இந்த நேரத்திலா இப்படி?

லடாக்கிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 4,087 கி.மீ.

லடாக்கிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 4,087 கி.மீ. எல்லைப்புறப் பகுதிகளில் தயார்நிலையில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சீனாவும் சரி தனது துருப்புகளைச் சும்பி பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள ஹம்பா ஜாங் என்கிற பகுதியில் தயார் நிலையில் வைத்திருக்கிறது. சும்பி பள்ளத்தாக்கு என்பது சிக்கிமிற்கும் பூடானுக்கும் இடையில் இருக்கும் பகுதி. கடந்த ஒரு மாதமாக சீனா தனது நிலையிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.
இந்திய ராணுவத்தைப் பொருத்தவரை அந்தப் பகுதியிலுள்ள எல்லா படைகளும் - காங்டாக்கில் உள்ள 17-ஆவது பிரிவு, கலிம்பாங்கிலுள்ள 27-ஆவது பிரிவு, பின்னாகுரியிலுள்ள 20-ஆவது பிரிவு - தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 10,000-க்கும் அதிகமான வீரர்கள் எந்த அவசர சூழலுக்கும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே கிழக்கு மற்றும் வடக்கு சிக்கிம் எல்லையோரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் 3,000 படைவீரர்கள் கொண்ட 63, 112 பிரிகேடுகளும், 164-ஆவது பிரிகேடின் கீழுள்ள இரண்டு பட்டாலியன்களும் ஜூலுக் மற்றும் நதாங் பள்ளத்தாக்குப் பகுதியில் தயார் நிலையில் இருக்கின்றன. சிக்கிம் - பூடான் எல்லைப் பகுதியிலுள்ள தட்பவெப்ப நிலை குறித்த அனுபவம் உள்ள துருப்புகளை அங்கே நிறுத்தியிருப்பதற்குக் காரணம், எந்த ஒரு அவசர நெருக்கடியிலும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான்.
இந்திய - சீன துருப்புகளுக்கிடையே சுமார் 100 முதல் 120 மீட்டர்கள்தான் இடைவெளி இருக்கிறது. இரண்டு தரப்புமே டென்ட்டுகள் அடித்து கர்னல் ரேங்கிலுள்ள அதிகாரி தலைமையில் எதற்கும் தயாராகக் காத்திருக்கின்றனர்.
டோகா லா சமவெளிப்பகுதியில் கடந்த மாதம் வாகனப் போக்குவரத்திற்கான சாலை அமைக்க சீன துருப்புகள் சாலை பணியாளர்களுடன் களம் இறங்கியபோது இந்தியத் துருப்புகள் அவர்களை தடுத்து நிறுத்தியதில் சீனா ஆத்திரமடைந்திருக்கிறது. ஜோம்பிரி ரிஜ் பகுதி இந்தியாவுக்கு மிக முக்கியமான சிலிகுரி இடைவெளியை எதிர்நோக்கியிருப்பதால் அந்த இடத்தை சீனா ஆக்கிரமிப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. சிலிகுரி இடைவெளிதான் ஏனைய இந்தியாவை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் பகுதி. இந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையுமே ஒன்றன் பின் ஒன்றாக சீனா கபளீகரம் செய்துவிட முடியும்.
இதற்கிடையில் சீனா பூடானுக்கு சமாதானத் தூது விட்டதாகக் கூறப்படுகிறது. பூடானின் கிழக்குப் பகுதியில் 495 சதுர கி.மீ. பூடானின் மேற்கு பகுதியில் டோகா லா உள்ளிட்ட 286 சதுர கி.மீ. பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஒரு கட்டத்தில், கிழக்கு பூடானில் தனது உரிமையை விட்டுக்கொடுப்பதாகவும், இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்த வழிகோலும் டோகா லா சமவெளியைத் தனக்கு விட்டுக்கொடுக்கும்படியும் ரகசியப் பேச்சு நடத்த முற்பட்டிருக்கிறது. பூடான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தனது நாட்டின் எந்தவொரு பகுதியையும் விட்டுக்கொடுக்க பூடான் தயாராக இல்லை. சீனாவின் கோரிக்கைகளை ஏற்றால் அது விரைவிலேயே தனது தலைநகரத்திற்கு ஆபத்தாக முடியும் என்பது பூடானுக்கு நன்றாகவே தெரியும். டோகா லா உள்ளிட்ட பூடானின் பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் போனால் ஹா, பரோ, திம்பு பள்ளத்தாக்குகள் நேரடியாக சீனாவின் தாக்குதல் எல்லைக்குள் வந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து பூடான் தலைநகரான திம்புவுக்கு புன்ட்ஷாலிங்க் நகரம் வழியாகச் செல்லும் 165 கிமீ. சாலையை எந்த நேரத்திலும் சீன ராணுவம் துண்டித்துத் தங்களது நாட்டைத் தன்வசப்படுத்திக் கொள்ள முடியும் என்பது பூடானுக்குத் தெரியும்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி கம்யூனிஸ்ட் சீனா தனது 90-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. மிக முக்கியமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு அப்போது கூட இருக்கிறது. அதுவரை சீனாவின் மக்கள் விடுதலைப் படை பின்வாங்கும் என்று தோன்றவில்லை.
இந்திய ராணுவமும் சீன ராணுவமும் மோதலுக்குத் தயாராக எல்லைப்புறத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கான சீனத் தூதுவரை மரியாதை நிமித்தம் சென்று சந்தித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. முதலில் சந்திக்கவே இல்லை என்று தெரிவித்ததும், இந்தியாவுக்கான சீன தூதருடனான படம் வெளியிடப்பட்டதும் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறியிருப்பதும் விசித்திரமாக இருக்கிறது.
முக்கியமான பிரச்னைகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது தனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பாதுகாப்பு அமைச்சரிடமிருந்தோ, இந்திய ராணுவத்திடமிருந்தோ, வெளிவிவகாரத் துறை அமைச்சரிடமிருந்தோ தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு இந்தியாவுக்கான சீன தூதுவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ராகுல் காந்தியின் புத்திசாலித்தனம்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக மூன்று இந்திய அமைச்சர்கள் சீனாவுக்கு போனதையும், 2014-இல் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி நட்புறவு முறையில் ஊஞ்சலில் அமர்ந்து அளவளாவியதையும், பதற்றமான எல்லைப்புறச் சூழலில், தான் இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லூ ஷாஹூவை நேரில் போய் சந்திப்பதையும் ஒப்பிட்டுக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பதை அறியாமை என்பதா? சிறுபிள்ளைத்தனம் என்பதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com