மனசாட்சியின் குரல்!

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னால்

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னால் பிரணாப் முகர்ஜி ஆற்றிய கடைசி இரண்டு உரைகளும் கவனத்தில் கொள்ளத்தக்கவை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும், தனது பதவிக் காலத்தில் கடைசி நாளன்று மக்களுக்கு ஆற்றிய உரையிலும் அவர் விடுத்திருக்கும் சில எச்சரிக்கைகளும், தெரிவித்திருக்கும் சில கருத்துகளும் ஆட்சியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் சிந்தித்து உணர வேண்டியவை. அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் உட்படுத்த வேண்டியவை.
கடந்த மே மாதம் ஜெய்ப்பூரில் பைரோன் சிங் ஷெகாவத் நினைவுச் சொற்பொழிவின்போது அவர் தெரிவித்திருந்த கருத்துகளின் நீட்சிதான் இவை என்று சொல்லலாம். நாடாளுமன்ற செயல்பாடு என்பது கருத்து வேறுபாடு, விவாதம், முடிவு என்கிற மூன்றின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்றும், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவாதிக்கும், கலந்துரையாடும் தரம் மேம்பட வேண்டும் என்றும் தனது ஜெய்ப்பூர் உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
'வாக்காளர் எண்ணிக்கை பலம் கொண்ட ஜனநாயகம் என்பதால் மட்டும் இந்தியா உலகுக்கு முன்மாதிரியான மக்களாட்சி முறையாகி விடாது' என்று அவர் எச்சரித்ததன் பின்னணியில் உண்மை இருக்கிறது. 14-ஆவது மக்களவை ஒத்திவைப்பு அமளியால் 19.58% நேரத்தை வீணாக்கியது என்றால் 15-ஆவது மக்களவையில் 41.6%உம், பத்தாவது அமர்வு வரையிலான 16-ஆவது மக்களவையில் 16%உம் கூச்சல் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டு நேரம் வீணாக்கப்பட்டிருக்கிறது.
33 லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்பும் தீவுகளும் அடங்கிய இந்தியாவில் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள ஒவ்வொரு பகுதியும் நமது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் 127 கோடிக்கும் மேலான மக்கள்தொகையின் சார்பில் 543 தொகுதியின் பிரதிநிதிகளும் மாநிலங்களின் பிரதிநிதிகளாக 245 பேரும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இடம்பெறுகிறார்கள். இந்த 788 உறுப்பினர்கள் ஒவ்வொருவருடைய குரலும் கருத்தும் அவசியமானது, முக்கியமானது. இவர்கள் சட்டம் இயற்றுகிறார்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் உத்தரவுகளை ஆய்வு செய்கிறார்கள், 127 கோடி மக்களின் நலனைப் பாதுகாத்து, ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்கிறார்கள். இந்த கடமையிலிருந்து இவர்கள் வழுவாமல் இருப்பதன் மூலம்தான் இந்திய அரசியல் சட்டத்தின் வலிமையை கட்டிக்காக்க முடியும்.
'மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் நடைமுறை சிக்கல்களும் அதிகரித்துவிட்டிருப்பதாலும், ஏற்பட்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களால் ஆட்சியாளர்கள் இயற்றும் ஒவ்வொரு சட்டமும் முழுமையான ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தப்பட்ட பிறகே நிறைவேற்றப்பட வேண்டும்' என்கிற பிரணாப் முகர்ஜியின் கருத்து முக்கியமானது. நிறைவேற்றப்படும் சட்டங்கள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களால் போதிய விவாதத்திற்கு உட்படுத்தப்படாமல் போகும்போது அவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அதிகார வர்க்கமும் நீதித்துறையும் இவர்களது சட்டம் இயற்றும் அதிகாரத்தில் தலையிட இடமளிக்கிறார்கள் என்பதையும் மிகச் சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.
பதவி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் பிரணாப் முகர்ஜி மக்களுக்கு ஆற்றிய உரையும் மிகவும் கருத்துச் செறிவும் தீர்க்கதரிசனமும் வழிகாட்டுதலும் கூடியதாக அமைந்தது ஒன்று. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்பது ஏழையிலும் ஏழையான குடிமகனுக்கு, தானும் இந்த தேசத்தில் சம உரிமையும் சம வாய்ப்பும் வளமான எதிர்காலமும் உள்ள பிரஜை என்கிற நம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் சம உரிமை, எல்லா நம்பிக்கைகளுக்கும் சமமான சுதந்திரம், சமச்சீரான வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த தேசம் வளர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
'இந்தியா என்பது கருத்துகள், தத்துவங்கள், அறிவாற்றல், தொழில் துறை ஞானம், கண்டுபிடிப்புகள், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலான வரலாற்று பின்னணியுடைய ஒரு தேசம். பல்வேறு கலாசாரங்கள், நம்பிக்கைகள், மொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முகத்தன்மைதான் இந்தியாவின் தனிச்சிறப்பு. பல நூற்றாண்டு காலமாக பல்வேறு கருத்துகளையும் தத்துவங்களையும் உள்வாங்கியதால் ஏற்பட்ட பன்முகத் தன்மையால் உருவாகியிருக்கிறது' என்று அந்த உரையில் அவர் விரிவாக பேசியதற்கு காரணம் இருக்கிறது.
நாம் வாதம் செய்யலாம், ஏற்றுக் கொள்ளலாம், கருத்து மாறுபடலாம். ஆனால், மாற்றுக்கருத்து இருப்பதை நிராகரிக்கவோ ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதோ தவறு. இல்லையென்றால் நமது தேசத்தின் எண்ண ஓட்டத்தில் அடிப்படை குணாதிசயம் இழக்கப்பட்டுவிடும். பன்முகத்தன்மையும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்பதும்தான் இந்திய மனநிலையின் அடிப்படைத் தன்மை.
அதிகரித்து வரும் வன்முறைகளும், மாற்றுக்கருத்துக்கு இடமளிக்காத தன்மையும் இந்தியாவின் ஒற்றுமையையும் மக்களாட்சி தத்துவத்தில் வலிமையையும் அச்சுறுத்துகின்றன என்று அந்த உரையில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டிருப்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் சிந்தனையாளர்களும், பொதுமக்களும் உணரக் கடமைப்பட்டவர்கள்.
பிரணாப் முகர்ஜி வெளிப்படுத்திய கருத்துகள் அவருடைய கருத்து மட்டுமல்ல; இந்திய தேசத்தின் வருங்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரின் மனசாட்சியும் எழுப்பும் குரல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com