விதியை நோவதல்லால்...

சென்னை தியாகராய நகரில் உள்ள 'சென்னை சில்க்ஸ்' துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அந்த ஏழு மாடிக் கட்டடம் எரிந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள 'சென்னை சில்க்ஸ்' துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அந்த ஏழு மாடிக் கட்டடம் எரிந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்திற்குக் காரணம் சதித் திட்டம் எதுவும் இல்லை என்பது ஆறுதல். உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது அதைவிட ஆறுதல்.
சென்னை தியாகராய நகரில் இதுபோன்ற தீவிபத்து ஏற்படுவது புதிது ஒன்றுமல்ல. இதற்கு முன்னால் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸிலும் ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸிலும் தீ
விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கு பிறகாவது அரசும் மாநகராட்சி நிர்வாகமும் விழித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறதா என்று பார்த்தால் அப்படியொரு முனைப்பு காணப்பட்டதாகவே தெரியவில்லை.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடையின் கீழ்த்தளத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. பொதுமக்கள் இதை காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்றபோது அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குக் காரணம் கடையின் முன்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருந்ததே.
குளிர்பதன வசதியுடன் கூடிய அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் நான்கு பகுதிகளும் கான்கிரீட்டால் அடைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவி எல்லா தளங்களும் புகை மண்டலமாக மாறிவிட்டிருந்தன. புகை வெளியேற வழியில்லாததால் ஏற்பட்ட வெப்பத்தால் கட்டடத்திற்குள் இருந்த கண்ணாடிகள், டைல்ஸ் ஆகியவை வெடித்துச் சிதறின. இதனால் தீயணைப்புப் படை வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவிக்க நேரிட்டது. புகையை வெளியேற்றி வெப்பத்தைக் குறைக்கக் கட்டடத்தின் பின்புற சுவர், பக்கவாட்டு சுவர், முன்புறம் இருந்த கண்ணாடிகள், அதன் உட்புறத்திலிருந்த கான்கிரீட் சுவர் ஆகியவை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டன. தீயை அணைக்கும் பணி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடைக்கு இந்த நிலைமை என்றால் ரங்கநாதன் தெருவில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல வணிக வளாகங்களில் இதுபோன்ற தீவிபத்து ஏற்பட்டால் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் ரங்கநாதன் தெருவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் அங்கிருக்கும் வணிக வளாகங்களுக்கு செல்லும்போது இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகளைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
தவறுகள் நடக்கும்போது அதை எதிர்கொள்வது மட்டுமல்ல ஒரு நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், தவறு செய்பவர்களை தண்டிப்பதும்தான் நல்ல நிர்வாகமாக இருக்க முடியும். கட்டடங்களுக்கு விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கும் நோக்கமே பாதுகாப்பும் சீரான திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சியும்தான். வணிக வளாகங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் விதிமுறைகளை மீறி கட்டப்படும்போது ஒரு சிறிய நில அதிர்ச்சியோ, கட்டுமானத்தில் குறைபாடோ, தீவிபத்தோ மிகப்பெரிய விபத்தில் முடிந்து உயிர்ச்சேதத்திற்கும் பொருள் சேதத்திற்கும் வழிகோலும் என்பதால்தான் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
ஒரு சாலையின் அகலத்தைக் கணக்கில் கொண்டுதான் அதில் கட்டடங்கள் அமைய வேண்டும். குறுகலான சென்னை ரங்கநாதன் தெருவில் வணிக வளாகங்களை அனுமதித்ததால்தான் சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து நேர்ந்தபோது அந்த தெருவில் தீயணைப்பு படையினரால் சுலபமாக உள்ளே நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டது. அதேபோல சென்னை சில்க்ஸ் துணிக்கடை அமைந்திருக்கும் பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு தெருவோரக் கடைகளின் ஆக்கிரமிப்புகள் இருந்ததால்தான் சுலபமாக தீயணைப்பு படை வீரர்கள் செயல்பட முடியாமல் தவித்தனர்.
இதற்கெல்லாம் காரணம் சரவணா ஸ்டோர்ஸோ, சென்னை சில்க்ஸ் நிறுவனமோ அல்ல. மாநகராட்சி நிர்வாகம், அந்த நிறுவனங்கள் விதிகளை மீறாமல் வணிகவளாகத்தை எழுப்புவதை உறுதிப்படுத்தாமல் இருந்ததும், தெருவெல்லாம் ஆக்கிரமிப்புகளை தங்குதடையின்றி அனுமதித்ததும்தான் தவறுக்கு காரணம்.
சென்னை பெருநகரில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் அனுமதி பெறாமலும் வரம்பு மீறியும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 150 வணிக வளாகங்களும் அடங்கும். இப்படி விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் இடிப்பதை விட்டுவிட்டு விதிமுறை மீறல்களுக்குப் பெயருக்கு ஒரு அபராதம் விதித்து விதிவிலக்கு அளிக்கும் விநோதம்தான் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் செய்யப்பட்ட விதிமுறை மீறல்களை மன்னிப்பது என்றும், தவறுகளை சிறிய கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசே முடிவெடுக்குமானால் தொடர்ந்து விதிமீறல் கட்டடங்கள் எழுப்பப்படுவதில் வியப்பு என்ன இருக்கிறது?
தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் மூன்று மாடிக்கு அதிகமாக உள்ள வளாகங்கள் தடை செய்யப்படுவதும், சென்னை உஸ்மான் சாலை, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுவதும், அந்தப் பகுதிகளில் தெருவோர ஆக்கிரமிப்புகளும் கடைகளும் அகற்றப்படுவதும் உடனடியாக செயல்படுத்தப்படாமல் போனால் அடுத்த விபத்துக்கு நாம் தயாராகிறோம் என்பது பொருள். மிக அதிகமான உயிர் பலி கொடுத்துதான் நாம் பாடம் படிப்போம் என்றால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com