பிரணாபுக்கு பிரியாவிடை!

இன்றுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஐந்து ஆண்டு

இன்றுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையின் வரலாற்றில் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் குறிப்பிடத்தக்கதாக நினைவுகூரப்படும்.
இரண்டு முறை தொடர்ந்து பதவி வகித்த ஒரே குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத்; போர்க்கால பதற்ற சூழலிலும், பண்டித நேருவின் மறைவைத் தொடர்ந்து நிலவிய நிலையற்ற அரசியல் சூழலிலும் பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன்; பதவிக் காலத்தில் மரணமடைந்த டாக்டர் ஜாகீர் ஹுசைன்; காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளரைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்த வி.வி. கிரி; அவசரநிலை சட்டத்தைப் பிறப்பித்த பக்ருதீன் அலி அகமது; ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி; பிரதமருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த கியானி ஜைல்சிங்; மூன்று பிரதமர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்ததுடன் மக்களவையில் யாருக்கும் பெரும்பான்மையில்லாத சூழலை எப்படிக் கையாள்வது என்பதற்கு வழிகாட்டிய ஆர். வெங்கட்ராமன்; இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியைத் திறம்பட கையாண்ட சங்கர்தயாள் சர்மா; 'பொக்ரான்' அணுகுண்டு சோதனையின்போது பதவி வகித்த கே.ஆர். நாராயணன்; மக்களின் குடியரசுத் தலைவர் என்று பாராட்டப்பட்ட ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்; குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி பிரதீபா பாட்டீல் என்று குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்த ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு இருந்திருக்கிறது.
இந்த வரிசையில் இன்றுடன் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் பிரணாப் முகர்ஜியின் தனிச்சிறப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருடன் மோதல்போக்கு இல்லாமல் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்து பதவியின் கெளரவத்தைக் காப்பாற்றியதுதான்.
இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கான எல்லா தகுதிகளும் பெற்ற மூன்று தலைவர்களை மேற்குவங்கம் ஈன்றெடுத்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய சுதந்திரத்திற்கு முன்பே காலமாகிவிட்டார். ஜோதிபாசு 1996-இல் பிரதமராகாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம். பிரணாப் முகர்ஜி பிரதமராவதற்கான எல்லா தகுதிகளும் இருந்தும் அவரது கட்சியால் பிரதமராக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் பதவியைகூட தனது சொந்த முயற்சியால்தான் பிரணாப் முகர்ஜி அடையமுடிந்ததே தவிர, அவரது கட்சித் தலைமை முழு மனதுடன் அவரை குடியரசுத் தலைவராக்க முன்வரவில்லை என்பது உலகறிந்த உண்மை.
மேற்குவங்க மாநிலத்திலுள்ள மிராட்டி என்கிற குக்கிராமத்தில் தேசியப் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்து, அரைநூற்றாண்டுக்கும் மேலான அரசியல் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு, இந்தியாவின் முதல் குடிமகனாக ஐந்து ஆண்டுப் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் பிரணாப் முகர்ஜி, வரலாற்றில் அழிக்க முடியாத தடம் பதித்து ஓய்வு பெறுகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இவர் பதவி வகித்த காலம் பல்வேறு காரணங்களுக்காக நினைவுகூரப்படும்.
1929-இல் கட்டிமுடிக்கப்பட்ட, ஏறத்தாழ 90 ஆண்டு சரித்திரமுள்ள, 340 அறைகளைக்கொண்ட குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சரித்திரம் உறைந்து கிடக்கிறது. இங்கு காணப்படும் கலைப்பொருள்களும் வரலாற்றுச் சின்னங்களும் ஏராளம் ஏராளம். அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தி பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட்ட பெருமை பிரணாப் முகர்ஜியையே சாரும்.
தனது பதவிக்காலத்தில் மிக முக்கியமான பல முடிவுகளைத் துணிந்து எடுத்தவர் என்கிற பெருமை அவருக்கு உண்டு. கி.பி. 2000 முதல் கிடப்பில் போடப்பட்டிருந்த 32 கருணை மனுக்களின் மீதான முடிவை கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்தார் என்பது மட்டுமல்ல, அவற்றில் 28 மனுக்களை நிராகரித்து, பலரும் தயங்கிய அஜ்மல் கசாப், அப்சல் குரு உள்ளிட்டோரின் தூக்குதண்டனையை உறுதிப்படுத்தியவரும் பிரணாப் முகர்ஜிதான்.
காங்கிரஸ்காரரான பிரணாப் முகர்ஜி பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கொள்கை ரீதியில் எந்தவகையிலும் ஒத்துப்போக முடியாது. ஆனால், குடியரசுத் தலைவர் பதவியின் வரம்புகளை நன்றாக உணர்ந்து தனது கருத்துவேறுபாடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருடனான மோதலாக மாறிவிடாமல் பார்த்துக்கொண்டது பிரணாப் முகர்ஜி என்கின்ற அரசியல் ஞானியின் தனிச்சிறப்பு. மாநில ஆளுநர்கள், தாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பிரணாப் முகர்ஜியை பார்த்து தெரிந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள்.
நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு அவசரச் சட்டங்களின் மூலம் முக்கியமான தீர்மானங்களை நரேந்திர மோடி அரசு எடுக்க முற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக அரசை எச்சரித்ததுடன், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து அவர்களிடம் விளக்கம் கேட்க பிரணாப் முகர்ஜி தயங்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அப்துல் கலாம் குடியிருந்த எண்.10, ராஜாஜி சாலை இல்லத்திற்கு குடியேற இருக்கும் பிரணாப் முகர்ஜி எடுத்துச் செல்வதெல்லாம் தனது ஆயிரக்கணக்கான புத்தகங்களையும், ஐந்தாண்டு கெளரவமாக பணியாற்றி வெளியேறுகிறோம் என்கிற மனநிறைவையும்தான்.
'நான் மீண்டும் சாதாரண இந்தியக் குடிமகனாகத் திரும்புகிறேன்' என்று குறிப்பிட்டிருக்கும் இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிந்திருக்கலாம், ஆனால் அவரது பணி முடியவில்லை. மூத்த ராஜதந்திரியாக இந்தியாவுக்குத் தனது வழிகாட்டுதலை அவர் தொடர வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com