நேர்மை தூய்மை எளிமை!

ஆளுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரியும்போது

ஆளுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரியும்போது மனம் பதைபதைக்கிறது. துக்கம் நெஞ்சை அடைக்கிறது. இவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடம் நிரப்பப்படாமலே இருக்குமே என்பதை நினைத்து நெஞ்சம் கனக்கிறது. இரா. செழியன் இன்று முதல் கடந்த காலமாகக் கடந்து சென்று விட்டிருக்கிறார்.
காவிரியாற்றின் கரையிலுள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த இரா. செழியன் என்கிற அரசியல் ஞானி, யமுனை நதிக் கரை
யிலுள்ள தில்லித் தலைநகரில் ஏற்படுத்திய தாக்கம், நமது நாடாளுமன்றம் உள்ளவரை பேசப்படும். அண்ணாவால் திராவிட இயக்கப் பாசறையில் தயாரான ஒருவர் அந்தக் கொள்கைகளைக் கடைசிவரை தக்கவைத்துக் கொண்டு தேசிய நீரோட்டத்திலும் செயல்பட முடிந்தது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். சொல்லப்போனால், அண்ணா தேசிய அரசியலில் விட்டுச் சென்ற இடத்தை இட்டு நிரப்பிய பெருமை இரா. செழியனைத்தான் சாரும்.
அண்ணாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் கடைசிவரை தொடர்ந்த ஒருவர் இருந்தார் என்றால் அது இரா. செழியனாக மட்டும்தான் இருக்க முடியும். அண்ணா கடைசிவரை கடைப்பிடித்த அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்கிற கோட்பாடுகளைத் தமது இறுதி மூச்சுவரை கடைப்பிடித்து வாழ்ந்த அணுக்கத் தொண்டர்!
15 ஆண்டுகள் மக்களவையிலும், 12 ஆண்டுகள் மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இரா. செழியனின் தனிச்சிறப்பு, அவர் நாடாளுமன்ற நடைமுறைகளையும் விதிமுறைகளையும் கரைத்துக் குடித்து வைத்திருந்த ஆற்றல், அவர் ஓய்வுபெற்ற பிறகும்கூட, மக்களவைத் தலைவர்களாக இருந்த ரவி ரே, சோமநாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாகத் தொடர்பு கொள்வது இரா. செழியனாகத்தான் இருக்கும். அரசியல் சாசன உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயருக்குப்பிறகு, அகில இந்திய அளவில் போற்றப்பட்ட தமிழக நாடாளுமன்றவாதி இரா. செழியனாகத்தான் இருப்பார்.
இரா. செழியனை திராவிட அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு இழுத்துச் சென்றது, அன்றைய இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த அவசரநிலைச் சட்டம். ஜனநாயகத்திற்கும் பேச்சுரிமைக்கும் எதிராகப் போடப்பட்ட அவசரநிலைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியபோது, அவர் ஜெயபிரகாஷ் நாராயணனாலும், ஜெயபிரகாஷ் நாராயண் இரா. செழியனாலும் ஈர்க்கப்பட்டனர். அண்ணாவுடன் இரா. செழியனுக்கு இருந்தது போன்ற நெருக்கமும் உறவும் ஜெயபிரகாஷ் நாராயணனுடனும் ஏற்பட்டது. ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, தன்னைத் தேடிவந்த அமைச்சர் பதவியை மறுத்துக் கட்சிப் பணியில் ஈடுபட முற்பட்ட இரா. செழியனின் பற்றற்ற தன்மையைப் பார்த்து வியக்காத தேசியத் தலைவர்களே இல்லை.
அமைச்சர் பதவியை மட்டுமல்ல, தன்னை இரண்டு முறை தேடிவந்த ஆளுநர் பதவியையும் வேண்டாமென்று மறுக்க இரா. செழியனால் மட்டுமே முடிந்தது. பதவி அவரை ஈர்க்கவில்லை. பணம் அவரை மயக்கவில்லை. இதற்கு அவர் கூறும் காரணம், நான் அண்ணாவால் வழிநடத்தப்பட்டவன் என்பதுதான்.
இரா. செழியனின் மிகப்பெரிய பங்களிப்பு மறைக்கப்பட்ட ஷா கமிஷன் அறிக்கையை தூசுதட்டி எடுத்து புத்தகமாகப் பிரசுரித்தது. அவசரநிலை காலத்தில் நடந்தேறிய தவறுகளை, அநீதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி அரசு ஒரேயடியாக மறைத்து விட்டிருந்தது. இரா. செழியன் ஷா கமிஷன் அறிக்கையைப் புத்தகமாக ஆவணப்படுத்தாமல் விட்டிருந்தால், சுதந்திர இந்திய சரித்திரத்தின் கருப்புப் பக்கங்கள் உலகத்திற்குத் தெரியாமலே போயிருக்கும்.
"எல்லா கட்சித் தலைவர்களிடமும் நல்ல பெயரைச் சம்பாதித்த இரா. செழியன் தனக்கென்று தன்னுடைய பதவியை பயன்படுத்தி சொத்து சேர்க்கவில்லை. அவரை மாதிரியான நேர்மையாளர்கள் இன்றைக்குக் கிடைப்பது அரிது. அதேசமயத்தில் அரசியலிலும் திறமையாகப் பணியாற்றியவர். நம் நாட்டில் ஒருவரிடம் நேர்மை இருக்கும். ஆனால், திறமை இருக்காது. திறமை இருக்கும், நேர்மை இருக்காது. இந்த இரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் மிகக் குறைவு. அவர்களில் இரா. செழியனும் ஒருவர்.
அவருடைய மனதில் இருக்கும் ஆதங்கம், இப்படியே போனால் நம்முடைய நாடு என்னவாகும்? ரகளையே வழிமுறை என்றால் நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயகம் என்னவாகும்? ஊழல் அதிகரித்து நிர்வாகத் திறமை இல்லாதவர்கள் எல்லாம் பொறுப்புக்கு வந்தால், நாட்டின் நிலைமை என்னவாகும்? இவையெல்லாம்தான் அவரை வருத்தமடையவைக்கும் விஷயங்கள்.' இரா. செழியன் குறித்து "துக்ளக்' ஆசிரியர் சோ. ராமசாமி செய்திருக்கும் பதிவு இது.
அவர் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான விலைமதிக்க முடியாத புத்தகங்கள் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஒரு நூலகமாக்கப்பட்டிருக்கிறது. அவர் தினமணியிலும், வேறு பத்திரிகைகளிலும் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொகுக்கப்படுவதுடன், அவர் குறித்த ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட வேண்டும். நேர்மையாளராகவும்கூட அரசியலில் ஒருவர் செயல்பட முடியும் என்பதை வாழ்ந்து காட்டிய இரா. செழியன் போன்ற மாமனிதர்களின் மறைவின்போதுதான், அந்த ஆளுமைகளின் உயரம் புரிகிறது.
அண்ணா என்று சொன்னால் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்பது நினைவுக்கு வருவதுபோல, இரா. செழியன் என்று சொன்னால் "நேர்மை, தூய்மை, எளிமை' என்பதுதான் அவரது அடையாளமாகத் தமிழக அரசியலில் பதிவு செய்யப்படும். காவிரிக் கரையில் பிறந்த இரா. செழியன் என்கிற ஆளுமை பாலாற்றங்கரையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது சம்பவம் அல்ல, சரித்திரம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com