நினைத்ததும்.. நடந்ததும்!

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவு

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2020-இல் நடக்க வேண்டிய தேர்தலை மூன்றாண்டுகள் முன்கூட்டியே நடத்துவதன் மூலம் தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் கனவு தகர்க்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில், தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான தீர்மானத்தை பிரதமர் மே முன்மொழிந்தார். அதற்கு ஆதரவாக 522 வாக்குகளும், எதிராக வெறும் 13 வாக்குகளும் விழுந்தபோது, அரசியல் சூழல் பிரதமர் மேக்கு சாதகமாக இருப்பதுபோலத் தோன்றியது. ஆனால், அது உண்மையல்ல என்று தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களில், கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களில் வெற்றிபெற்று, மிகப்பெரிய கட்சியாக முடிந்திருக்கிறதே தவிர, பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 326 இடங்கள் பெற்றாக வேண்டும் என்பதால், அமைய இருக்கும் அரசு, கூட்டணி அரசாகவோ அல்லது சிறுபான்மை அரசாகவோதான் இருக்க முடியும்.
1997-க்குப் பிறகு 69% வாக்குப் பதிவு நடந்திருக்கும் தேர்தல் இதுதான். 69% வாக்குப்பதிவு வந்தபோது, தேர்தல் முடிவுகள் பிரதமர் மேக்கு சாதகமாகவோ, எதிரானதாகவோ இருக்கும் என்றுதான் பரவலாகக் கருதப்பட்டது. சில கருத்துக் கணிப்புகள், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைமை ஏற்படக்கூடும் என்று கணித்திருந்தன. பிரதமர் மே தனக்குச் சாதகமாகத்தான் தேர்தல் முடிவுகள் அமையும் என்கிற நம்பிக்கையுடன் இருந்தார்.
2015-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தபோது, பிரிட்டன் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. பொருளாதார ரீதியான தேக்கமும், அதிகரித்து வந்த வேலையில்லாத் திண்டாட்டமும், பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் பிரச்னையும் தேர்தல் பிரச்னைகளாக இருந்தன. கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராகப் பதவி ஏற்றபோது, ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் தொடர வேண்டுமா, வேண்டாமா என்கிற கேள்வி உயர்ந்தெழுந்தது.
இப்போது பிரதமர் மே செய்ததுபோல, முந்தைய பிரதமர் டேவிட் கேமரூனும், ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடருவதா, வேண்டாமா என்கிற பிரச்னையை மக்கள் மன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவெடுப்பது என்று தீர்மானித்தார். ஐரோப்பிய யூனியனில் தொடர்வது என்கிற பிரதமர் கேமரூனின் முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அந்த முடிவுக்கு எதிராக பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். தனது முடிவுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பதவி விலகினார் டேவிட் கேமரூன். அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தியிருக்காவிட்டால், 2020 வரை அவரது அரசு பதவியில் தொடர்ந்திருக்க முடியும்.
டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர் வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெரசா மே. இவரும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்தியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்ள இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், தனது பதவியை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துப் பிரதமர் மே எடுத்த முடிவு, இப்போது அவரை மேலும் பலவீனப்படுத்தி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது மட்டுமல்ல, கன்சர்வேடிவ் கட்சியின் ஏனைய பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவையும், ஏனைய கட்சிகளுடன் ஒத்த கருத்துக்கான சாத்தியம் இல்லாமல் செய்கின்றன. பிரதமர் தெரசா மே பதவி விலக நேரிட்டால், பிரிட்டன் சரித்திரத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் மிகக்குறைந்த காலம் - வெறும் 11 மாதங்கள் மட்டுமே - பதவி வகித்த பிரதமராக அவர் இருப்பார்.
எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், தொழிலாளர் கட்சி பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனைய சிறிய கட்சிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் உள்நாட்டுப் பிரச்னைகளிலும், சர்வதேசப் பிரச்னைகளிலும் தொழிலாளர் கட்சிக்கு ஒத்த கருத்து காணப்படுகிறது.
தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், தேர்தலுக்கு முன்னால் கூட்டணி ஆட்சியை நிராகரித்திருந்தாலும், இப்போதைய சூழலில் லிபரல் டெமோக்ராடிக் கட்சி அல்லது ஐரோப்பியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அரசு அமைப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இளைஞர்கள் அதிக அளவில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க முற்பட்டதுதான் வாக்குப்பதிவு அதிகரித்ததற்குக் காரணம் என்று தெரிகிறது.
இதற்கிடையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட டெமோக்ராடிக் யூனியனிஸ்ட் கட்சி, பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவளிக்க முற்பட்டிருப்பதால் பிரதமர் மே ஆட்சியில் தொடரக்கூடும். பிரிட்டன் தேர்தல் முடிவுகள் ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. தேவையில்லாமல் தேர்தலைத் திணிப்பதை வாக்காளர்கள் விரும்புவதில்லை. பிரதமர் தெரசா மே இதைப் புரிந்து கொள்ளாமல் போனதால் பெரும்பான்மை பலத்தை இழக்க நேர்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com