வாலு போச்சு... கத்தி வந்தது..!

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம்

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்திருப்பதும், மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதும் ஆச்சரியமானதோ எதிர்பாராததோ அல்ல. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற காரணத்துக்காக பா.ஜ.க.வுடனான தனது 17 ஆண்டு கால நட்புறவை நிதீஷ் குமார் முறித்துக்கொண்டதும், அவரது அரசியல் எதிரியாகக் கருதப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டதும் எப்படி வியப்பை அளிக்கவில்லையோ, அப்படியே இதுவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
கடந்த 2014 ஜூலை மாதம் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமார் கைகோத்தபோதே இந்தக் கூட்டணி நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது என்பது அனைவருக்குமே தெரியும். முந்தைய சட்டப்பேரவையில் வெறும் 22 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனது பலத்தை 80-ஆக அதிகரித்துக் கொண்டதற்குக் காரணம் ஐக்கிய ஜனதா தளத்துடனும் காங்கிரஸுடனும் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணிதானே தவிர, அதன் செல்வாக்கு அதிகரித்தது அல்ல. 2015 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அந்தக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது என்றாலும்கூட, பா.ஜ.க. கூட்டணியில் அதிக இடங்களுடன் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம், 71 இடங்களை பெற்று, லாலு யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைவிடக் குறைவான இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாகத்தான் வரமுடிந்தது.
லாலுவின் மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கியது மட்டுமல்லாமல், ஒவ்வொரு செயல்பாட்டிலும் தலையிடத் தொடங்கியது லாலுவின் குடும்பம். 2015 நவம்பர் மாதம் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் முதல்வரானபோது 9.11.2015-இல் 'இனிமேல்தான் தலைவலியே!' என்கிற நமது தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம் -
'ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்கிற அளவில், தாற்காலிகமாக மகிழ்ச்சி அடையலாமே தவிர, முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பிரச்னைகளை முதல்வர் நிதீஷ் குமார் எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் எதார்த்த உண்மை. 2005-இல் இருந்து பத்து ஆண்டுகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, அந்தக் கூட்டணியில் அதிக இடங்களைக் கொண்டிருந்தது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்தான். இப்போது நிலைமை அதுவல்ல. கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றிருப்பது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம். கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி சுகத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றி நிறுத்தப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவின் கட்சியினர் தங்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவே விரும்புவார்கள்.
அமைச்சரவை அமைப்பதிலிருந்து முதல்வர் நிதீஷ் குமாருக்குப் பிரச்னைகள் தொடங்கிவிடும். அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இடமாற்றத்தில் தொடங்கி அரசின் எல்லா வளர்ச்சிப் பணிகளிலும் பங்கு கேட்பது வரை, லாலு பிரசாத் யாதவ் கட்சியினரின் கோரிக்கைகளுக்குத் தலைவணங்காமல் முதல்வர் நிதீஷ் குமாரால் பதவியில் தொடர முடியாது. முன்பு, சுஷில்குமார் மோடி தலைமையிலான பா.ஜ.க.வினர்போல ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் நிதீஷ் குமாரின் கட்டுப்பாட்டில் இருக்கப் போவதில்லை.'
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் ஆகிய மூன்று வாக்குவங்கிகளையும் இணைத்தால் வெற்றிக் கூட்டணியாக மாறும் என்று திட்டமிட்ட பெருமை நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவரையும் சாரும். 1990-இல் லாலு பிரசாத் யாதவின் தலைமையில் ஜனதா தள ஆட்சியும் அமைந்தது. ஜனதா தளம் ஆட்சிக்கு வந்த பிறகு, லாலு பிரசாத் யாதவ் மற்ற இருவரையும் பின்னுக்குத் தள்ளி, தன்னை ஓர் அரசியல் சக்தியாக வளர்த்துக் கொண்டார்.
லாலுவின் தலைமையிலான ஜனதா தள ஆட்சியில், பட்டியலின வகுப்பினருக்கும், யாதவர் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. குர்மி, கோரி, லோத் உள்ளிட்ட யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதீஷ் குமாரின் பின்னாலும், பட்டியலினத்தவர்கள் ராம்விலாஸ் பாஸ்வான் பின்னாலும் அணி திரண்டதன் விளைவுதான் ஜனதா தளத்தில் ஏற்பட்ட பிளவும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியும் பா.ஜ.க.வுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததும், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. - லோக் ஜன சக்தி கூட்டணி வெற்றி பெற்று பிகாரில் ஆட்சியையும் அமைத்ததும்.
லாலு பிரசாத் யாதவின் பலம் யாதவர்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் வாக்குவங்கி என்று சொன்னால், நிதீஷ் குமாரின் பலம் ஊழலற்ற, திறமையான நிர்வாகி என்பது. இவற்றுக்கு இடையே உள்ள போட்டிதான் பிகாரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
நிதீஷ் குமார் பா.ஜ.க.வுடன் கைகோத்து ஆட்சி அமைக்காமல் போனால், ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பிளவு ஏற்பட்டிருக்கக் கூடும். தமிழகத்தைப் போலவே பிகாரிலும் எந்தவொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லை. பா.ஜ.க.வின் ஆதரவுடன் மீண்டும் நிதீஷ் குமார் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் பிளவு ஏற்பட்டு அவரது ஆட்சிக்கு ஆதரவளிக்க அந்தப் பிரிவினர் முன்வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com