அச்சுறுத்தும் தீவிரவாதம்!

பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த பதினைந்து நாட்களில் இரண்டாவது முறையாக இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, தேர்தல் முடிவுகளை பாதிக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறதோ என்றுகூட சந்தேகிக்க இடமுண்டு.
லண்டன் நகரின் முக்கியமான இடங்களான லண்டன் பாலம், பரோ சந்தை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் ஈடுபட்டனர். லண்டன் பாலத்தில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்து, பக்கவாட்டில் இருக்கும் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியபடி விரைந்தனர் அந்த மூவரும். லண்டன் பாலத்தைக் கடந்து அருகேயுள்ள பரோ சந்தைப் பகுதியில் நுழைந்தது அந்த மூவர் அணி.
அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உணவகங்களில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் அவர்கள் கத்தியால் தாக்கத் தொடங்கினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 7 பேர். காயமடைந்தவர்கள் 48 பேர். தகவல் கிடைத்த சில நிமிடங்களில் விரைந்து வந்த காவல்துறையினர், தீவிரவாதிகள் மூவரையும் சுட்டுக்கொன்று அவர்களது வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
பயங்கரவாதிகள் பிரிட்டனைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 22-ஆம் தேதி, இப்போது நடந்தது போலவே வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் காலித் மசூத் என்பவர் நடந்துபோவோர் மீது காரை ஏற்றி கொன்றதுடன், காவலர் ஒருவரையும் கத்தியால் குத்திய சம்பவம் இன்னும் விசாரணையில் இருக்கிறது. இதேபோல, கடந்த மாதம் 22-ஆம் தேதி, மான்செஸ்டர் நகரில் அமெரிக்கப் 'பாப்' பாடகி ஆரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்தனர். கிராண்டேயின் நிகழ்ச்சி நடந்த அரங்கில், சல்மான் அபேதி என்ற பயங்கரவாதி, மனித வெடிகுண்டாக மாறித் தாக்குதலை நிகழ்த்தினார். இதன் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இருந்ததாகத் தெரிகிறது.
லண்டன் மேயராக இருப்பவர் சாதிக் கான் என்கிற இஸ்லாமியர் என்பதால், அவர்மீது ஆத்திரம் கொள்கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமான ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை மேயர் சாதிக் கான் கண்டிக்கவில்லை என்பது அவர்களது கோபத்துக்குக் காரணம். ஸ்டீபன் மோரிஸ்ஸி என்கிற பாடகர், ஐ.எஸ். தீவிரவாதத்தைக் கண்டிக்காதது ஏன் என்று மேயர் சாதிக் கானையும், மக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் குண்டு துளைக்காத பாதுகாப்புக் கவசத்தில் நடக்கிறார் என்று பிரதமர் தெரசா மேவையும் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி அறிக்கை விட்டிருக்கிறார். அவருடைய இந்த அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் பரவலாக ஆதரவு பெருகி வருகிறது.
இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருப்பது புதிது அல்ல. 2015-இல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயங்கும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பா இதுவரை 14 பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களை சந்தித்திருக்கிறது. இதுவரை ஐரோப்பாவில் மட்டும் முந்நூறுக்கும் அதிகமான உயிரிழப்புகள் தீவிரவாதத் தாக்குதல்களில் ஏற்பட்டிருக்கின்றன. மாட்ரிட் ரயில் குண்டு வெடிப்பில் 192 பேர், லண்டன் குண்டு வெடிப்பில் 55 பேர் என்று தொடங்கி, இப்போது ஐரோப்பாவில் எந்த நாட்டில் எந்த ஊரில் எங்கே எப்போது குண்டு வெடிக்கும் என்று தெரியாத அச்ச உணர்வு நிலவுகிறது.
பல ஐரோப்பியர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிவிட்டிருக்கிறார்கள். இவர்களது குழந்தைகள் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதலால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களில் யார் தீவிரவாதி என்பதைக் காவல்துறையால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, தற்போது சிரியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பழிவாங்க நினைக்கிறது.
கடந்த ஓராண்டாக, மிகப்பெரிய அளவில் மேற்கு ஆசியாவிலிருந்து அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அந்த அகதிகளை வெளியேற்றவும் முடியாமல், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கவும் முடியாமல் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் திணறுகின்றன. அந்த நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், அகதிகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமை அந்த நாடுகளுக்கு. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆத்திரமும்கூட, தீவிரவாதிகளுக்கு சாதகமானதாக இருக்கிறது.
மதத்தின் பெயரால் நடைபெறும் போரும், தாக்குதலும் உலகுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இப்போது வெடிகுண்டுக் கலாசாரம் அதிகரித்து விட்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்களால், பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள் என்பதுதான் வேதனையளிக்கிறது. ஒரு சில தீவிரவாத சிந்தனையாளர்களின் மனிதாபிமானமற்ற செயல்பாடுகளால், இதை ஓர் இனத்திற்கு எதிரான வெறுப்பாக மாற்ற முற்படுவதும்கூட மனிதாபிமானமற்ற செயல்பாடுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எழுநூறு கோடி மக்கள் வாழும் பூமிப்பந்தின் அமைதியை, துப்பாக்கியும் வெடிகுண்டும் ஏந்திய ஒரு சிலர் அச்சுறுத்துகிறார்கள் என்றால், அதை எதிர்கொள்ள உலகம் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். இல்லை என்றால், மனித இனத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com