைச் சுற்றி அகழிகள் வெட்டப்பட்டதும்கூட அந்தக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத்தான்.
இப்போது புராதனச் சின்னங்கள் மற்றும் அகழாய்வுகள் சட்டம் 1958-இல் மாற்றங்கள் கொண்டுவர மத்திய அரசு எத்தனிக்கிறது. அதன்படி வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றி இருக்கின்ற 100 மீட்டர் பாதுகாப்பு வரம்பை அகற்ற முற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வரலாற்றுச் சின்னங்களும் கட்டடங்களும் போதிய பராமரிப்பில்லாமலும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டும் காணப்படும் நிலையில், அவற்றின் அருகில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழுப்பப்படுமேயானால், எஞ்சியிருக்கும் 3,650 நினைவுச் சின்னங்களையும் நாம் விரைவிலேயே இழக்க நேரிடும். கோனார்க்கும், தாஜ்மஹாலும், சாஞ்சியும், சாரநாத்தும், குதுப்மினாரும், மகாபலிபுரமும், எண்ணிலடங்காத ஆலயங்கள், மசூதிகள், கோட்டைகள் ஆகியனவும் வருங்கால சந்ததியினருக்குப் புகைப்படங்களாக மட்டும்தான் காணக்கிடைக்கும்.
நமது நாகரிகத்தின் அடையாளங்களும், ஆதாரங்களும் இந்த வரலாற்றுச் சின்னங்கள்தான். இதுகுறித்து கவலைப்பட வேண்டிய பண்பாட்டு அமைச்சகமே இவற்றின் அழிவுக்கு வழிகோலுகிறதே, அதன் செயல்பாட்டை என்னென்று கூறுவது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com