வாழ்த்துகள்!

இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது எதிர்பார்த்த வெற்றிதான் என்றாலும்கூட இந்தமுறை குடியரசுத் தலைவருக்கான போட்டியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டின் வேட்பாளர்களுமே தகுதியிலும் திறமையிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதாக அமைந்ததுதான் சிறப்பு.
ஜூலை 25-ஆம் தேதி இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள 71 வயது ராம்நாத் கோவிந்த், 65.5 சதவீதம் வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மக்களவையின் முன்னாள் தலைவர் மீரா குமாரை வெற்றி கொண்டிருக்கிறார். 4,109 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 4,083 பேரும் 771 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 768 பேரும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.
1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்தின் அரசியல் பயணத்திற்குப் பின்னால் கடுமையான உழைப்பும், பொதுவாழ்வு அர்ப்பணிப்பும் ஏராளம் ஏராளம். கான்பூர் பல்கலைக்கழத்திலிருந்து வணிகவியல் இளநிலை பட்டமும் வழக்குரைஞர் பட்டமும் பெற்று வெற்றிகரமான வழக்குரைஞராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ராம்நாத் கோவிந்த், தனது 30-ஆவது வயதிலேயே தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவர். இந்திய அரசுப்பணியில் வெற்றி பெற்றும்கூட அரசுப் பணிக்கு போகாமல் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்காகப் போராட வழக்குரைஞர் பணியைத் தொடர்ந்தவர் அவர்.
1977-இல் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது பிரதமர் மொரார்ஜி தேசாயால் தனிச்செயலராக அமர்த்திக்கொள்ளப்பட்டவர் என்றால் அவரிடம் எந்த அளவுக்கு ஒழுக்கமும் நேர்மையும் திறமையும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 1977 முதல் 1979 வரை தில்லி உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிய ராம்நாத் கோவிந்த், ஏறத்தாழ 13 ஆண்டுகள் மத்திய அரசின் வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவசாலி.
இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் 1994-இல் நிகழ்ந்தது. பா.ஜ.க.வின் சார்பில் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்தெடுக்கப்பட்டார். அடுத்த 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இவர் இருந்தபோது பல்வேறு நிலைக்குழுக்களின் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராகவும், அந்தக் கட்சியின் எஸ்.சி.,எஸ்.டி பிரிவின் தலைவராகவும் இருந்த அரசியல் அனுபவமும் இவருக்கு உண்டு. இப்படி எல்லாவிதத்திலும் தகுதி பெற்ற ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
ராம்நாத் கோவிந்தை ஆழமான சிந்தனைக்குப் பிறகுதான் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தார் என்றுதான் கூற வேண்டும். சட்டம் படித்தவர் என்பதும், அரசியல் சாசனம் குறித்த முழு புரிதல் உள்ளவர் என்பதும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பதால் குடியரசுத் தலைவர் பதவிக்கான கெளரவம் குறித்தும் பொறுப்புகள் குறித்தும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர் என்பதும் இவரைப் பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களாக இருந்திருக்கக் கூடும். பாஜக 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன் பிகார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டபோதே அவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக்க தொலைநோக்குப் பார்வையுடன் மோடி முடிவெடுத்திருந்தால்கூட வியப்படையத் தேவையில்லை.
ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தபோது அவரை எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகள் என்றும் அவரை தேர்வு செய்த மோடி அரசை தலித் விரோத அரசு என்று கூறுபவர்களின் கன்னத்தில் விடப்பட்ட அறை என்றும் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் வெளிப்படுத்திய கருத்து மிகவும் அபத்தமானது. பா.ஜ.க. தலித் வேட்பாளரை நிறுத்துகிறது என்பதால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் பாபு ஜெகஜீவன்ராமின் மகளும் முன்னாள் மக்களவைத் தலைவருமான மீரா குமாரை வேட்பாளராக அறிவித்து குடியரசுத் தலைவருக்கான போட்டியை இரண்டு தலித்துகளுக்கிடையேயான போட்டியாக மாற்ற முனைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது.
ராம்நாத் கோவிந்தையும், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட மீரா குமாரையும் தலித் தலைவர்கள் என்று முத்திரை குத்துவது அவர்களது பொதுவாழ்க்கையைக் கொச்சைப்படுத்துவது போன்றதாகும். குடியரசுத் தலைவர் பதவி என்பது ஏதோ அடையாளத்துக்கான பதவி போன்றது போலவும் அதற்கு ஒரு தலித்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த தலித் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துவிட்டது போலவும் கருதுவது தவறு. ஜாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதாக அரசியல் சாசனப் பதவிகள் கருதப்பட வேண்டும் என்கின்ற அரசியல் நாகரிகத்தை நாம் இன்னும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பைரோன்சிங் ஷெகாவத் இதற்கு முன்னால் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்திருக்கிறார். இப்போது சுதந்திர இந்திய சரித்திரத்தில் முதன் முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.
தலித், ஆர்.எஸ்.எஸ். காரர், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்கிற அடையாளங்களை எல்லாம் துறந்துவிட்டு இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைய இருக்கும் ராம்நாத் கோவிந்துக்கு நமது வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com