இவர்களும் இந்தியர்கள்தான்!

யுனெஸ்கோ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, இந்தியாவிற்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வேலைவாய்ப்புத் தேடிக் குடியேறி இருப்பவர்களின் எண்ணிக்கை,

யுனெஸ்கோ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, இந்தியாவிற்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வேலைவாய்ப்புத் தேடிக் குடியேறி இருப்பவர்களின் எண்ணிக்கை, இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிப் போகிறவர்களின் எண்ணிக்கையைவிட இது பல மடங்கு அதிகம். இப்படி வேலை தேடி இடம்பெயர்பவர்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தையே இயக்கி வருகிறார்கள்.
தங்கள் சொந்த ஊரிலிருந்து வேறு ஊர்களுக்கு வேலைவாய்ப்புத் தேடி இடம் பெயர்கிறவர்களில் பெரும்பாலோர், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்கள். படித்து, நிரந்தர வேலை கிடைத்து இடம்பெயர்பவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை. ஆனால், அதிகம் படிக்காத தினக்கூலி வேலைகளிலும், விவசாய, கட்டடப் பணி உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபடுகிற இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
இப்படி இடம்பெயர்ந்தவர்கள் அரசின் சமூகநலத் திட்டங்களில் பயனாளிகளாக இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, இடம்பெயர்ந்த பெண்கள், குழந்தைகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். அவர்கள் எல்லாவிதக் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும், குறைவான கூலி கூடத் தரப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும்தான் உண்மை நிலை.
இன்றைய சூழலில், இந்தியாவிலுள்ள எந்தவொரு நகரமும், இடம்பெயர்ந்து வந்திருக்கும் வெளியூர் தொழிலாளிகளின் உதவியில்லாமல் இயங்க முடியாது. அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி, உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர், குடியிருப்புக் காவலாளிகள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பு உழைக்கும் வர்க்கத்தினரும் இடம்பெயர்ந்து வெளியூர்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்திருப்பவர்கள்தான். இவர்களது உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நகர்ப்புற வாசிகள், தங்கள் சொந்த ஊரை விட்டு வயிற்றுப் பிழைப்புக்காகப் பட்டணம் வந்திருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து சற்றேனும் கவலைப்படுகிறார்களா என்றால் இல்லை.
இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களிலும் இதுதான் நிலைமை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் சென்னையில், அதுவும்கூட கூவம், அடையாறு கரையோரங்களிலும், கடற்கரைப் பகுதியிலும் மட்டும்தான் குடிசைப் பகுதிகள் இருந்த நிலைமை மாறி, தமிழகத்தில் தாலூகா தலைநகர்வரை குடிசைப் பகுதிகள் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
குடிசைப் பகுதிகள் காளான்களாகத் தோன்றுவது போதாதென்று, நகர்ப்புறங்களில் தெருவோரம் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், அவர்களது உழைப்பையும் சேவையையும் பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் தெருவோரம் வசிப்பவர்களும், குடிசைப்புறவாசிகளும் நகரத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுப்பதாகவும் கருதும் நகர்ப்புறவாசிகளின் இரட்டை முகம் குறித்து வேதனைதான் பட முடிகிறது.
இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வேலைத் தேடி வருபவர்களைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, அவர்கள் அடிப்படை வசதிகளுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதுகுறித்து 60 ஆண்டுகளுக்கு முன்னால் 'சுயராஜ்யா' இதழில் ராஜாஜி விரிவாக எழுதியிருக்கும் கட்டுரை, இன்றளவுக்கும் பொருத்தமானதாக இருப்பது, அந்த மூதறிஞரின் தீர்க்கதரிசனத்தை எடுத்துரைக்கிறது.
இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வருபவர்களைவிட, அதிகமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். கல்வி கற்கும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்றாலும், கூலி வேலை, கட்டட வேலையில் ஈடுபட்டிருப்பவர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குவது நடைமுறை சாத்தியமாகவில்லை. தினந்தோறும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் ஓர் கட்டடத் தொழிலாளர் மரணம் அடைகிறார். அப்படி இருக்கும்போது, கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் குழந்தைகளின் கதி என்ன என்பது குறித்து சிந்திக்கத் தோன்றுகிறது. விபத்துகளில் அந்தக் குழந்தைகள் சிக்காமல் தப்பினாலும், சிமெண்ட், மணல், செங்கல் துகள்களால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. நடமாடும் மருத்துவமனைகள், குழந்தைகள் பாதுகாப்பு, தங்குமிடம், கல்வி வசதி போன்றவை எல்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் பயனளித்திருப்பதாகத் தெரியவில்லை.
சட்டப்படி பெரிய கட்டடப் பணிகளில் 50 பெண்களுக்கு மேல் பணியாற்றினால் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதில்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில்கூட அவர்களை அனுமதிக்க முடியாது. காரணம், இடம்பெயர்ந்து, முகவரி இல்லாமல் இருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை, பருவமழையும் பொய்த்து, ஆறுகளும் வறண்டு கிடக்கும் நிலையில், கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டிருக்கிறது. இவர்களது பிரச்னைகளை விசாரித்து அறிந்து, தீர்வு காண்பதற்காகவே தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையை சரியான முறையில் அணுகாமல் போனால், வருங்காலத்தில் சமூக விரோதிகளை உருவாக்குவதற்கு நாம் வழிகோலுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com