தார்மிக நியாயம்!

இந்தியாவின் 21-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார்

இந்தியாவின் 21-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர், 2013 ஜனவரியில் பதவி ஓய்வு பெற்ற அச்சல் குமார் ஜோதி.
கடந்த 2015 மே 8-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட 64 வயது அச்சல் குமார் ஜோதி. அடுத்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார். 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஆணையத்தின் அடுத்த மூத்த உறுப்பினரான அச்சல் குமார் ஜோதி பதவியேற்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஆரம்பம் முதலே மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசுப் பணி அதிகாரிகளில் திறமைசாலியான ஒருவரை தேர்ந்தெடுத்து தேர்தல் ஆணையத்துக்கு நியமிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரின் குடியரசுத் தலைவரால் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் எது முன்பாக வருகிறதோ அதுவரை தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம்.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான தகுதிநிலை, ஊதியம், படிகள் ஆகியவை தேர்தல் ஆணையர்களுக்கும் பொருந்தும். தலைமைத் தேர்தல் ஆணையர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை அரசு இன்னும் ஏன் ஏற்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது. இப்படி ஒரு கேள்வி இத்தனை நாட்களாக எழுப்பப்படாமல் இருந்ததுதான் வியப்பை அளிக்கிறது.
தேர்தல் ஆணையம் என்கிற மிக முக்கியமான அரசியல் சாசன அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு, தான் விரும்பும் நபரை ஆளுங்கட்சி நியமித்துக் கொள்வதை எந்த அரசியல் கட்சியும் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்பதேகூட வியப்பாக இருக்கிறது. சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக்கூட விவாதம் எழுப்பி விமர்சிக்கும் அரசியல்வாதிகளும், எந்த ஒரு பிரச்னையிலும் ஆளுங்கட்சியுடன் அங்கீகரித்துப் போகாத எதிர்க்கட்சிகளும் மத்தியில் ஆளும்கட்சி, தான் விரும்பும் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையர்களாக நியமித்துக் கொள்வதற்கு இத்தனை நாளும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியம்தான்.
தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விமர்சனங்கள் எழுப்புகின்றன. தேர்தல் ஆணையம் தரும் கெடுபிடிகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் ஆணையர்களின் நியமனம் குறித்து இத்தனை காலம் எந்த ஒரு கட்சியும் விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், இதுவரை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதால்கூட இருக்கலாம்.
தேர்தல் ஆணையம் என்பது ஓர் அரசியல் சாசன அமைப்பு என்பதால் ஏனைய அரசியல் சாசன அமைப்புகளுக்குக் கடைப்பிடிப்பது போலவே தேர்தல் ஆணையர்களை நியமிப்பதிலும், அரசு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நாடாளுமன்றம் இதுகுறித்து முடிவெடுத்து அதற்கான நடைமுறையை ஏற்படுத்தாவிட்டால், உச்சநீதிமன்றம் இதற்கான விதிமுறைகளை வகுப்பது குறித்து யோசிக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டபோது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ரஞ்சித் குமார் இப்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும் என்பதை அரசின் கருத்தாக முன்வைத்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்றத் தலையீட்டை வன்மையாக எதிர்த்த ரஞ்சித் குமார், இதுவரை எந்தவிதப் பிரச்னையும், விமர்சனமும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் நடைமுறையை மாற்றுவதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை என்கிற வாதத்தை முன்வைத்தார்.
மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோர்களின் நியமனத்திற்கெல்லாம் இருப்பதுபோல தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதிலும் விதிமுறைகள் இயற்றப்பட வேண்டும் என்பது புதிய ஆலோசனை ஒன்றுமல்ல. பிரதமர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர், மக்களவை, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் கொண்ட குழுவின் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கப்படும்போதுதான் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்று முன்னாள் துணைப் பிரதமராக இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, 2012-இல் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்தைத் தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியும் ஆதரித்திருந்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருந்த பி.பி. டாண்டன், என். கோபாலஸ்வாமி, எஸ்.ஒய். குரேஷி உள்ளிட்டோரும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 324 (2)-இன்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அப்படி செய்யாமல்போனால் அந்தப் பொறுப்பை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொள்ளும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நீதித்துறையின் அதிகார வரம்பு மீறலாக இருந்தாலும்கூட, அந்த எச்சரிக்கையில் தார்மிக நியாயம் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com