மாற்றத்திற்கான தருணம்!

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, செய்தி மற்றும் தகவல் துறை

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, செய்தி மற்றும் தகவல் துறை உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளைக் கையாண்டு வந்த வெங்கய்ய நாயுடு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகி இருக்கிறார். மத்திய அமைச்சரவையின் பொறுப்பான பல துறைகளுக்கு முழுநேர அமைச்சர்கள் இல்லாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
பிரதமராக நரேந்திர மோடி 2014-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவை அமைத்துக் கொண்டபோது அவருக்கு மத்திய ஆட்சி புதிது. அவரது அமைச்சரவையில் பல முக்கியமான துறைகள் கேபினட் அந்தஸ்துடன் இல்லாத குறை பளிச்சிட்டது. வர்த்தகம், எரிசக்தி போன்ற துறைகளுக்கு அதற்கு முன்னால் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருந்ததுபோய், தனிப்பொறுப்புடன் இணையமைச்சர்கள் நியமிக்கப்பட்டது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
இப்போதும்கூட முக்கியமான துறைகளான திட்டமிடல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சி, கலாசாரம் மற்றும் சுற்றுலா, தகவல் தொடர்பு ஆகிய மிக முக்கியமான துறைகளின் அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து தரப்படாமல் தனிப்பொறுப்புடன்கூடிய இணையமைச்சர்களாக அவர்களைத் தொடர வைத்திருப்பது ஏன் என்பது புரியவில்லை.
நிதித்துறை என்பதும் பாதுகாப்புத் துறை என்பதும் மிக முக்கியமான துறைகள். இவை இரண்டிற்கும் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் முழு நேர கேபினட் அமைச்சர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். பொருளாதார சூழல் நிதியமைச்சரின் முழுநேர கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது. எல்லைப்புறத்தில் காணப்படும் பதற்றம் பாதுகாப்புத்துறை அமைச்சரின் 24 மணி நேர கண்காணிப்பையும் அவசியத்தையும் கோருகிறது. இந்த நிலையில், பாதுகாப்புத் துறைக்கு முழுநேர அமைச்சர் நியமிக்கப்படாமல் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக அது தரப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கோவா முதலமைச்சராகப் பதவி ஏற்று நான்கு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் பாதுகாப்புத் துறைக்கு முழுநேர அமைச்சர் அறிவிக்கப்படாமல் தொடர்கிறது. அதேபோல சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கான துறைகள் தனித்தனி அமைச்சரின் கீழ் இயங்காமல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மே மாதம் சுற்றுச் சூழல் துறையின் தனிப்பொறுப்பு இணையமைச்சராக இருந்த அனில் தவேயின் மறைந்து இரண்டு மாதங்கள் கடந்தும்கூட இன்னும் ஓர் அமைச்சரிடம் தனிப்பொறுப்பு அளிக்கப்படாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.
கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைக்கவேண்டும் என்பது பிரதமரின் நோக்கமாக இருக்கலாம். அதற்காக முக்கியமான துறைகளுக்கெல்லாம் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்காமல் தனிப்பொறுப்புடன் இணையமைச்சர்களை நியமிப்பது என்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறை எந்தளவுக்கு சரி என்பது விவாதத்துக்குரியது.
ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத இரு துறைகளை ஒரே அமைச்சர் கையாளும்போது அவரால் இரண்டு துறைகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாது என்பது நிர்வாகவியல் நிபுணர்களின் கருத்து. அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைக்க வேண்டும் என்பதற்காகப் பல முக்கியமான துறைகள் பிரதமர் மோடியால் இணைக்கப்பட்டிருக்கின்றன. ரசாயனம் மற்றும் உரத்துறையும், நாடாளுமன்ற விவகாரத் துறையும் அனந்த குமாரிடமும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை, சட்டம் மற்றும் நீதித்துறைகளைக் கையாளும் ரவி சங்கர் பிரசாத்திடமும், சம்பந்தமே இல்லாத ஜவுளித்துறையையும் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையையும் ஸ்மிருதி இரானியிடமும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறையை அருண் ஜேட்லியிடமும் ஒதுக்கியிருப்பது அவர்களது திறமையை முழுமையாக பயன்படுத்த உதவாது.
சில விஷயங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை பாராட்டும்படியாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறையை வெளிவிவகாரத்துறையுடன் இணைத்தது வரவேற்புக்குரியது. பியூஷ் கோயலிடம் எரிசக்தி, நிலக்கரி, சுரங்கம், மாற்று எரிசக்தி ஆகிய துறைகள் தனிப்பொறுப்புடன் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தனித்தனியான துறைகள் தேவையா என்பதுதான் கேள்வி. இந்தத் துறைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அனைத்தையும் எரிசக்திதுறை என்ற ஒரே அமைச்சகத்தின்கீழ் கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சரின் மேற்பார்வையில் விட்டுவிடுவது தானே புத்திசாலித்தனமாக இருக்கும். திறன்மேம்பாட்டுத் துறையை மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் இணைத்து விடுவதை விட்டுவிட்டு அதற்குத் தனியாக ஓர் அமைச்சரை வைத்திருப்பானேன்?
ஏழரை கோடி மக்கள்தொகையும் 39 மக்களவை உறுப்பினர்களும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களும் கொண்ட தமிழகத்திற்கென்று மூன்று ஆண்டு கடந்தும்கூட நரேந்திர மோடி அமைச்சரவையில் இதுவரை கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் ஒருவர் இல்லை. சுதந்திர இந்திய சரித்திரத்தில் எந்த ஒரு மத்திய அமைச்சரவையிலும் தமிழகம் இதுபோலப் புறக்கணிக்கப்பட்டதே இல்லை.
வெங்கய்ய நாயுடுவின் பதவி விலகல் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லதொரு வாய்ப்பை அளித்திருக்கிறது. தனது மூன்று வருட அனுபவத்தைப் பயன்படுத்தி நன்றாக யோசித்து அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com