வளரவில்லையே ஏன்?

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி.) கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.1%}தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைவான வளர்ச்சியை இந்தியா சந்தித்திருப்பது இப்போதுதான். 2015-16-இல் வளர்ச்சி குறித்த திருத்தப்பட்ட புள்ளிவிவரப்படி 8% வளர்ச்சி காணப்பட்டது. வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரம் இதுபோல 2% குறைவான வளர்ச்சிக்குத் தளர்வது என்பது ஆரோக்கியமானதல்ல.
வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்கு செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு மட்டுமே காரணமல்ல என்கிற நிதியமைச்சரின் கருத்தை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், அரசின் அதிரடி முடிவால், பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்த அதிர்ச்சியிலிருந்து எந்தவொரு துறையும் முழுமையாகப் புத்துயிர் பெற்று செயல்படத் தொடங்கவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்த புள்ளிவிவரங்களிலிருந்து, வங்கிக் கடன் வழங்குதல் கணிசமாக அதிகரிக்கவில்லை என்பதும், புதிய முதலீடுகள் அதிகமாக வராமல் போனதும் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றன என்பது தெரிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளுக்குத் தர வேண்டிய கடன் தவணைகளை முறையாகத் திருப்பித் தராமல் இருப்பதால், வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்ததாகத் தெரியவில்லை. இதனால், வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்கிப் பொருளாதாரத்தை முடுக்கிவிடக் தயங்குகின்றன. விளைவு, இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சி அடையாமல் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருப்பதுபோல, சர்வதேசப் பொருளாதாரச் சுணக்கமும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தன்னலம் சார்ந்த கொள்கை முடிவுகளும் இந்தியாவை பாதித்தும்கூட, நம்மால் 7.1% மொத்தஉள்நாட்டு உற்பத்தி விகிதத்தை எட்ட முடிந்திருக்கிறது. சர்வதேச அளவில் குறைந்திருக்கும் கச்சா எண்ணெய் விலைதான், இந்த அளவுக்கு நிதி நிலைமையை அரசால் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதற்குக் காரணம்.
கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் பொருளாதாரம் 6.1% அளவுக்குத்தான் வளர்ச்சி அடைந்தது என்பதற்குப் பொருளாதார நிபுணர்கள் செலாவணி செல்லாததாக்கிய முடிவைத்தான் காரணம் காட்டுகிறார்கள். "கடுமையான அந்த முடிவால் இந்தியப் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி இருக்கிறோம்'
என்கிற நிதியமைச்சரின் கூற்று, பிரதமரின் புகழுக்கும், ஆளும் கட்சியின் செல்வாக்குக்கும் பயன்பட்டிருக்கிறதே தவிர, அடிப்படைப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்திருக்கிறது என்பதைத்தான், அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் வெளிப்படுத்துகிறது.
மரபுசாராத் துறைகள் அனைத்திலும் பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கட்டடத் துறைதான் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புக்கான வழி. இந்தத் துறை 3.7% வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. சேவைத் துறைகளும் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவால் பாதிக்கப்பட்டு, அதிக அளவிலான வேலைவாய்ப்பு இழப்புக்கு வழிகோலி இருக்கின்றன. வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்க அதிகரிக்க, மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைகிறது.
செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு, துணிச்சலான முடிவு என்பதிலும், பிரதமர் நரேந்திர மோடி கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்தார் என்பதிலும் ஐயப்பாடில்லை என்பதை, தொடர்ந்து மக்கள் அவருக்கும் அவரது கட்சிக்கும் தேர்தல்களில் அளித்துவரும் ஆதரவிலிருந்து தெரிகிறது. எண்ணத்தை யாரும் சந்தேதிக்கவில்லை என்றாலும்கூட, அதன் விளைவுதான் என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதானே ஜனநாயகமாக இருக்க முடியும்?
இந்திய ரிசர்வ் வங்கி, ஏறத்தாழ ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும்கூட செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு குறித்த
விவரங்களை வெளிப்படுத்த முன்வராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுகுறித்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான,
முழுமையான பதில்களையோ, தகவல்களையோ தர மறுக்கிறது தகவல் உரிமை ஆணையம். இதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்துவது, தேசத்தின் பொருளாதாரத்தையும், நிதிக் கொள்கையையும் பாதிக்கும் என்று கூறுவது அபத்தம்.
செலாவணி செல்லாததாக்கும் முடிவுக்கு, கருப்புப் பணம்
முற்றிலுமாக ஒழிக்கப்படும், கள்ளநோட்டுகளின் புழக்கம் ஒழிக்கப்படும், தீவிரவாதம் தடுக்கப்படும் என்றெல்லாம் காரணங்கள்
கூறப்பட்டன. பிறகு, ரொக்கமில்லா பரிவர்த்தனைதான் இலக்கு என்று கூறப்பட்டது. ஊழல் கணிசமாகக் குறையும் என்று சொன்னார்கள். இவை எதுவுமே சாத்தியமானதாகத் தெரியவில்லை. நிதர்சன உண்மை என்னவென்றால், வேலைவாய்ப்பு உருவாவது குறைந்து, வேலைவாய்ப்பு இழப்பு பெரிய அளவில் ஏற்பட்டிருப்
பதும், அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளா
தார வளர்ச்சி 8% இலக்கிலிருந்து 7.1%}ஆகக் குறைந்திருப்பதும்தான்.
அரசும் அரசியல்வாதிகளும் உண்மைகளையும் தகவல்களையும் மறைக்கலாம். ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் வெளிப்
படைத் தன்மை இல்லாமல் போனால் எப்படி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com