வாயில்லாப் பூச்சிகள்!

விவசாயிகள் நாடு தழுவிய அளவில்

விவசாயிகள் நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்ஸரியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்னை இப்போது காட்டுத் தீயாக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குப் பரவத் தொடங்கி இருக்
கிறது. கடந்த மார்ச் மாதம், காவிரி டெல்டா விவசாயிகள் தில்லியில் தங்கி ஏறத்தாழ 40 நாட்கள் போராடியபோதே, பிரச்னைகளின் முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.
இந்தப் பிரச்னையை சரியாகப் புரிந்து செயல்பட்டது உத்தரப் பிரதேசஅரசு மட்டும்தான். கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று கோடி விவசாயிகளின் ரூ.36,389 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்தச் சூழலில் ஏனைய மாநிலங்களிலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோருவதில் எப்படி தவறு காண முடியும்?
மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும், தங்களது விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்டகாலமாகவே போராடி வருகிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி, வடமாநிலங்களில் அந்தக் கட்சி அடைந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருக்கிறது என்றாலும்கூட, மொத்தப் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு வெறும் 15 விழுக்காடு மட்டுமே. இந்தியாவைப் பொருத்தவரை, விவசாயத்தையும், கிராமங்களையும் பிரிக்க முடியாது. ஐந்து ஏக்கருக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள்தான் 85 விழுக்காடு விவசாயிகள். 10 ஆண்டு
களுக்கு முன்பு 9.8 கோடியாக இருந்த சிறு விவசாயிகளின் எண்ணிக்கை இப்போது 11.7 கோடியாக அதிகரித்திருக்கிறதே தவிர, குறையவில்லை. அடுத்த இரண்டு தலைமுறைக்காவது நகர்ப்புறவாசிகளை விட கிராமப்புறவாசிகள்தான் அதிகமாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவோ, விவசாயம் சார்ந்தவர்களாகவோதான் இருப்பார்கள்.
இந்த அடிப்படைப் புள்ளிவிவரமோ, உண்மையோகூட தெரியாமல், மேலைநாட்டில் பொருளாதாரம் படித்துவிட்டு இந்தியப் பொருளாதாரத்தை வழி நடத்துபவர்கள் திட்டமிடுவதால் ஏற்படும் தவறுதான், இன்று விவசாயிகளைத் தெருவில் இறங்கிப் போராட வைத்திருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சரி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் சரி 70 விழுக்காடு விவசாயிகளை விவசாயத்திலிருந்து வேறு பிழைப்புக்கு மாற்றுவதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கருதி செயல்பட்டனர். ஆனால், அதற்கு ஏற்றாற்போல மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என்றால் இல்லை. அதுதான் இன்றைய பிரச்னைக்கே காரணம்.
முறையான நீர் மேலாண்மை இல்லாத நிலையில், விவசாயிகளால் தொடர்ந்து வேளாண்மை செய்ய முடியாத நிலைமை.
விவசாயம் பொய்க்கும்போது, மாற்று வேலைவாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வேறுவழியில்லாமல் தங்களது சிறிய நிலத்தை விற்றுவிட்டுப் பட்டணத்துக்குப் பிழைப்புத் தேடிச் செல்லும் விவசாயிகள், அங்கேயும் வேலை கிடைக்காத நிலையில் வாழ்வாதாரம் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தற்கொலைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் ஏறத்தாழ 75 விழுக்காடு தானியங்களைப் பயிரிடும் நிலங்களாகத்தான் இருக்கின்றன. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவையும், கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்களும் மிக அதிகமாகத் தண்ணீர் உறிஞ்சுபவை. இந்த விவசாயிகள் காய்கறி, பழவகைகள் பயிரிடவும், அவர்களது விளைபொருட்களைப் பாதுகாத்து விநியோகம் செய்யவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் அரசு உதவியிருந்தால், விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடும் நிலைமையே ஏற்பட்டிருக்காது.
உற்பத்தித்திறன் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஏக்கருக்கான உற்பத்தி அளவு இந்தியாவில் மிகவும் குறைவு. நீண்டகாலமாக விவசாயத்தில் ஈடுபட்டதாலும், யூரியா உள்ளிட்ட உரங்களை அதிகமாக பயன்படுத்தியதாலும் மண் வீரியம் இழந்துவிட்டிருக்கிறது. நாம் இயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தாமல் போனால், விரைவிலேயே மலட்டுத் தன்மை ஏற்பட்டாலும் வியப்பில்லை.
மேலை நாடுகளில் விவசாயம் என்பது தொழில். இந்தியாவில் விவசாயம் என்பது குடும்பங்களின் வாழ்வாதாரம். அரசு ஊழியர்களுக்கும், நிலையான வேலையில் இருப்பவர்களுக்கும் விலைவாசிக்கேற்ப ஊதிய உயர்வு தரப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்குத் தரப்பட வேண்டிய நியாயமான விலைகூடத் தரப்படுவதில்லை.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று எச்சரிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் திருப்பித் தராததால் வங்கிகளின் வாராக்கடன் அளவு ரூ.6,14,872 கோடி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com