தேவைதானா?

கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட சில கால்நடைகளை விற்கவும் வாங்கவும் தடைவிதித்து கடந்த மே 23-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு

கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட சில கால்நடைகளை விற்கவும் வாங்கவும் தடைவிதித்து கடந்த மே 23-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இளம் கால்நடைகளை சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரக் கூடாது, கால்நடைச் சந்தைகளுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகள் இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ வரவில்லை என்று எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும், கால்நடைகளை விற்பனை செய்பவர், தான் விவசாயிதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது மத்திய அரசின் உத்தரவு.
பசுவதைத் தடுப்பு குறித்த கோரிக்கை இன்று நேற்றல்ல, சுதந்திரத்திற்கு முன்பிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸில் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தது முதல், எல்லா அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கும் முந்தைய நாள் பசுவதைத் தடுப்பு மாநாடு நடத்தப்படுவது என்பது வழக்கமாகவே இருந்தது. காந்தியடிகளுக்குப் பிறகு வினோபா பாவே பசுவதைத் தடுப்பு இயக்கத்தைத் தனது கடைசி மூச்சுவரை முன்னெடுத்து நடத்தி வந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான காரணம், நமது பாரம்பரிய மாட்டு இனங்களைப் பாதுகாப்பதுதான் என்றால், பசுவதைத் தடுப்பு என்பதையும் நாம் ஆதரித்தாக வேண்டும். ஒருபுறம் பசுக்களை அழிப்பதும், மறுபுறம் பாரம்பரிய மாட்டு இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குரலெழுப்புவதும் போலித்தனத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை யாருமே மறுக்கவில்லை. பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நமது இந்திய சமூகம், குறிப்பாக, இந்து சமூகம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதையும், பொருளாதார ரீதியாக நாட்டு மாடுகளை வளர்த்துப் பராமரிப்பது சாத்தியமா என்பதையும் நாம் சற்று யோசிக்க வேண்டும். பசுவதையை எதிர்ப்பவர்களில் எத்தனை பேர், கோசாலைகளை அமைத்திருக்கிறார்கள்? கோசாலைகளில் நாட்டுப் பசுக்களின் பராமரிப்புக்கு உதவி செய்திருக்கிறார்கள்? ஒரு பிடிப் புல்லையாவது நாட்டுப் பசுக்களுக்குத் தந்திருப்பார்களா?
நாட்டுப் பசுக்களை வைத்துப் பால்பண்ணை நடத்திவிட முடியாது. எந்தவொரு விவசாயியும் நாட்டுப் பசுவைப் பாலுக்காக வளர்க்க முற்பட மாட்டார். காரணம், ஒரு லிட்டருக்கும் அதிகமாகப் பால் கறக்கும் நாட்டுப் பசு இனங்கள் மிகமிகக் குறைவு. ஜெர்சி, சிந்தி, ஹோல்ஸ்டின் உள்ளிட்ட கலப்பினப் பசுக்களை வளர்ப்பவர்களும்கூட, கறவை வற்றிய பசுக்களைப் பராமரிப்பது என்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை. அவர்கள் இறைச்சிக்கூடங்களுக்கு அந்த மாடுகளை விற்கக் கூடாது என்று சொன்னால், அந்த மாடுகளை வாங்கிப் பராமரிக்க அதிக அளவில் கோசாலைகள் செயல்பட வேண்டும்.
ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிலரைத் தவிர, கோசாலைகள் வைத்துக் கிழட்டுப் பசுக்களைப் பராமரிக்கும் பெரிய மனதுடையோர் இங்கே இல்லை. கோயில்களில் உள்ள கோசாலைகளிலேயேகூட தானமாக வழங்கப்படும் பசுக்கள் இறந்துவிட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டு, கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன என்பது இந்து அறநிலையத் துறைக்குத் தெரிந்தே நடக்கும் முறைகேடு. இதுதான் யதார்த்தம்.
மத்திய அரசின் இந்த உத்தரவு, நியாயமாக வேளாண் அமைச்சகத்தின் கால்நடைப் பராமரிப்புத் துறையால் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத வழிபாடுகளில் கால்நடைகளை பலியிடுவதும், உணவுக்காகக் கொல்லப்படுவதும் பிராணிகள் வதைத் தடுப்பு சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது எப்படி நீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறும் என்பது தெரியவில்லை.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் நோக்கம் மாட்டிறைச்சி உண்பதைத் தடுப்பதல்ல என்று தோன்றுகிறது. நாடு தழுவிய அளவில் செயல்படும் தனியார் கசாப்புக் கடைகளுக்கு மூடு விழா நடத்துவதுதான் இதற்குப் பின்னணியாக இருக்கக்கூடும். 'ஆட்டுத்தொட்டி' போன்று சுகாதாரமான முறையில் நடத்தப்படும் ஆடு, மாடு வதைத் கூடங்களைவிட, ஆங்காங்கே சிறிய அளவில் தனியாரால் சட்டப்படியும், சட்ட விரோதமாகவும் நடத்தப்படும் வதைக் கூடங்கள்தான் அதிகமாக உள்ளன. இந்த இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு சுகாதாரமான இறைச்சி கிடைக்கும் என்பது ஒரு வாதம்.
அதேநேரத்தில், ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி புரளும் இறைச்சித் தொழிலில் இப்போது உரிமம் பெற்றுத் தொழில் நடத்தும் 'கார்பரேட்' இறைச்சி விற்பனையாளர்களின் பங்கு வெறும் 10% மட்டுமே. இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுமானால், ஒருபுறம் லட்சக்கணக்கான சிறு கசாப்புக் கடைக்காரர்கள் வேலை இழப்பார்கள். சுகாதாரமான மாமிசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து கார்ப்பரேட்டுகள் கொழிப்பார்கள். இதில் எது வேண்டும் என்பதுதான் மக்கள் மன்றத்தின் முன்னால் இருக்கும் கேள்வி.
2015 - 16இல் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி ரூ.26,684 கோடி. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதிக அளவிலான வேலை இழப்பு மட்டுமல்ல, இறைச்சி, தோல் உள்ளிட்ட ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியையும் நாம் இழக்க நேரிடும். அதனால், பாகிஸ்தானும், வங்கதேசமும் பலனடையும். எத்தனை எத்தனையோ முக்கியமான பிரச்னைகள் இருக்கும்போது, தேவையில்லாமல் இந்தப் பிரச்னையை ஏன் எழுப்பி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காரணம் இல்லாமலா இருக்கும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com