சமூக அநீதி!

தமிழக அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி

தமிழக அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீட்டை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. இது, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தெரிவித்திருக்கிறது அந்த உத்தரவு.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், மருத்துவத் தகுதித் தேர்வு (நீட்) எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தாலும்கூட, அவர்களில் வெறும் 5% பேர் மட்டுமே இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம்பெற முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பால் தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ இடங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடும்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் 22. இதில் 2,900 இடங்கள் உள்ளன. இவற்றில் 434 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள 2,466 இடங்களில் 2,094 இடங்கள், சமச்சீர் கல்வித் திட்டத்தில் படித்து "நீட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தில் 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றிலுள்ள 1,300 இடங்களில், 664 இடங்கள், சமச்சீர் கல்வித் திட்டத்தில் படித்து "நீட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.
சமச்சீர் கல்வி அல்லது பல்வேறு மாநிலக் கல்வித் திட்டங்களில் படித்துத் தேறிய மாணவர்கள் இந்திய அரசுப் பணித் தேர்வில், சி.பி.எஸ்.இ. மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால், மருத்துவக் கல்லூரிக்குத் தகுதித் தேர்வு இருப்பது குறித்து யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. அந்தத் தேர்வு இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) போன்று பொதுவான தேர்வாக அமைய வேண்டுமே தவிர, சி.பி.எஸ்.இ. என்கிற பாடத்திட்டத்தின் அடிப்படையில், அந்த அமைப்பால் நடத்தப்படுவதுதான் ஏற்புடையதாக இல்லை.
இரண்டாவதாக, தனியார் பள்ளிகள்தான் சி.பி.எஸ்.இ. திட்டத்தின் கீழ் இயங்குகின்றன. பல லட்சம் ரூபாய் நன்கொடையும், அதிகமான கல்விக் கட்டணமும் செலுத்தி இந்தத் திட்டத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக வசதியான சமூக அந்தஸ்தும், கல்விப் பின்னணியும் உள்ள பெற்றோர்களை உடையவர்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுடன், பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள குக்கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்ணுடன் தேர்வு பெற்ற விவசாயியின் மகனை போட்டியிடச் சொல்வது என்ன நியாயம்?
அரசுப் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்று, சமுதாயத்தின் மேல் தட்டுக்கு முன்னேறும் எல்லா வாய்ப்பும் இருந்தும், அந்த மாணவர்களின் வாய்ப்பு, வசதியான குடும்பத்தில் பிறந்து தனியார் பள்ளியில் நன்கொடையும், கல்விக் கட்டணமும் வாரி வழங்கிப் படித்துத் தேறிய ஒருவரால் தட்டிப் பறிக்கப்படுகிறது என்பது மிகப்பெரிய சமூக அநீதி அல்லவா?
தனியார் பள்ளிகளில், மாற்றுக் கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேராமல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எந்தவித நன்கொடையும் இல்லாமல் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிப்பதும், அப்பாவி ஏழை கிராமப்புற மாணவர்கள் நன்றாகப் படிப்பவராக இருந்தும், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதும்தான் இந்தத் தீர்ப்பினால் ஏற்படப்போகும் விளைவு.
மாநில அரசிடம் இருக்கும் நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு, அனைவருக்கும் கல்வி என்கிற முழக்கத்தோடு பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி, மிகப்பெரிய சமுதாயப் புரட்சிக்கு வழிகோலி இருப்பது அரசுப் பள்ளிக்கூடங்கள்தானே தவிர, தனியார் பள்ளிகள் அல்ல.
"இடஒதுக்கீடு' என்று சொல்லும்போதே, ஏதோ தரமற்ற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என்கிற தவறான கண்ணோட்டம் பலருக்கும் இருக்கிறது. கடந்த ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் (கட்ஆப்) 200-க்கு 191.5 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது 191 மதிப்பெண் பெற்றவர்கள்கூட இடஒதுக்கீட்டின்மூலம் பயன் பெற்றுவிடவில்லை என்பதும் ஒதுக்கீட்டில் படித்துத் தேறும் மருத்துவ மாணவர்கள் எந்தவிதத்திலும் தரம் குறைந்தவர்கள் அல்ல என்பதும் பலருக்கும் புரியவில்லை.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வியை பொதுப்பிரிவில் இணைத்தது மிகப்பெரிய அரசியல் மோசடி. மாநில அரசு மாவட்டத்துக்கு மாவட்டம் மருத்துவக் கல்லூரிகளை மக்களின் வரிப்பணத்தில் நிறுவுவது வேற்று மாநிலத்தவரும், வசதிபடைத்தவர்களும் பயனடைவதற்கா அல்லது அரசுப் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்றுத் தேறும், கிராமப்புற மாணவர்களுக்காகவா என்கிற வாதத்தை நீதிமன்றத்தில் வலுவாக எழுப்பாமல் விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
தீர்ப்புக்காக அரசைக் குற்றம்கூறி அரசியல் ஆதாயம் தேடாமல், அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் திருத்தமுடியாமல் போனால், எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளையும், அரசுப் பள்ளிகளையும் தனியாருக்கு தாரை வார்த்துவிடுவதுதான் நல்லது. "கடையனுக்கும் கடைத்தேற்றம்' இல்லையென்றால், ஜனநாயகமும் அரசியல் சட்டமும்தான் எதற்கு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com