பதவிக்குக் களங்கம்!

ஆளுநர் பதவி தேவைதானா என்பது குறித்த

ஆளுநர் பதவி தேவைதானா என்பது குறித்த சர்ச்சை அரசியல் சாசன விவாதத்தின்போதே தொடங்கிவிட்டது. தேசத்தின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரைப் போலவே மாநில நிர்வாகத்திற்கும் ஆளுநர் இருப்பது அவசியம் என்று அரசியல் சட்ட நிர்ணய சபை கருதியது. அரசியல் காரணங்களாலோ சட்ட ஒழுங்கு பிரச்னையாலோ நிலையற்றதன்மை ஏற்பட்டால் மாநில நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக் கூடாது என்பதுதான் காரணம்.
பெரும்பாலும் அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அரசியல் சாசன சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களாக பணியாற்றக்கூடாது என்கிறது அரசியல் சாசனம். அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 159-இன்கீழ் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், கட்டிக்காக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். குடியரசுத் தலைவரைப் போலவே தங்களது அர
சியல் பின்னணியை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் சாசனக் கடமையில் அவர்கள் பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும்.
"ஆளுநர்கள் மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வபவர்களாவோ, கடைப்பிடிப்பவர்களாவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை' என்று உச்சநீதிமன்றம் வி.பி. சிங்கால் வழக்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
"இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படையில் நாம் விரும்புவதுபோல அமையுமானால் ஆளுநர் என்பவர் முழுக்க முழுக்க அரசியல் சட்ட அடையாளமாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, மாநில நிர்வாகத்தில் எந்தவிதமான தலையீடும் செய்வதற்கான அதிகாரம் உள்ளவராக இருக்கக் கூடாது' என்பது பாபா சாஹேப் அம்பேத்கர் அரசியல்சாசன விவாதத்தின்போது வெளியிட்ட கருத்து.
1987-இல் பிகார் மாநிலத்திற்கு எதிராக பி.சி.வாத்வா என்பவர் தொடுத்த வழக்கின்போது 1967 முதல் 1981 வரையிலான பிகார் மாநில ஆளுநர்கள் 256 அவசரச் சட்டங்களை பிறப்பித்திருக்கிறார்கள் என்பதும் அவற்றில் பல அவசரச் சட்டங்கள் ஏறத்தாழ 14 ஆண்டுகள் சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறாமல் மீண்டும் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தன என்பதும் தெரியவந்தது. உச்சநீதிமன்றம் இப்படி அவசரச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்தின் மீதான மிகப்பெரிய மோசடி என்று வன்மையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.
முதலமைச்சரையும் அவரது பரிந்துரையின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் முக்கியமான அலுவலர்களையும் நியமிப்பதுடன் ஆளுநரது அதிகார வரம்பு முற்றுக்கு வருகிறது. சட்டப்பேரவையில் உரையாற்றுவது, கூட்டுவது, நீட்டிப்பது, கலைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் அவருக்கு தரப்பட்டிருக்கின்றன. ஆனாலும்கூட, அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் அவர் செயல்பட வேண்டும் என்பதுதான் மரபு. இந்த மரபைப் பெரும்பாலான ஆளுநர்கள் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்றாலும்கூட, இந்த மரபை மீறித் தங்களை முன்னிருத்திக் கொள்ள விழையும் ஆளுநர்களும் இருக்கவே செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆளுநர் பதவி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டது என்று வன்மையாகக் குற்றம்சாட்டியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஆனால், இப்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை என்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் முன்னாள் துணை நிலைஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் இடையான மோதலை மத்திய அரசு வேடிக்கை பார்த்ததே தவிர சுமுகமான உறவுக்கு வழிகோலவில்லை. கோவா, மணிப்பூர் மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் தெளிவான முடிவுகள் எட்டப்படாதபோது ஆளுநர்களின் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்ட விதம் ஆளுநர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கவில்லை.
மேற்குவங்கத்தில் வகுப்புக் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெளிப்படையாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் பா.ஜ.க.வின் வட்டச் செயலாளர்போல நடந்துகொள்கிறார் என்றும், தன்னை அவமானப்படுத்தவும் மிரட்டவும் செய்கிறார் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். அதை ஆளுநர் மறுத்திருக்கிறார் என்றாலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் எழுப்பப்படுவது ஆளுநர் பதவியின் மரியாதையைக் குலைப்பதாக இருக்கிறது.
அதேபோல, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டமும், கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்குவதாக மாநில சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காமல் தான் நியமித்த மூன்று நியமன உறுப்பினர்களுக்கு, சட்டப் பேரவைத் தலைவரை ஒதுக்கிவிட்டுத் துணைநிலை ஆளுநரே பதவிப் பிரமாணம் செய்துவைத்த விசித்திரமும் அரங்கேறியிருக்கிறது.
மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆகிய இருவரின் செயல்பாடும் அவர்கள் வகிக்கும் பதவியின் மரியாதைக்கும் கெüரவத்துக்கும் ஏற்றதாக இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com