கூடாது கும்பல் கலாசாரம்!

உலகிலேயே மிக அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடாக

உலகிலேயே மிக அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடாக இந்தியா இருந்தாலும்கூட சர்வதேச தரத்திலான திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் இயக்குநர்களுக்கு முழு கருத்துச் சுதந்திரத்தை அளிப்பதிலும் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அரசியல் பின்னணியுடன் கூடிய திரைப்படங்கள் தயாரிக்கப்படும்போது அவை கடுமையான எதிர்ப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றன.
'இந்து சர்க்கார்' என்கிற இந்தித் திரைப்படம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. மதூர் பண்டார்கர் எழுதித் தயாரித்து இயக்கியிருக்கும் இத்திரைப்படம், 1975 முதல் 1977 வரையிலான 21 மாத அவசரநிலைச் சட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டது. நாளை வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி குல்ஹாரி, நீல்நிதின் முகேஷ், அனுபம் கெர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் 70 விழுக்காடு கற்பனை என்றும் 30 விழுக்காடு நிஜமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் இயக்குநர் மதூர் பண்டார்கர் தெரிவித்திருக்கிறார்.
அவசரநிலைச் சட்ட காலத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியுடனும் அவரது மகன் சஞ்சய் காந்தியுடனும் தொடர்புள்ள சில சம்பவங்களை இந்தத் திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அது காங்கிரஸ்காரர்களின் பரவலான விமர்சனத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரால் இயக்குநர் தாக்கப்பட்டிருப்பதும், காங்கிரஸ்காரர் ஒருவர் இயக்குநர் முகத்தில் கரியைப் பூசினால் அதற்குப் பரிசுத் தொகை தருவதாக அறிவித்திருப்பதும் கண்டனத்துக்குரியவை.
காங்கிரஸ், பா.ஜ.க. என்று அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவதும், தாங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது அதற்கு எதிராகக் கொதித்தெழுவதும் வழக்கமாகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை. சகிப்புத்தன்மை இல்லை என்று போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியினர் திரைப்பட இயக்குநர் ஒருவருடைய கற்பனைக்கு எதிராகக் களமிறங்கியிருப்பதும் அவரை அச்சுறுத்துவதும் விசித்திரமாக இருக்கிறது.
திரைப்படம் என்பது கற்பனை சார்ந்தது என்பதையும், ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை ஏற்பதோ ஏற்காமல் இருப்பதோ ரசிகர்கள் சார்ந்தது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சில வரலாற்று நிகழ்வுகளையும் கதாபாத்திரங்களையும் அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் தயாரிக்கப்படும்போது அப்படியே பதிவு செய்தால் அவை ஆவணப்படங்களாக இருக்குமே தவிர, திரைப்படங்களாக இருக்காது.
இந்திரா காந்தி மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த ஒரு ஆளுமையுமே முழுமையான நற்பண்புகளை மட்டுமே கொண்டவராக இருக்க முடியாது. இந்திரா காந்திக்கும் அவருக்கே உரித்தான பலங்களும் பலவீனங்களும் இருக்கத்தான் செய்தன. இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் இயக்குநர் அவரது எல்லா குணாதிசயங்களையும் தனது பார்வையில் பதிவு செய்வதை யாரும் குற்றம் காண முடியாது, கூடாது.
இயக்குநர் மதூர் பண்டார்கர் கூறுவதுபோல, இந்திரா காந்தி இந்தியாவுக்குச் சொந்தமானவரே தவிர எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. 'ஒரு திரைப்படம் வெளிவந்தபின் ரசிகர்கள் அதுகுறித்து தங்களது விருப்பத்தையும் விருப்பமின்மையையும் தெரிவிக்கலாமே தவிர, திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே எனக்கு எதிராக கொதித்தெழுந்திருக்கும் வன்முறைக் கும்பலுக்கு அதை திரையிட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை' என்கிற இயக்குநரின் கருத்து மிக மிகச் சரியானது.
திரைப்படங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவது என்பது புதிதொன்றுமல்ல. தமிழகத்திலேயேகூட 'ஒரே ஒரு கிராமத்திலே', 'விருமாண்டி', 'விஸ்வரூபம்', 'கத்தி' உள்ளிட்ட பல திரைப்படங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்னைகளும், அதன் பின்னணிகளும் உலகம் அறியும். 'இந்து சர்க்கார்' திரைப்படத்தைத் தணிக்கை குழுவுக்கு அனுப்புவதற்கு முன்னால் தங்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும் என்கிற காங்கிரஸ்காரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது என்றாலும்கூட, அப்படியொரு கோரிக்கை எழுப்ப இடம் தரப்பட்டதே தவறு. இந்தப் பிரச்னையில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்வது மலையாளத் திரைப்படங்கள்தான் என்று கூற வேண்டும்.
மலையாளத் திரைப்படங்களில் பதவியில் இருக்கும் முதல்வர்களையும் அமைச்சர்களையும் ஏன், அதிகாரிகளையும்கூட கதாபாத்திரங்களாக்கி விமர்சனத்துக்கு உட்படுத்துவது சர்வ சாதாரணம். அந்தத் திரைப்படங்களை சம்பந்தப்பட்டவர்களே பார்த்து ரசித்துச் சிரிக்கிறார்கள் என்று சொன்னால் எந்த அளவுக்கு அந்தச் சமுதாயத்தின் ரசனையும், புரிதலும் உயர்ந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். மேலைநாட்டுத் திரைப்படங்களிலும் சமகால ஆளுமைகளை நையாண்டி செய்வது வழக்கம்தான்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில் சர்வதேச அளவிலான வன்முறைகளும் விரசங்களும் வரவேற்பறையில் குப்பைக்கூளங்களைப்போல அனுதினமும் கொட்டப்படும் சூழலில் தணிக்கை என்பது கேலிக்கூத்தாக மாறிவிட்டிருக்கிறது. வன்முறைக்கும் விரசத்துக்கும் கடிவாளம் போடும் முயற்சியில் இயக்குநரின் கற்பனைக்குத் தடை போடும் விதத்தில் தணிக்கைக் குழு மாறிவிட்டிருக்கும் நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாளை வெளிவர இருக்கும் 'இந்து சர்க்கார்' திரைப்படம் வெற்றி அடையுமா, தோல்வி அடையுமா என்பது ஒருபுறமிருக்க, இதுபோன்ற திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதும் வெளியிடப்படுவதும் விமர்சனத்துக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உட்படாமல் இருக்குமா என்பதுதான் இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com