நதியின் பிழையன்று...!

இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலங்கள் வெள்ளக்காடாகக்

இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும், அஸ்ஸாமிலும் 58-க்கும் அதிகமான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை அதிகாரபூர்வமாக 80 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே 60 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்.
லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, இருக்க இடமின்றி கூரைகளின் மீதும், மரத்தின் மீதும் தொற்றிக்கொண்டு தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை பிரம்மபுத்ரா மட்டும்தான் சீற்றம் கொண்டிருந்தது என்றால், இப்போது மகாநதியின் வெள்ளப்பெருக்கும் ஒடிஸா மாநிலத்தையும் தடம்புரளச் செய்திருக்கிறது.
இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் பலத்த மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பது ஏனைய இந்திய மக்களை பாதிக்காமல் இருப்பது மிகப்பெரிய சோகம். இந்த மாநிலங்களில் மக்கள் படும் அவலங்கள் குறித்து, போதுமான பதிவு எந்த ஊடகங்களிலும் இல்லை என்பதுதான் உண்மை. குடியரசுத் தலைவர் தேர்தலும், ஏனைய அரசியல் பொருளாதார மாற்றங்களும்தான் ஊடகங்களின் கவனத்தை கவருகின்றனவே தவிர, லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராடும் அவலம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மனிதர்கள் மட்டுமல்ல. காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் ஏறத்தாழ 80-க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்திருக்கின்றன. காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவின் பெரும்பகுதியில் வெள்ளம் புகுந்துவிட்டதால் அங்கிருந்த வனவிலங்குகள் அருகிலுள்ள கிராமங்களுக்குள் பாதுகாப்பு தேடி நுழைந்துவிட்டிருக்கின்றன. காண்டாமிருகங்களும், யானைகளும் உயிருக்கு பயந்து தப்பியோடி வயல்வெளிகளிலும் கிராமப்புற தெருக்களிலும் அலைந்து திரியும் அவலம் அரங்கேறியிருக்கிறது.
இவற்றையெல்லாம் எப்படி மீண்டும் பாதுகாப்பாக காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்கு மீட்டெடுத்து வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. 2012-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 500-க்கும் அதிகமான மான்களும், 20-க்கும் அதிகமான காண்டாமிருகங்களும் உயிரிழந்தன. அதேபோன்ற ஈடுகட்ட முடியாத இழப்பு இந்த முறையும் ஏற்படுமோ என்னவோ?
சகஜநிலை திரும்புவதற்கு மழை நின்றாக வேண்டும், வெள்ளம் வடிந்தாக வேண்டும். உடனடியாக மத்திய அரசின் உதவியோடு அஸ்ஸாம் மாநில அரசு தேசிய பேரிடர் மேலாண்மைப் படையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பையும் நிவாரணத்தையும் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
சென்னையில் வெள்ளம் வந்தபோது களம் இறங்கியதுபோல, பெரிய அளவில் தன்னார்வத் தொண்டர்கள் ஒடிஸா, அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் என்று பரவலாக ஏற்பட்டிருக்கும் பாதிப்பை எதிர்கொண்டுவிட முடியாது. பல குக்கிராமங்களை ஹெலிகாப்டரில்தான் அணுக முடியும் என்கிற அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 230 கியூபிக் மீட்டர் மழையை பிரம்மபுத்ரா டெல்டா பகுதியில் பெறுகிறது அஸ்ஸாம். இதுமட்டுமல்லாமல், இமயமலைப் பகுதியில் பெய்யும் மழையும் பிரம்மபுத்ராவில் கலக்கிறது. அஸ்ஸாமிற்குள், பிரம்மபுத்ரா அகலமான நதியாகப் பாய்ந்தோடி தலைநகர் குவாஹாட்டியை நெருங்கும்போது சுருங்கி மீண்டும் அகல விரிந்து வங்கக் கடலை நோக்கிப் பாய்கிறது. அதனால்தான் மழைக்காலத்தில் இந்தளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றியிருக்கும் பல கிராமங்கள் மூழ்கடிக்கப்படுகின்றன.
2012-இல் இதேபோல ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏறத்தாழ 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்போது இதுகுறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பிரம்மபுத்ராவில் இமயமலையிலிருந்து வெள்ளப்பெருக்கால் அடித்துக்கொண்டு வரும் கசடுகள் பல நூறு ஆண்டுகளாகப் படிந்து படிந்து ஆற்றுப்படுகையை சமவெளியைவிட உயர்த்திவிட்டிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது மிக அதிகமான கசடுகள் படியும் நதி பிரம்மபுத்ராதான் என்று கூறப்படுகிறது. அதனால்தான் இந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியாத வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது 2012-இல் செய்யப்பட்ட ஓர் ஆய்வு.
எந்தவொரு நதியின் கரைகளை பலப்படுத்துவதால் மட்டுமே வெள்ளப்பெருக்கைத் தடுத்துவிட முடியாது. பாலங்கள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், அணைகளை ஏற்படுத்துதல் என்பவை எல்லாம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது.
பிரம்மபுத்ராவிலும், மகாநதியிலும் இப்படி வெள்ளப்பெருக்கெடுப்பது புதிதொன்றும் அல்ல. ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான். ஆனாலும்கூட, கடந்த 70 ஆண்டுகளில் நாம் போதிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவோ வெள்ளத்தை முறையாகப் பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளில் காணப்படும் வறட்சியை அகற்றவோ முற்படவில்லை என்பது நமது நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தைத்தான் வெளிச்சம்போடுகிறது.
இந்தியாவில் நமது தேவைக்கும் அதிகமான வெள்ளம் கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகளிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. ஆனால், அவற்றைக் கடலில் கலக்கவிடாமல் முறையாக பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் வளப்படுத்தவும், ஆங்காங்கே ஏற்படும் வறட்சியையும், இதுபோன்ற வெள்ளப்பெருக்கத்தைத் தடுக்கவும் நம்மால் முடியவில்லை என்பது நம்மிடம் முறையான நீர் மேலாண்மைத் திட்டம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com